பெங்களூரு அணிக்கு விராட் கோலி 2013 ஆம் ஆண்டு சீசன் முதல் 2021 ஆம் ஆண்டு சீசன் வரைக்கும் கேப்டனாக இருந்தார். ஒரு முறை கூட ஐ.பி.எல் கோப்பையை வெல்லாத நிலையில் விரக்தியடைந்த விராட் கோலி தானே முன்வந்து கேப்டன் பதவியிலிருந்து விலகினார். தொடர்ந்து, கடந்த மூன்று சீசன்களாக டுப்ளெசி அந்த அணிக்கு கேப்டன் ஆனார். கடந்த சீசனில் டுப்ளெசியை ஆர்சிபி எடுக்கவில்லை. வயது அதற்கு ஒரு காரணமாக இருந்தது.
ஆனால், விராட் கோலி, ரஜத் படிதார், யாஷ் தயாள் என மூன்று வீரர்களை ஆர்சிபி அணி ஏலத்துக்கு முன்பாகவே தக்கவைத்திருந்தது. அதனால், கோலி அல்லது ரஜத் படிதார்தான் அந்த அணியின் அடுத்த கேப்டன் என எதிர்பார்ப்பாக நிலவியது. அதே போல, ரஜத் படிதார் பெங்களுரு அணிக்கு கேப்டனாக இன்று நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 2022 சீசனுக்கு முன்பாக மெகா ஏலம் நடந்த போது, எந்த அணியும் ரஜத் படிதரை சீண்டவில்லை. ஆர்சிபி அணி கூட ரஜத்தை கண்டுகொள்ளவில்லை. இதனால், அவர் ஏலம் போகவில்லை.
2022 சீசனில் பெங்களூரு அணி சிசோடியா எனும் வீரரை எடுத்திருந்தது. சிசோடியாவுக்கு காயம் ஏற்படவே அவருக்கு பதிலாக ரஜத் படிதார் உள்ளே வந்தார். கிடைத்த வாய்ப்பை ரஜத் தக்க வைத்து கொண்டார்.
லக்னோவுக்கு எதிரான ஒரு போட்டியில் அதிரடியாக ஆடி 112 ரன்களை அடித்தார். அந்த சீசனில் 330 ரன்களை எடுத்திருந்தார். இதன் காரணமாக, பெங்களூரு அணியின் நம்பிக்கை நட்சத்திரம் ஆனார். கடந்த சீசனில் 5 அரைசதங்களோடு 395 ரன்களை எடுத்திருந்தார். ஸ்ட்ரைக் ரேட்டும் 177 ஆக இருந்தது. மத்திய பிரதேச அணியின் கேப்டனாகவும் ரஜத் சிறப்பாக செயல்பட்டுள்ளார்.இதனால், ஆர்.சி.பி அணி , கேப்டனாக ரஜத் படிதார் தேர்வு செய்துள்ளது.
இதுவரைக்கும் 16 ஐ.பி.எல் சீசன் தொடர் நடந்துள்ளது. ஆர்.சி.பி அணியால் கோப்பையை வெல்லவே முடியவில்லை. விராட் கோலி கேப்டனாக்கியிருந்தால் மீண்டும் கேலிக்குள்ளாகியிருப்பார். ஆனால், இப்போது ரஜத் படிதார் பக்கம் கேப்டன் பதவி சென்று விட்டதால் விராட் தப்பி விட்டார்.