ஐ.சி.சி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் அடுத்த ஆண்டு நடைபெறுகிறது. இந்திய அணி பாகிஸ்தான் சென்று விளையாட மறுத்து விட்டது. இதனால், இந்திய அணி ஆடும் போட்டிகள் துபாயில் தான் நடைபெறும். இந்த நிலையில், ஐசிசி தரப்பில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் பாகிஸ்தானில் இந்திய வீரர்களுக்கு பாதுகாப்பு இருக்காது என்கிற வாதம் வைக்கப்பட்டது. அதற்கு பின்னணியில் சில காரணங்கள் சொல்லப்பட்டது.
கடந்த 1989 ஆம் ஆண்டு இந்திய அணி பாகிஸ்தானுக்கு சென்றிருந்தது. அப்போது, இந்திய அணியின் கேப்டனாக ஸ்ரீகாந்த் இருந்தார். 16 வயதான சச்சின், சஞ்சய் மஞ்ரேக்கர் போன்ற இளம் வீரர்கள் இந்த தொடரில்தான் அறிமுகமானார்கள். கராச்சியில் முதல் டெஸ்ட் போட்டி நடந்தது.
இந்த போட்டியின் போது, முதல் நாளிலேயே பிட்ச்சுக்குள் புகுந்த பாகிஸ்தான் ரசிகர் ஒருவர், இந்தியாவுக்கு எதிராகவும் காஷ்மீருக்கு ஆதரவாகம் கோஷமிட்டபடி ஓடி வந்தார். கேப்டன் ஸ்ரீகாந்த் சட்டையை பிடித்து இழுத்து தாக்கவும் செய்தார். இதை பார்த்த அப்போதைய விக்கட் கீப்பர் கிரண் முரே ஓடி சென்று மிதித்து அந்த ரசிகரை கீழே தள்ளினார்.
இந்த தாக்குதலில் ஸ்ரீகாந்த் ஜெர்சி பட்டன்கள் உதிர்ந்து போயின. தொடர்ந்து, ஸ்ரீகாந்த் பெவிலியனுக்கு சென்று ஜெர்சி மாற்றி விட்டு, வந்தார். மைதானத்தில் எந்த சம்பவமும் நடக்காதது போல அந்த போட்டி அமைதியாக நடந்தது. அப்போது நடந்தது போல, இந்த காலக்கட்டத்தில் நடந்தால், இந்திய அணி தொடரையே ரத்து செய்து விடுமென்பதுதானே உண்மை.
இதே தொடரில் 3வது ஒருநாள் போட்டியின் போது, பாகிஸ்தான் அணி வீரர்கள் 28 ரன்களை எடுப்பதற்குள் முக்கிய 3 விக்கெட்டுகளை இழந்தது. இதனால், ஆத்திரம் அடைந்த ரசிகர்கள் இந்திய வீரர்களை கல்லை கொண்டு தாக்கினர். பாகிஸ்தான் அணியின் துணை கேப்டன் மியான்தத் மைதானத்துக்குள் இறங்கி ரசிகர்களை சமாதானப்படுத்தும் நிலையும் ஏற்பட்டது. எனினும், ரசிகர்களின் கொந்தளிப்பு அடங்காத நிலையில், அந்தபோட்டி கை விடப்பட்டது.
அதோடு, கடந்த 2009 ஆம் ஆண்டு லாகூர் கடாபி ஸ்டேடியம் அருகே இலங்கை வீரர்கள் சென்ற பஸ் மீது துப்பாக்கி சூடும் நடத்தப்பட்டது. இந்த சம்பவத்தில் 6 பாகிஸ்தான் போலீசார் பலியாகி போனார்கள்.
இத்தகைய சம்பவங்களை சுட்டி காட்டிதான் மத்திய அரசும் பிசிசிஐயும் எந்த காரணத்தையும் கொண்டும் இந்திய அணியை பாகிஸ்தானுக்கு அனுப்ப மாட்டோம் என்று உறுதியாக மறுத்து விட்டது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
-எம்.குமரேசன்
நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் எம்பி இருக்கையில் கட்டுக்கட்டாக பணம்!
அதானியை ஸ்டாலின் சந்திக்கவும் இல்லை, ஒப்பந்தமும் போடவில்லை – செந்தில் பாலாஜி விளக்கம்!