ஆசிய கோப்பை: முடிவு எப்போது? ஜெய் ஷா பதில்!

விளையாட்டு

ஆசிய கோப்பை 2023 குறித்த முடிவு ஐபிஎல் இறுதிப்போட்டியின் போது எடுக்கப்படும் என்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா இன்று (மே25) தெரிவித்துள்ளார்.

வரும் செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் போட்டியை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்த உள்ளது. இந்த போட்டியில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்க உள்ள நிலையில், இந்திய அணியை அனுப்ப இந்திய கிரிக்கெட் வாரியம் மறுத்து வருகிறது.

அரசியல் ரீதியிலான காரணங்களால் இந்திய கிரிக்கெட் வீரர்களை பாகிஸ்தானுக்கு அனுப்ப முடியாது என்று பிசிசிஐ கூறி வருகிறது.

இதனிடையே, ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் கோப்பைக்கு இந்திய அணி எங்கள் நாட்டிற்கு வரவில்லை என்றால் இந்தியாவில் நடக்கவிருக்கும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நாங்கள் புறக்கணிப்போம் என பாகிஸ்தான் ஒரு புறம் கூறி வருகிறது.

இருப்பினும், இந்தியா தொடர்ந்து பாகிஸ்தானுக்கு பயணம் செய்து விளையாட மறுத்து வந்ததால், பொதுவான இடத்திலும் சில ஆட்டங்களை நடத்த பாகிஸ்தான் முன்வந்திருக்கிறது.

இந்நிலையில், ஆசிய கோப்பை 2023 குறித்த இறுதி முடிவு ஐபிஎல் இறுதிப்போட்டியின் போது எடுக்கப்படும் என்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா இன்று (மே25) தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பேசிய அவர், “இலங்கை, வங்காள தேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளின் கிரிக்கெட் வாரியத் தலைவர்கள் ஐபிஎல் இறுதி போட்டியைக் காண குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதனத்திற்கு வருகை தருகின்றனர்.

அப்போது அவர்களுடன் கலந்தாலோசனை நடத்தி ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்பான இறுதி முடிவு எடுக்கப்படும்” என்று கூறியுள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் நஜம் சேதி காணொளி காட்சி மூலம் பங்கேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


மு.வா.ஜெகதீஸ் குமார்

’’நாடாளுமன்றத்தில் செங்கோல் தமிழர்களுக்கு பெருமை’’: தமிழிசை

கேன்ஸ் விழாவில் அசத்திய சன்னிலியோன்: வைரல் புகைப்படங்கள்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *