யார் இந்த ருதுராஜ் கெய்க்வாட்?

Published On:

| By Kavi

விஜய் ஹசாரே டிராபி கிரிக்கெட் போட்டியில் போனவாரம் தமிழகத்தைச் சேர்ந்த ஜெகதீசன் கலக்கினார். அதன் தொடர்ச்சியாக இந்த வாரம் மஹாராஷ்டிராவைச் சேர்ந்த ருதுராஜ் கெய்க்வாட் ஒரு ஓவரில் 7 சிக்சர் அடித்து ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகத்தையும் தன் பக்கம் ஈர்த்துள்ளார்.

கத்தாரில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் கால்பந்து திருவிழாவிற்கு விளையாட்டு உலகில் இந்திய கிரிக்கெட் அணி வீரர்களின் திறமைகள் சாதனையாக மாறி வருகிறது. அதன்படி இந்தியாவில் பல்வேறு மாநிலங்களுக்கு இடையே நடந்து வரும் விஜய் ஹசாரே டிராபியில் அடுத்தடுத்து சாதனைகள் நிகழ்த்தப்பட்டு வருகின்றன.

விஜய் ஹசாரே டிராபியில் ஆந்திரா, சட்டீஸ்கர், கோவா, ஹரியானா, ஆகிய அணிகளுக்கு எதிரான அனைத்து போட்டிகளிலும் சதம் அடித்திருந்தார் தமிழக அணியைச் சேர்ந்த என்.ஜெகதீசன். அதனை தொடர்ந்து கடந்த வாரம் நடைபெற்ற அருணாச்சல பிரதேசத்திற்கு எதிரான போட்டியில் 277 ரன்கள் குவித்து தொடர்ந்து 5வது முறையாக சதமடித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

எனினும் வரும் டிசம்பரில் நடைபெற உள்ள ஐபிஎல் மினி ஏலத்தை முன்னிட்டு ஜெகதீசன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து நீக்கப்பட்டார். இது சிஎஸ்கே அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்று ரசிகர்கள் விமர்சித்து வந்தனர்.

ஆனால் அடுத்த ஒரு வாரத்திற்குள்ளாகவே அதே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள தொடக்க ஆட்டக்காரரும் மஹாராஷ்டிராவைச் சேர்ந்தவருமான ருதுராஜ் கெய்க்வாட் வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

விஜய் ஹசாரே டிராபி 2022 தொடரின் இன்றைய போட்டியில் உத்தரப் பிரதேசம் – மகாராஷ்டிரா அணிகள் மோதின. இந்த போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற உத்தரபிரதேசம் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி பேட்டிங் செய்ய களமிறங்கிய மகாராஷ்டிரா அணி, 50 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 330 ரன்கள் குவித்தது. அதிக பட்சமாக அணியின் தொடக்க வீரரும் கேப்டனுமான ருதுராஜ் கெய்க்வாட் 159 பந்தில் 220 ரன்கள் குவித்தார். லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் இது அவரது முதல் இரட்டைச் சதம் ஆகும். இதில் 16 சிக்சர்கள், 10 பவுண்டரிகள் அடங்கும்.

குறிப்பாக இந்த போட்டியில் உத்தரப் பிரதேச அணியின் சிவா சிங் வீசிய 49-வது ஓவரில் ஒரு ப்ரீ ஹிட் சிக்ஸ் உட்பட 7 சிக்ஸர்களை விளாசி கிரிக்கெட்டில் இதுவரை யாரும் படைக்காத புதிய சாதனையை ருதுராஜ் படைத்துள்ளார். இதனால் ஒரே ஓவரில் 43 ரன்கள் மகாராஷ்டிரா அணிக்கு கிடைத்தது.

மேலும் நடப்பு தொடரில் 8 ஆட்டங்களில் விளையாடியுள்ள ருத்துராஜ் 6 சதங்களை அடித்து ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் தன்பக்கம் திருப்பியுள்ளார் என்றால் அது மறுக்கமுடியாத அட்டகாசமான உண்மை.

மகாராஷ்டிரா மாநிலம் புனேவைச் சேர்ந்தவர் ருதுராஜ் கெய்க்வாட். இவர் சிறுவயது முதல் தனது அசாத்திய ஆட்டத்தால் பலரின் கவனத்தை ஈர்த்து வந்தார்.

குறிப்பாக 2016-17ஆம் ஆண்டு நடைபெற்ற விஜய் ஹசாரே தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் 3ஆவது இடம்பிடித்து அசத்தினார். அப்போது முதல் இவர் மீது அதிக வெளிச்சம் பட்டது. இந்த ஸ்டைலிஷ் மற்றும் திறமையான வீரர் யார் என்று உள்ளூர் கிரிக்கெட்டில் பிரபலமானார்.

பின்னர் இந்தியா ஏ அணிகளுக்கும் தேர்வாகி அசத்தினார். இவருக்கு 2018-19ஆம் ஆண்டு நடைபெற்ற சையத் முஸ்டாக் அலி தொடரில் சிறப்பானதாக அமைந்தது.

ஏனென்றால் இந்தத் தொடருக்கு பிறகு 2019ஆம் ஆண்டு சென்னை அணி ருதுராஜ் கெய்க்வாட்டை ஏலத்தில் எடுத்தது. எனினும் 2019ஆம் ஆண்டு தொடர் முழுவதும் சென்னை அணியில் கெய்க்வாட்டுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

இதனைத் தொடர்ந்து 2020ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் இவர் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அப்போது இவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் சில நாட்கள் பயிற்சி செய்ய முடியாமல் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார்.

உடல்நிலை சரியான பிறகு விளையாடிய முதல் 3 போட்டிகளில் சரியான ஸ்கோரை அவரால் எட்டமுடியவில்லை. நான்காவது முறையாகக் கிடைத்த வாய்ப்பை ருதுராஜ் கெய்க்வாட் சிறப்பாகப் பயன்படுத்தி அரைசதம் கடந்து அசத்தினார்.

இந்த தொடரின் மூலம் ருதுராஜ்க்கு நல்ல அடையாளம் கிடைத்தது எனினும் ஒட்டுமொத்த அணியின் பார்ம் மோசமாக இருந்ததால் சிஎஸ்கே அணி பிளேஆப் கூட தகுதி பெறாமல் வெளியேறியது.

எனினும் 2021ம் ஆண்டு சிஎஸ்கே அணி சாம்பியன் பட்டம் வென்றதில் ருதுராஜின் ருத்ரதாண்டவ ஆட்டத்தின் பங்கு முக்கியமானது. அந்த தொடரில் அதிகபட்ச ரன்கள் (635) குவித்து தொடர் நாயகன் விருது பெற்ற ருதுராஜ் அடித்து சிஎஸ்கே அசைக்க முடியாத சொத்தாக உருவெடுத்தார்.

அதன்தொடர்ச்சியாக கடந்த ஆண்டு நடைபெற்ற விஜய் ஹசாரே கோப்பை தொடரில் 5 போட்டிகளில் விளையாடி 4 போட்டிகளில் சதம் அடித்து தான் அதிரடி ஃபார்மில் இருப்பதை வெளிப்படுத்தினார்.

இதனை தொடர்ந்து இந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்ற தென்ஆப்பிரிக்க அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இந்திய அணிக்கு தேர்வானார்.

அந்த தொடரின் முதல் ஒருநாள் போட்டியில் 3வது வீரராக களமிறங்கிய ருதுராஜ் 42 பந்துகளை சந்தித்து 1 பவுண்டரியுடன் 19 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். அந்த போட்டியில் இந்திய அணியும் தோல்வியை சந்திக்க, ரசிகர்களின் கடும் விமர்சனத்துக்கு உள்ளானார்.

இந்த நிலையில் தான் தற்போது நடந்து வரும் விஜய் ஹசாரே கோப்பை தொடரில் தன்னை விமர்சனம் செய்தவர்களுக்கு அதிரடியான பேட்டிங்கால் பதில் கொடுத்து வருகிறார் இந்த மராத்தி இளஞ்சிங்கம் ருதுராஜ்.

கிறிஸ்டோபர் ஜெமா

திமுக தலைமை கழக நிர்வாகிகள் பட்டியல்: யார் யாருக்கு என்ன பொறுப்பு?

அரசு மருத்துவமனைக்குள் புகுந்த பாம்பு: நோயாளிகளின் நிலை?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share