இந்தியாவில் ஐபில் தொடர் என்றாலே கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பரபரப்புக்கும், சலசலப்புக்கும் பஞ்சம் இருக்காது. கிரிக்கெட் வீரர்களின் ஆட்டத்தை தாண்டி, அவர்கள் பேசியதும் கூட சுட சுட செய்தியாகி விடும். சில நேரங்களில் திரித்து எழுதி சர்ச்சையாகி விடுவதும் உண்டு. அதிலும் தோனி, விராட்கோலி, ரோகித் சர்மா போன்ற முன்னணி வீரர்கள் என்றால் சொல்லவே வேண்டாம்.
அப்படி தான் கடந்த 3ம் தேதி லக்னோ அணிக்கு எதிரான போட்டி முடிந்ததும் தோனி கூறிய வார்த்தை செய்திகளில் திரித்து கூறப்பட்டுள்ளது. தொலைக்காட்சி தாண்டி பிரபல நாளிதழ்களிலும் கூட, ’மோசமாக பந்து வீசினால் வேறு கேப்டனுக்கு கீழ் விளையாட சென்னை அணி வீரர்கள் தயாராக இருக்க வேண்டும் என்றும், வேகப்பந்து வீச்சாளர்களுக்கு தோனி எச்சரிக்கை கொடுத்தார் என்றும்’ செய்தி வெளியானது.

ஆனால் உண்மையில் தோனி சொன்னது என்ன?
“They will have to bowl maybe no no-balls and less wides because we’re bowling too many extra deliveries, or they will have to be ready to play under a new captain, at some point of time (smiles). It’ll be my second warning, and I’ll be off.”
ஐபிஎல் விதி என்ன?
குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்து வீசி முடிக்கவில்லை என்றால் அணியின் தலைவருக்கு எச்சரிக்கை விடுப்பதோடு அபராதமும் விதிக்கப்படும்.
மேலும் சீசனில் ஒரு அணி 3 மூன்று முறை மெதுவாக பந்துவீசினால், அந்த அணியின் கேப்டனுக்கு ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்படும் என்பது ஐபிஎல் விதி.

பவுலர்களால் தோனிக்கு வந்த சோதனை
சென்னை அணிக்காக விளையாடி வரும் போதிய அனுபவம் இல்லாத இளம் வேகப்பந்து வீச்சாளர்களான துஷர் தேஷ்பாண்டே மற்றும் ராஜ்வர்தன் ஹேங்கர்கேகர் இருவரும் முதல் 2 போட்டிகளிலும் மொத்தமாக 11 வைடு, 7 நோ பால்கள் வீசியுள்ளனர்.
இதனால் குஜராத் மற்றும் லக்னோ அணிக்கு எதிரான முதல் இரு ஆட்டத்திலும் பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதற்காக தோனிக்கு எச்சரிக்கையும், அபராதமாக ரூ.12 லட்சமும் விதிக்கப்பட்டது.
இதனை மனதில் வைத்தே, போட்டிக்கு பிறகு தோனி பேசுகையில், ”அவர்கள் (பவுலர்கள்) நோ பால்கள் வீசாமலும், குறைவான வைடுகளையும் வீச வேண்டும். இல்லையென்றால், அவர்கள் ஒரு புதிய கேப்டனின் கீழ் விளையாடுவதற்கு தயாராக இருக்க வேண்டும்.” என்றார்
மேலும் அவர் சிரித்தபடியே, “இது எனக்கு வழங்கப்பட்ட இரண்டாவது எச்சரிக்கை. அடுத்த முறையும் இந்த தவறு நடந்தால் நான் ஒரு போட்டியில் வெளியே இருக்க நேரிடும்” என்று கூறினார்.
தோனி சொன்ன உண்மையான அர்த்தம் இது தான். ஆனால் அதிக நோபால், வைடு வீசியதால் தோனி சென்னை அணியில் இருந்து விலகுவதாக வீரர்களுக்கும், அணி நிர்வாகத்தினருக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளார் என்ற ரேஞ்சுக்கு தொலைக்காட்சி சேனல்கள் மட்டுமின்றி அச்சு ஊடகங்களிலும் செய்தி வெளியாகியுள்ளது.

சுட சுட செய்திகளை தரவேண்டும் என்ற வேகத்தில், அரைகுறையாய் ஒரு செய்தியை வெளியிடுவது எந்த விதத்தில் நியாயம். மேலும் இது போன்ற செய்திகளை எழுதும் போது நடத்தை விதிமுறைகள் குறித்தும் சொல்ல வேண்டும் என்பதும் அடிப்படை தானே!
ஒருவர் பேசியதை அப்படியே மொழிபெயர்த்து போடுவது தான் செய்தியா? அப்படியென்றால் செய்திக்கும், மொழிபெயர்ப்புக்கும் என்ன வேறுபாடு? செய்தியாளருக்கும், மொழிபெயர்ப்பாளருக்கும் என்ன வேறுபாடு? என்ற கேள்வி எழாமல் இல்லை.
கிறிஸ்டோபர் ஜெமா
”சாத்தன் வேதம் ஓதுவது போல”: பாஜகவை விமர்சித்த தங்கம் தென்னரசு
’நானும் ஒரு டெல்டாக்காரன்’-நிலக்கரி சுரங்க விவகாரத்தில் ஸ்டாலின் உறுதி!