பார்சிலோனா அணியில் இருந்து விலகி மெஸ்ஸி பிரான்சின் பி.எஸ் ஜி அணியில் இணைந்த போது, எம்பாப்பே பொறாமைப்பட்டதாக நெய்மர் கூறியுள்ளார்.
பார்சிலோனா அணியில் இருந்து விலகிய மெஸ்ஸி கடந்த 2021 ஆம் ஆண்டு பிரான்சின் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணியில் இணைந்தார்.
அப்போது, ஏற்கனவே இந்த அணியில் இரு சூப்பர்ஸ்டார்கள் விளையாடி கொண்டிருந்தனர். ஒருவர் பிரேசிலின் நெய்மர். மற்றொருவர் பிரான்சின் இளம் வீரர் கிலியன் எம்பாப்பே. தற்போது, மெஸ்ஸி பி.எஸ்.ஜி.யில் இருந்து விலகி அமெரிக்காவில் இன்டர் மியாமி அணிக்காகவும் நெய்மர் சவுதி அரேபியாவின் அல் ஹிலால் அணிக்காகவும் விளையாடி வருகின்றனர்.
இந்நிலையில், பிரேசின் முன்னாள் ஸ்ட்ரைக்கர் ரொமாரியோவுடன் பாட் காஸ்டில் நெய்மர் பகிர்ந்து கொண்டுள்ள விஷயங்கள் அதிர்ச்சியை அளிக்கிறது. அதில், நெய்மர் கூறியிருப்பதாவது, ‘ 2017 ஆம் ஆண்டு பி.எஸ்.ஜி அணியில் நான் சேர்ந்த போது, எம்பாப்பேவுடன் நல்ல இணக்கம் இருந்தது. எனது வீட்டுக்கு வந்துள்ளார். டின்னர் சாப்பிடுவார். எங்களுக்குள் சின்ன சின்ன பிரச்சினைகள் இருந்தது. ஆனால், மெஸ்ஸி வந்ததும் அந்த பிரச்னை இன்னும் தீவிரமானது. 2013 முதல் 2017 ஆம் ஆண்டு வரை நான் பார்சிலோனாவுக்காக விளையாடிய போது,மெஸ்சியுடன் நல்ல பழக்கம் இருந்தது.
அதனால், மெஸ்சியுடன் நான் அதிக விஷயங்களை பகிர்ந்து கொள்ள ஆரம்பித்தேன். இது , இள வயது எம்பாப்பேவால் பொறுத்து கொள்ள முடியவில்லை. பொறாமை பட ஆரம்பித்தார். இதனால், டீம் ஒர்க் குறைய ஆரம்பித்தது. தனியாக கால்பந்து விளையாட முடியாது. டீம் ஒர்க் முக்கியம் . நான் சிறந்த ஆட்டக்காரனாக இருந்தாலும், எனக்கு பந்தை சப்ளை செய்வது யார்?. இந்த டீம் ஒர்க்தான் கால்பந்துக்கு தேவை. ஒவ்வொருக்குள்ளும் உள்ள தனிப்பட்ட ஈகோவை நாம் எதுவும் செய்ய முடியாது. ‘
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்