2023 ஒருநாள் உலகக்கோப்பை தொடரில், இந்தியா தனது 4வது போட்டியில் வங்கதேச அணியை எதிர்கொண்டது.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம், இந்திய அணியின் பந்துவீச்சுக்கு எதிராக பெரிதாக சோபிக்க முடியாததால், 50 ஓவர்கள் முடிவில், 8 விக்கெட்கள் இழப்புக்கு 256 ரன்கள் மட்டுமே சேர்த்திருந்தது.
257 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணிக்காக, ரோகித் சர்மா, சுப்மன் கில், விராட் கோலி, கே.எல்.ராகுல் என களமிறங்கிய அனைவரும் அதிரடி காட்டினர்.
இதன் காரணமாக, 42வது ஓவரிலேயே இலக்கை எட்டிய இந்தியா, 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
குறிப்பாக, விராட் கோலி, 4 சிக்ஸ், 6 பவுண்டரிகளுடன் 97 பந்துகளில் 103 ரன்கள் குவித்து அசத்தினார். இதன்மூலம், சர்வதேச ஒருநாள் போட்டிகளில் தனது 48வது சதத்தை விராட் கோலி பதிவு செய்தார்.
இந்நிலையில், இந்திய இன்னிங்ஸின், 41வது ஓவரின் 5வது பந்தில், விராட் கோலி 96 ரன்களில் பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது, சிங்கிள் எடுக்க மறுத்தார். அப்போது, மறுமுனையில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் கே.எல்.ராகுல் இருந்தார்.
ஒரு பிரிவு ரசிகர்கள் விராட் கோலியின் சதத்திற்கு பாராட்டு தெரிவித்து வந்தாலும், மறுபிரிவினர் விராட் கோலியின் இந்த செயலுக்கு கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து விளக்கம் அளித்துள்ள கே.எல்.ராகுல்,
“நான்தான் சிங்கிள் எடுக்க வேண்டாம் என மறுத்தேன்”, என தெரிவித்துள்ளார். மேலும், இதற்கு ‘சிங்கிள் எடுக்கவில்லை என்றால் மோசமாக பார்ப்பார்கள், என்னுடைய தனிப்பட்ட நலனுக்காக விளையாடுவதாக மக்கள் நினைப்பார்கள்’ என கோலி தெரிவித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதற்கு, ‘நாம் இக்கட்டான சூழலில் இல்லை. எவ்வித சிரமமும் இன்றி வெற்றி பெறலாம். நீங்கள் சதத்தை பூர்த்தி செய்யுங்கள்’, என விராட் கோலிக்கு அறிவுறுத்தியதாகவும் கே.எல்.ராகுல் கூறியுள்ளார்.
மேலும், “விராட் கோலி செய்ததில் என்ன தவறு இருக்கிறது?”, என இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், வர்ணனையாளருமான கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.
What is wrong in what virat did? I question ppl who don't understand cricket,note it is a huge deal to score A century in a world cup,@imVkohli deserves this & much more! kudos to a team man like @klrahul who deserved it against Aus in Chennai ! Enjoy when u still can #INDvsBAN
— Kris Srikkanth (@KrisSrikkanth) October 19, 2023
இது குறித்து எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
”விராட் கோலி செய்ததில் என்ன தவறு இருக்கிறது? இந்த கேள்வியை கிரிக்கெட் பற்றி புரிதல் இல்லாத ரசிகர்களிடம் முன்வைக்கிறேன்.
உலகக்கோப்பையில் சதம் விளாசுவது என்பது சாதாரண விஷயம் இல்லை. விராட் கோலி அதற்கு தகுதியானவர்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
முரளி
45 ஆயிரத்தை கடந்த தங்கம் விலை: இன்றைய நிலவரம்!