சென்னை சூப்பர் கிங்ஸ் அகாடமியில் பட்டை தீட்டப்பட்ட கமலினியை மும்பை இந்தியன்ஸ் அணி ரூ.1.60 கோடிக்கு வாங்கியுள்ளது.
கடந்த அக்டோபர் மாதத்தில் 19 வயதுக்குட்பட்ட அணிகளுக்கிடையே நடந்த டி 20 போட்டியில் தமிழ்நாடு அணி கோப்பையை தட்டி சென்றது. இதற்கு முக்கிய காரணமாக இருந்தவர்தான் இந்த கமலினி. இந்த தொடரில் மட்டும் 311 ரன்களை கமலினி குவித்திருந்தார். இடது கையில் பேட் செய்யும் இவர், அந்த தொடரில் 10 பிரமாண்ட சிக்சர்களையும் விளாசியிருந்தார். இதையடுத்து, டி 20 கிரிக்கெட்டில் கமலினி அசாத்திய திறமை கொண்டவராக அடையாளம் காணப்பட்டார். இதனால், கிரிக்கெட் உலகில் கமலினியின் சந்தை மதிப்பும் உயர்ந்தது. அதுமட்டுமல்ல , விக்கெட் கீப்பராகவும் இவர் பணி புரிவார். அதோடு, லெக் ஸ்பின்னும் வீசுவார்.
சமீபத்தில் பெண்கள் டி 20 தொடருக்கான மினி ஏலத்தில் கமலினியை வாங்க கடும் போட்டி நிலவியது. அடிப்படை விலை 10 லட்சமாக நிர்ணயித்திருந்த நிலையில் டெல்லி மற்றும் மும்பை அணிகள் அவரை வாங்க கடும் போட்டி போட்டன. இதனால் , விலை மள மளவென ஏறியது. கடைசியில் மும்பை அணி 1.60 கோடிக்கு கமலினியை ஏலம் எடுத்தது. கமலினி சென்னை சூப்பர்கிங்ஸ் அணியின் அகாடமியில்தான் பயிற்சி பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மதுரையை சேர்ந்த கமலினி குறித்து சென்னை சூப்பர்கிங்ஸ் அகாடமி இயக்குநர் லூயிஸ் மரியானோ கூறுகையில், ‘கமலினியை பொறுத்தவரை திறமை மற்றும் கடும் உழைப்பும் கொண்டவர். நெட் பயிற்சிக்கு பிறகு உடனடியாக உடற்பயிற்சிகளை எடுக்க சொல்வார். வீடியோ எடுத்து அவரின் குறைகளை கண்டறிந்து அவற்றை களை எடுத்தோம். தற்போது, சிறந்த வீராங்கனையாக உருவெடுத்துள்ளார் ‘என்கிறார்.
கமலினியின் தாயார் சரண்யா குணாளன் கூறுகையில், எனது மகள் இவ்வளவு தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது. தற்போது, மலேசியாவில் எனது மகள் இருக்கிறாள்” என்று தெரிவித்துள்ளார்.
மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, டெல்லி கேப்பிடல்ஸ் , குஜராத் ஜெயன்ட்ஸ் மற்றும் உபி வாரியர்ஸ் என மொத்தம் 5 அணிகள் பெண்கள் டி 20 தொடரில் பங்கேற்கின்றன.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
-எம்.குமரேசன்
5 கி.மீ தொலைவு ஓட்டம்… 30 விநாடியால்… ஆயுதப்படை போலீஸ் எடுத்த முடிவு!