தோனியிடம் கற்றுக்கொண்டது: மனம் திறந்த ஸ்டீவ் ஸ்மித்

விளையாட்டு

ஐ.பி.எல் தொடரின் 16-வது சீசன் மார்ச் 31 முதல் துவங்குகிறது. இதில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் வர்ணனையாளராக செயல்பட உள்ளதாக அறிவித்துள்ளார் ஸ்டீவ் ஸ்மித்.

இந்தியாவுக்கு 3 விதமான உலகக்கோப்பைகளை வென்று கொடுத்து 4 ஐபிஎல் கோப்பைகளை வென்று மகத்தான கேப்டனாக சாதனை படைத்துள்ளவர் எம்.எஸ் தோனி, 2017 ஐ.பி.எல் தொடரில் கேப்டன்ஷிப் செய்த ஒரே வெளிநாட்டு கேப்டன் என்ற பெருமையை ஸ்டீவ் ஸ்மித் பெற்றிருந்தார்.

இந்நிலையில், பல வீரர்களை கேப்டன்ஷிப் செய்த தோனியை தான் கேப்டன்ஷிப் செய்த அனுபவம் பற்றி ஸ்டீவ் ஸ்மித் ’ஸ்டார் ஸ்போர்ட்ஸ்’ தொலைக்காட்சிக்கு நேற்று (மார்ச் 29 ) அளித்த பேட்டியில் பகிர்ந்துள்ளார்.

அதில் ஸ்டீவ் ஸ்மித் பேசியதாவது, “ தோனி தொடர்ந்து சாதிக்கும் கேப்டன்களில் ஒருவராக திகழ்கிறார். அதனால் புனே அணிக்கு என்னை கேப்டனாக நியமிக்கப் போவதாக எனக்கு அழைப்பு வந்ததும் கொஞ்சம் பயமாக இருந்தது.

ஆனால் அந்த சீசனில் தோனி அற்புதமான ஒத்துழைப்பு கொடுத்தார். தம்மால் முடிந்த வழிகளில் எனக்கு உதவி செய்த அவர் மிகச் சிறந்தவர்” என்று ஸ்டீவ் ஸ்மித் கூறியுள்ளார்.

மேலும், “அவரை போன்ற ஒருவரை கேப்டன்ஷிப் செய்தது மிகச்சிறந்த அனுபவமாகவும் அதே சமயம் சற்று பயமாகவும் இருந்தது. ஆரம்பத்தில் அவரிடம் என்ன கேட்பது என்பது எனக்கு தெரியாமல் இருந்தது.

ஏனெனில் சென்னை உட்பட தோனி விளையாடிய அனைத்து அணிகளையும் அவரே கேப்டன்ஷிப் செய்தவர். அதனால் புனே நிர்வாகம் என்னை கேப்டனாக செயல்பட கேட்ட போது எனக்கு ஆச்சரியமாகவும் என்ன சொல்வது என்று தெரியாத சூழ்நிலையையும் ஏற்படுத்தியது. அப்போது இதைப் பற்றி நீங்கள் தோனியிடம் பேசினீர்களா? என்று கேட்டேன்” என்று கூறியுள்ளார்.

“அந்த வருடத்தில் புனே அணியை வழிநடத்துவதற்கு அவர் எனக்கு உதவிய விதம் அபாரமானது. அதற்கு அவருக்கு என்னிடம் நன்றிகள் சொல்ல வார்த்தைகள் இல்லை. அந்த சீசனில் விக்கெட் கீப்பராக இருக்கும் அவருக்குத்தான் போட்டியை பற்றிய அனைத்து கோணங்களும் நன்றாக தெரியும்.

குறிப்பாக அவருடைய சொந்த ஊரான இந்திய மண்ணில் நிலவும் கால சூழ்நிலைகளை அவர் புரிந்து வைத்துள்ளார். எனவே அவரிடம் ஆலோசனைகளை பெறாமல் போனால் நான் முட்டாளாக இருப்பேன். அந்த வருடம் நாங்கள் சாதிப்பதற்கு அவர் மிகவும் உதவினார்” என்று ஸ்டீவ் ஸ்மித் தன்னுடைய அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.

மேலும், “பொதுவாக எது நடந்தாலும் அமைதியாக இருக்கும் தோனியின் பொறுமை எனக்கு மிகவும் பிடிக்கும். குறிப்பாக முக்கிய நேரங்களில் அவர் பதற்றமடைவதை பெரும்பாலும் நான் பார்த்ததில்லை.

2017இல் மட்டுமல்லாமல் ஆரம்பம் முதலே கூலாக இருக்கும் அவருடைய குணம் எனக்கு மிகவும் பிடிக்கும் என்பதால் அவரிடமிருந்து அதை நான் நிறைய கற்றுக் கொண்டுள்ளேன்” என்று கூறினார்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

அம்மா உணவகம்: அமைச்சர் நேரு முக்கிய அறிவிப்பு!

தயிர் பாக்கெட்டுகளில் இந்தி வேண்டாம் : மத்திய அரசு!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *