தோனி, கோலி, ரோகித் ஆகியோரில் இந்தியாவின் சிறந்த கேப்டன் யார் என்ற கேள்விக்கு, இந்தியாவின் மூத்த வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி பதில் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பையில் அதிக விக்கெட்டுகள் (24) வீழ்த்தி சாதனை படைத்தார் முகமது ஷமி. அதன்பின்னர் கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்தியா அணியுடன் போட்டியில் பங்கேற்காமல் இருந்து வருகிறார்.
காயத்திற்கு சிகிச்சை பெற்ற ஷமி, தற்போது மீண்டு வந்து பயிற்சி மேற்கொண்டு வரும் நிலையில் நியூஸ் 18 ஆங்கில ஊடகத்திற்கு நேற்று பேட்டியளித்தார்.
அப்போது இந்தியாவின் முன்னாள் கேப்டன்களான தோனி, விராட் கோலி மற்றும் தற்போதைய கேப்டன் ரோகித் ஷர்மா குறித்து சுவாரசியமாக கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், “விராட் கோலி உலகின் சிறந்த பேட்ஸ்மேன். அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. அவர் பல சாதனைகளை முறியடித்துள்ளார்.
ஆனால் உலகின் மிகவும் ஆபத்தான பேட்டர் யார் என்று நீங்கள் என்னிடம் கேட்டால், நான் ரோகித் ஷர்மா என்று சொல்வேன்” என்று கூறினார்.
மேலும் அவர், “என்னை பொறுத்தவரை இந்தியாவின் சிறந்த கேப்டன் யார் என்றால் அது தோனி தான். டி20 உலகக் கோப்பை (2007), 50 ஓவர் உலகக் கோப்பை (2011) மற்றும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி (2013) ஆகியவற்றை வென்ற ஒரே கேப்டன் தோனி மட்டுமே.
இது அனைவருக்கும் வித்தியாசமானது. எல்லாவற்றையும் ஒப்பிட்டுப் பார்த்தால், தோனி வெற்றிகரமான கேப்டனாக இருந்தார். நான் அவருடன் தான் செல்வேன். ஏனெனில் அவர் சாதித்ததை யாராலும் மறைக்கவும் முடியாது. மறக்கவும் முடியாது ”என்று ஷமி கூறினார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
’ரேஷனில் விரல் ரேகை சரிபார்ப்பு செய்யாதவர்கள் நீக்கம்’ : உண்மை என்ன?
TANCET, CEETA தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு!