இந்தியாவில் சாதி, மதம் கடந்து அனைவரையும் ஒன்றிணைக்கும் சக்தி எதற்கு உள்ளது என்று கேட்டால் கண்ணை மூடிக் கொண்டு சொல்லலாம் அது கிரிக்கெட் தான் என்று.
நாட்டில் அறிவிக்கப்படாத மதமாக கருதப்படும் கிரிக்கெட்டில் ஒவ்வொரு காலத்திற்கும் ஒரு ஹீரோ தோன்றுவார்கள். அவர்கள் தங்களது அசாத்திய திறமையின் மூலம் மக்களின் கண்களை தங்களை நோக்கியே பார்க்கும்படி எப்போதும் வைத்திருப்பார்கள்.
அதன்படி இந்தியாவில் கிரிக்கெட் தொடங்கிய காலம் தொட்டு விஜய் ஹசாரே முதல் விராட்கோலி வரை என மைதானத்திலும், ரசிகர்களின் மனதிலும் ஹீரோக்களாய் பதிந்த பல வீரர்களை சொல்லிக்கொண்டே போகலாம்.
சச்சின், கோலி வரிசையில் கில்
அதிலும் குறிப்பாக, தங்களது அபாரமான பேட்டிங் மூலம் பல சாதனைகளை படைத்துள்ள சச்சின் மற்றும் விராட்கோலி ஆகியோர் சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் தங்களது பெயரை ஆழமாக, அழகாக பொறித்த இந்திய நட்சத்திரங்களாக கருதப்படுகின்றனர்.
அந்த வரிசையில் தற்போது மக்கள் மனதில் மெல்ல மெல்ல சிம்மாசனமிட்டு அமர்ந்து வருகிறார் இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலமும், நம்பிக்கையுமாய் உருவாகி வரும் சுப்மன் கில்.
சமீபகாலமாக ஐசிசி கிரிக்கெட் போட்டிகள் என்றாலும், ஐபிஎல் போட்டிகள் என்றாலும் உச்சக்கட்ட பார்மில் இருக்கும் பஞ்சாபைச் சேர்ந்த சுப்மன் கில்லின் சாதனைகள் இல்லாத போட்டியே இல்லை என்ற நிலை உள்ளது. இதனால் தான் சச்சின், விராட்கோலி வரிசையில் அடுத்தடுத்து சதம் கண்டு சாதனை மன்னனாக வலம் வரும் சுப்மன் கில்லை கிரிக்கெட் உலகின் அடுத்த அவதார கடவுளாக ரசிகர்கள் பார்க்க தொடங்கியுள்ளனர்.
மூன்று வயதில் கிரிக்கெட்!
1999ஆம் ஆண்டு பஞ்சாபில் உள்ள ஃபாசில்கா மாவட்டத்தில் ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்தவர் சுப்மன் கில். அவரது தந்தை லக்விந்தர் சிங் ஒரு விவசாயி என்றபோதும், சிறுவயதிலேயே கில்லுக்குள் ஒளிந்திருந்த கிரிக்கெட் ஆர்வத்தை கண்டறிந்தார்.
எனவே அவர் பயிற்சி பெற ஏதுவாக தனது வயலிலேயே ஒரு மைதானத்தை உருவாக்கினார். மேலும் கில் பயிற்சி பெறுவதற்காக கிராமத்தில் இருந்த மூத்த சிறுவர்களை வரவழைப்பார். அவர்களிடம் ’கில்லின் விக்கெட்டை யாரால் எடுக்க முடியுமோ, அவர்களுக்கு 100 ரூபாய் கொடுப்பேன்’ என்று லக்விந்தர் போட்டிகளும் நடத்தியுள்ளார். லக்விந்தரின் இந்த ஆரம்பகால பயிற்சி தான் இன்று மைதானத்தில் உலகின் சிறந்த பந்துவீச்சாளர்களுக்கும் சவால் விடும் அதிரடியான பேட்ஸ்மேனாக கில்லை மாற்றியுள்ளது.
சுப்மன் கில் வளர வளர அவர் கிரிக்கெட்டில் சாதிக்க இன்னும் சிறந்த வசதிகள் தேவை என்பதை லக்விந்தர் உணர்ந்தார். எனவே அவர் மொஹாலி நகருக்குச் சென்று கில்லை பஞ்சாப் கிரிக்கெட் சங்கத்தின் அகாடமியில் சேர்த்தார். மேலும் மகனுக்காக, கில் பயிற்சி பெறும் பிசிஏ ஸ்டேடியம் அருகே ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கி கவனித்துக்கொண்டார்.
கில் குறித்து அவர் தந்தை அளித்த ஒரு பேட்டியில், “சுப்மனுக்கு மூன்று வயதிலிருந்தே கிரிக்கெட் மீது ஆர்வம் இருந்தது. அப்போதிருந்தே அவன் கிரிக்கெட் விளையாடினான். அந்த வயது குழந்தைகள் பொம்மைகளுடன் விளையாடுவார்கள். ஆனால் கில்லுக்கு ஒரு பேட்டும், பாலுமே போதுமானதாக இருந்தது. இன்னும் சொல்லப்போனால் சிறுவயதில் கில் எப்போதும் தனது பேட், பந்துடன் தான் தூங்குவான்” என்று உணர்ச்சி பொங்க கூறியுள்ளார் லக்விந்தர்.
பாகிஸ்தானை பந்தாடிய கில்
அதனால் தான் 2014 ஆம் ஆண்டு, பஞ்சாபின் மாவட்டங்களுக்கு இடையேயான 16 வயதுக்குட்பட்டோருக்கான போட்டியில் ஆட்டமிழக்காமல் 351 ரன்கள் எடுத்தார். மேலும் தொடக்க வீரர் நிர்மல் சிங்குடன் ஜோடி சேர்ந்து 587 ரன்கள் எடுத்து சாதனை படைத்தார்.
அதனைத்தொடர்ந்து தனது 16 வயதுக்குட்பட்ட பஞ்சாப் அணிக்காக அறிமுகமான கில், விஜய் மெர்ச்சண்ட் டிராபியில் ஆட்டமிழக்காமல் இரட்டைச் சதம் அடித்து அசத்தினார்.
அதுமுதல் கிரிக்கெட் உலகின் கவனத்தை தன்பக்கம் மெல்ல மெல்ல திருப்பினார் இந்த பஞ்சாப் கில்லி. அதன்பிறகு அவரது கிரிக்கெட் கேரியரில் எங்கு திரும்பினாலும் ஜெட் வேக வளர்ச்சி தான்.
2016ஆம் ஆண்டு விஜய் ஹசாரே டிராபியில் லிஸ்ட்-ஏ அணியில் அறிமுகமான கில், 2017ஆம் ஆண்டில் நடைபெற்ற ரஞ்சி டிராபியில் பஞ்சாப் அணிக்காக முதல் தர வீரராக அறிமுகம் ஆனார்.
அதில் சிறப்பாக செயல்பட்ட கில், 2018ஆம் ஆண்டு நியூசிலாந்தில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் துணைக் கேப்டனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பாகிஸ்தானுக்கு எதிரான அரையிறுதியில் ஒரு சதம்(102) உட்பட அந்த தொடரில் 372 ரன்கள் குவித்த சுப்மன் கில் இந்திய அணி உலக்கோப்பை வெல்ல முக்கிய பங்கு வகித்தார்.
இந்த வெற்றிக்கு பிறகு அவர் அளித்த பேட்டி ஒன்றில் தனது தந்தை லக்விந்தர் குறித்து சுப்மன் கில் பேசியிருந்தார். ”அவர் எப்போதும் எனது முன்னேற்றத்தில் மிகுந்த அக்கறை கொண்டிருந்தார் . சதம் அடிப்பதோடு நின்று விடாமல், அதை விட அதிகமாய் அடிக்க முயற்சிக்க வேண்டும் என்று எப்போதும் கூறுவார்.
நான் சதம் அடிப்பதை தாண்டி களத்தில் நாட் அவுட் பேட்ஸ்மேனாக ஆடுவதை தான் என்னிடம் சிறுவயதில் இருந்து அவர் எதிர்பார்க்கிறார். அதை தான் நான் இப்போது முயற்சித்து வருகிறேன்” என்று கூறுகிறார்.
குஜராத் அணிக்காக முதல் கோப்பை!
அதனைத்தொடர்ந்து ஐபிஎல் 2018 ஆம் ஆண்டு ஏலத்தில் கொல்கத்தா அணிக்காக 1.8 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார். அந்த அணிக்காக 4 ஆண்டுகள் விளையாடினார்.
அதன்பின்னர் 2022ஆம் ஆண்டில் புதிதாக வந்த குஜராத் டைட்டன்ஸ் அணியால் 8 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டார். ஐபிஎல் தொடரில் காலடி எடுத்து வைத்த முதல் ஆண்டிலேயே குஜராத் அணி சாம்பியன் பட்டம் வெல்வதற்கு சுப்மன் கில்லின் தனித்துவமான ஆட்டம் உதவியது என்றால் மிகையல்ல.
இரட்டை சதம் அடித்த இளம் வீரர்!
இதற்கிடையே இந்திய சீனியர் கிரிக்கெட் அணிக்காக டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என அனைத்து சர்வதேச பார்மட்டுகளிலும் சுப்மன் கில் கால் பதித்தார். சர்வதேச போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடி வரும் கில் கடந்த 3 ஆண்டுகளில் இதுவரை 7 சதங்கள் உட்பட ஒட்டுமொத்தமாக 2,403 ரன்கள் குவித்துள்ளார்.
அதிலும் இந்தாண்டு ஜனவரியில் நியூசிலாந்து அணிக்கு எதிராக 149 பந்துகளில் 208 ரன்கள் குவித்து பலரின் புருவத்தையும் உயரவைத்தார் 23 வயதே ஆன சுப்மன் கில். இதன்மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டை சதத்தை பதிவு செய்த இளம் வீரர் மற்றும் ஐந்தாவது இந்தியர் என்ற அபார சாதனை படைத்தார்.
அடுத்தடுத்து சதம்… அபார சாதனை!
அதன் தொடர்ச்சியாக மார்ச் 31ஆம் தேதி தொடங்கிய நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் சாதனை மேல் சாதனை படைத்து வரும் அசுரனாக உருவெடுத்துள்ளார் சுப்மன் கில்.
குஜராத் டைட்டன்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரரான சுப்மன் கில் நடப்பு ஐபில் தொடரில் இதுவரை 3 சதங்கள் அடித்துள்ளார்.
லீக் போட்டியில் ஹைதராபாத் அணிக்கு எதிராக 101 ரன்களும், பெங்களூரு அணிக்கு எதிராக ஆட்டமிழக்காமல் 104 ரன்களும் என அடுத்தடுத்து 2 சதங்கள் அடித்து ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் தன்பக்கம் திரும்ப வைத்தார்.
அதன் தொடர்ச்சியாக நேற்று மே 26ஆம் தேதி நடைபெற்ற குவாலிபையர் 2 ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சை பஞ்சு பஞ்சாய் பவுண்டரி லைனுக்கு பறக்கவிட்டு 60 பந்துகளில் 129 ரன்கள் குவித்து அசத்தியுள்ளார்.
இதன்மூலம் விராட் கோலிக்கு பிறகு ஒரே சீசனில் 3 சதங்கள் அடித்த இரண்டாவது இந்திய வீரர் ஆனார். 49 பந்துகளில் சதத்தை எட்டிய சுப்மன் கில், 60 பந்துகளில் 7 பவுண்டரிகள் மற்றும் 10 சிக்ஸர்களுடன் 129 ரன்கள் விளாசி ஐபிஎல் பிளேஆஃப் வரலாற்றில் தனிப்பட்ட வீரரின் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்துள்ளார்.
மேலும் 2016ஆம் ஆண்டு 973 ரன்களை குவித்த கோலி மற்றும் 2022ஆம் ஆண்டு 863 ரன்கள் குவித்த ஜோஸ் பட்லர் ஆகியோருக்குப் பிறகு ஐபிஎல் சீசனில் ஒட்டுமொத்தமாக 850 ரன்களைக் கடந்த மூன்றாவது பேட்ஸ்மேன் (851*) என்ற அரிய சாதனையை கில் தன்வசமாக்கியுள்ளார்.
நடப்பு தொடரில் 3 சதங்கள், 4 அரை சதங்களுடன் 851 ரன்கள் குவித்து அதிகப்பட்ச ரன்கள் குவித்த வீரர்களுக்கு வழங்கப்படும் ஆரஞ்சு தொப்பியையும் தற்போது அவர் கைப்பற்றியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி கேப்டன்?
இப்படி ஐசிசி போட்டிகள் என்றாலும், ஐபிஎல் போட்டிகள் என்றாலும் திரும்பும் பக்கமெல்லாம் தன் சாதனைகளை செதுக்கி வைத்திருக்கிறார் இந்த சூப்பர் மேன் சுப்மன் கில். இதனால் சச்சின், விராட்கோலி உள்ளிட்ட ஜாம்பவான்கள் பலரும் ஒரு ரசிகராக அவரை வெகுவாக பாராட்டி கருத்து தெரிவித்து வருகின்றனர்.
என்னதான் அவர்களே பாராட்டினாலும், தான் இவ்வளவு தூரம் வந்ததற்கு சச்சினும், கோலியும் தான் காரணம் என்றும், இந்த இருவர் தான் சிறுவயதில் இருந்து எனது இன்ஸ்பிரேசன் கொண்டுள்ளேன் என்றும் கில் தெரிவிக்கிறார்.
ஒருமுறை அவரிடம் தொடர்ந்து சிறப்பாக பேட்டிங் செய்வதற்கான காரணம் கேட்கப்பட்டது. அதற்கு சுப்மன் கில், ”உங்களிடம் பணி நேர்மையும் மற்றும் ஒழுக்கமும் இருந்தால், அங்கு கெட்ட பழக்கங்கள் உள்ளே வராது.
ஒவ்வொரு பயிற்சி அமர்வும் முக்கியமானது. ஒவ்வொரு பயிற்சி அமர்வுக்கு முன்பும் ஏன் பயிற்சிக்கு செல்கிறேன். அதன் நோக்கம் என்ன என்பதை சிந்திப்பேன். நோக்கமுடைய பயிற்சி தான் முன்னேற்றம் தரும் என்று நான் நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், ”பேட்டிங்கில் மட்டுமல்ல எனது உணவு, உடற்பயிற்சி, டிரைவிங் என அனைத்திலுமே ’கன்சிஸ்டன்சியை’ முயற்சிப்பேன். அவை தான் என்னை களத்தில் தொடர்ந்து சிறப்பாக செயல்பட ஊக்குவிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
இந்த ஒற்றை பதில், ஏன் 23 வயதே ஆன சுப்மன் கில் இந்திய கிரிக்கெட் அணியின் எதிர்கால நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்துள்ளார் என்பதற்கான சரியான ஆதாரம்.
சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்து, கிரிக்கெட் பேட்டுடன் சிறுவயதில் உறங்கியவர். இன்று தனது விடாமுயற்சியாலும், உழைப்பாலும் இன்று தனது கனவை நனவாக்கி களத்தில் சாதனை மேல் சாதனை படைத்து வருகிறார்.
அதை விட முக்கியம் நமது கனவுகளுக்காக நேர்மையுடன் உழைத்தால் நிச்சயம் வெற்றி பெறலாம் என்பதற்கான சிறந்த உதராணமாக உருவாகியுள்ளார் இந்த ’சூப்பர் மேன்’ சுப்மன் கில்!
கிறிஸ்டோபர் ஜெமா
சரவெடி… அதிரடி… இரட்டை சதம்! : சுப்மன் கில் படைத்த சாதனைகளின் முழுப் பட்டியல்
கரூர் துணை மேயர் வீட்டுக்கு சீல்: 2வது நாளாக தொடரும் ஐ.டி. ரெய்டு!
நேரு நினைவு நாள்: மழையில் நனைந்த படி ராகுல் மரியாதை!