3வது டெஸ்டில் தோல்வி: நழுவும் இறுதிப்போட்டி வாய்ப்பு… இந்தியா தகுதி பெற என்ன செய்ய வேண்டும்?

விளையாட்டு

இங்கிலாந்தில் வரும் ஜூன் மாதம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி பாரம்பரியமிக்க ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடர் ரசிகர்களிடையே பெரும் கவனம் பெற்றது.

எதிர்பார்த்தது போலவே தனது சொந்த மண்ணில் ஜாம்பவனாக திகழும் இந்தியாவை வீழ்த்த முடியாமல் முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் தோல்வியை சந்தித்தது ஆஸ்திரேலியா.

நாக்பூரில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இன்னிங்கிஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்திலும், டெல்லியில் நடந்த 2வது டெஸ்ட் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்திலும் இந்தியா அபார வெற்றி பெற்றது.

இரண்டு போட்டிகளையும் மூன்று நாட்களில் முடித்த இந்திய அணி இந்தூரில் நடைபெறும் 3-வது டெஸ்ட் போட்டியிலும் வென்று உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு எளிதாக தகுதி பெறும் என்றே கருதப்பட்டது.

முதல் கோணல் முற்றிலும் கோணல்

ஆனால் கடந்த மார்ச் 1ம் தேதி இந்தூர் ஹோல்கர் மைதானத்தில் டாஸை வென்று பேட்டிங்கை தேர்வு செய்த இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது.

முதல்நாளில் 34 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 109 ரன்களுக்கு சுருண்டது இந்திய அணி. இதில் ஒரு இந்திய வீரர் கூட 25 ரன்களை தாண்டவில்லை.

அதே வேளையில் ஆஸ்திரேலியாவின் சுழற்பந்து வீச்சாளர்களான குனேமேன் மற்றும் லயன் ஜோடி 8 விக்கெட்டுகளை கைப்பற்றி இந்தியாவின் முதல் இன்னிங்ஸை முடிவுக்கு கொண்டுவந்தனர்.

2வது இன்னிங்ஸிலும் தொடர்ந்த சோகம்

அதனைத்தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்ஸில் 197 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. இதில் லபுசனே மற்றும் கவாஜா ஜோடி மட்டும் 96 ரன்களை குவித்து அணிக்கு பலம் சேர்த்தனர்.

அதனைத்தொடர்ந்து 88 ரன்கள் பின் தங்கிய நிலையில் 2-வது இன்னிஸை தொடங்கிய இந்திய அணி 163 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதில் ஆஸ்திரேலியாவின் அனுபவ வீரரான நாதன் லயன் மட்டுமே 8 விக்கெட்டுகளை சாய்த்து அதகளம் செய்தார்.

பின்னர் 3-வது நாளில் 76 ரன்களை இலக்கை துரத்தி விளையாடிய ஆஸ்திரேலியா அணி ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

what will make india to reach WTC final

இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா

இதன்மூலம் இங்கிலாந்தில் நடைபெற உள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு ஆஸ்திரேலியா முதல் அணியாக தகுதி பெற்றுள்ளது.

அதே வேளையில் கடந்த 10 ஆண்டுகளில் 3வது முறையாக தனது சொந்த மண்ணில் தோல்வியடைந்துள்ளது இந்தியா. இதனால் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுவதற்கான இந்தியாவின் வாய்ப்பு கேள்விக்குறியாகி உள்ளது.

இந்தியாவுடன் போட்டிக்கு வரும் இலங்கை

தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ள ஆஸ்திரேலிய அணி 68.52 புள்ளிகளுடன் தகுதிப் பெற்றுள்ளது. அதேவேளையில் 60.29 புள்ளிகளுடன் இருக்கும் இந்திய அணி 2-வது இடத்திலும், 53.33 புள்ளிகளுடன் இலங்கை அணி 3-வது இடத்திலும் உள்ளன.

what will make india to reach WTC final

இதனால் இறுதிப்போட்டிக்கு செல்லும் 2-வது அணிக்கான போட்டியில் இந்தியாவுடன் சேர்ந்து இலங்கைக்கும் ஒரு அதிசய வாய்ப்பு கிடைத்துள்ளது.

இந்நிலையில் டெஸ்ட் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற இந்திய அணி என்னவெல்லாம் செய்யவேண்டும் என்பதை இங்கு காண்போம்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டெஸ்டில் தோல்வியடைந்ததால் இந்தியாவுக்கு சிக்கல் எழுந்துள்ளது. இதனால் ரோஹித் ஷர்மா தலைமையிலான அணி, டெஸ்ட் இறுதிப்போட்டியில் தங்களுடைய இடத்தை உறுதிப்படுத்த 4-வது டெஸ்டில் கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும் என்பதே நிதர்சனமான உண்மை.

இந்தியா கடைசி போட்டியில் வென்றால்…

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக வரும் 9-ம் தேதி தொடங்கும் கடைசி போட்டியில் வென்று 3-1 என்ற கணக்கில் வீழ்த்தினால், இந்தியா 63 புள்ளிகள் பெற்று 2வது அணியாக இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதிபெறும்.

ஆஸ்திரேலியாவின் புள்ளிகள் 65 ஆக குறைந்தாலும், புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் நீடிக்கும்.

இதனால் நியூசிலாந்தை எதிர்கொள்ளும் இலங்கை அணி 2 டெஸ்ட் போட்டிகளிலும் வென்று ஒயிட்வாஷ் செய்து 61 புள்ளிகளை பெற்றாலும் அது இந்திய அணிக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது.

எனவே இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி போட்டியில் கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும் என்பது மிக மிக அவசியமானது.

what will make india to reach WTC final

கடைசி போட்டி டிராவில் முடிந்தால்…

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் டிராவில் முடிந்து இந்திய அணி தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றினால், நியூசிலாந்து – இலங்கை தொடர் முடிவுக்காக காத்திருக்கும் சூழ்நிலைக்கு செல்ல நேரிடும்.

டிராவில் முடிந்தால் டெஸ்ட் இறுதிப்போட்டிக்கான புள்ளிபட்டியலில் இந்தியாவின் புள்ளிகள் 59 ஆக குறையும். அப்போது நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் இலங்கை கைப்பற்றினால் இந்தியாவை விஞ்சி 61 புள்ளிகளுடன் 2வது இடத்தைப் பிடித்து அந்த அணி டெஸ்ட் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுவிடும்.

கடைசி போட்டியில் தோற்றால்…

அதே நேரத்தில் இந்திய அணி 4-வது டெஸ்டில் ஆஸ்திரேலியாவிடம் தோற்று, 2-2 என்ற கணக்கில் தொடர் சமனில் முடிந்தால் அது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.

புள்ளிப்பட்டியலில் இந்தியாவின் புள்ளிகள் 55 ஆக குறையும். அப்போது நியூசிலாந்தை 2-0 என்ற கணக்கில் வீழ்த்தினால், இலங்கை அணி டெஸ்ட் இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றுவிடும்.

இதற்கிடையே இந்தியாவிற்கு உள்ள ஒரு ஆறுதலான விஷயம் உள்ளது. அதாவது இலங்கை அணி இறுதிப்போட்டிக்கு செல்ல வேண்டுமானால் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் முழுமையாக வென்று நியூசிலாந்து அணியை கண்டிப்பாக ஒயிட்வாஷ் செய்ய வேண்டும்.

what will make india to reach WTC final

ஆனால் தங்களது சொந்த மண்ணில் பலம் வாய்ந்த அணியாக கருதப்படும் நடப்பு டெஸ்ட் சாம்பியன் நியூசிலாந்தை ஒயிட்வாஷ் செய்வது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல என்பதே உண்மை.

இலங்கை – நியூசிலாந்து தொடர் 1-0 அல்லது 1-1 என்ற கணக்கில் முடிந்தால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் 2-வது இடத்தைப் பெறுவதோ, இறுதிப்போட்டிக்கு செல்வதோ என்பதற்கு சிறிதும் வாய்ப்பில்லாத நிலையே இலங்கைக்கு ஏற்படும்.

இதற்கெல்லாம் ஒரே தீர்வாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி மற்றும் 4-வது தொடரில் வென்று இந்திய அணி கம்பீரமாக டெஸ்ட் போட்டிக்கு தகுதி பெற வேண்டும். கடந்த முறை நழுவிய கோப்பையை கைப்பற்ற வேண்டும் என்பதே ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.

கிறிஸ்டோபர் ஜெமா

வடமாநிலத்தவர்கள் மீது தாக்குதல்: அமைச்சர் சி.வெ. கணேசன் மறுப்பு!

டார்கெட் நத்தம் விசுவநாதன்: நிலக்கரி இறக்குமதியில் விஜிலென்ஸ் ’பொறி’

+1
1
+1
0
+1
0
+1
3
+1
1
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *