T20 WorldCup 2022: அரையிறுதி கனவில் ஆறு அணிகள்… இனி மழைக்கு நடுவிலும் அனல் பறக்கும்!

T20 விளையாட்டு

அதிரடியாய் ஆரம்பித்த ஆஸ்திரேலியா டி20 உலகக்கோப்பை… பரபரப்புக்கு நடுவே முடிந்த பாதி போட்டிகள்… அடி சறுக்கிய பலம் வாய்ந்த அணிகள்… வெற்றி களிப்பில் சில கத்துக்குட்டி அணிகள்.. மழையால் அஸ்தமனமாகும் ஆட்டங்கள்… இதுவரை முன்னணியில் உள்ள அணிகள் எவை? அரையிறுதி வரை முன்னேறப் போகும் அணிகள் எவை? எல்லாவற்றையும் அலசி ஆராய்கிறது இந்த செய்தி தொகுப்பு!

அக்டோபர் 16 ஆம் தேதி தொடங்கிய ஆடவருக்கான 8 வது உலகக்கோப்பை டி20 போட்டிகள் ஆஸ்திரேலியாவில் பரபரப்பாக நடைபெற்று வருகின்றன. மொத்தம் 45 நாட்கள் நடைபெறும் இந்த போட்டியில் தற்போது சூப்பர்12 சுற்றில் 12 அணிகள் இரு பிரிவுகளாக மோதி வருகின்றன.

தரவரிசையின் அடிப்படையில் ஆஸ்திரேலியா, இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம், இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா ஆகிய 8 அணிகள் ஏற்கனவே சூப்பர் 12 சுற்று ஆட்டத்திற்குள் நேரடியாக இடம்பெற்றன.

மீதம் இருக்கும் நான்கு இடங்களுக்கான இடத்தினை பிடிப்பதற்காக முதல்சுற்று போட்டியில் இரு பிரிவுகளாக 8 அணிகள் மோதின.

அதன்படி நடந்த முதல் சுற்றுப்போட்டியில் வெற்றி பெற்று இலங்கை, நெதர்லாந்து, ஜிம்பாப்வே மற்றும் அயர்லாந்து ஆகிய நான்கு அணிகள் போட்டி போட்டு சூப்பர் 12 சுற்றுக்கு உள்நுழைந்தன.

இதனைதொடர்ந்து கடந்த 22ம் தேதி சூப்பர் 12 சுற்று போட்டிகள் தொடங்கின. இந்த போட்டிகள் ஆரம்பமானது முதலே நடப்பு தொடரில் யார் கோப்பையை வெல்ல வாய்ப்பு இருக்கும் என்ற பேச்சும் துவங்கிவிட்டது.

what are top 4 teams in t20 worldCup 2022

நடுங்க வைக்கும் நியூசிலாந்து!

ஏனெனில் சூப்பர் 12 சுற்றுப் போட்டிகளில் பரபரப்புக்கும் பஞ்சமிருக்காது என்று நினைத்த மாதிரி நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு இடையேயான முதல் போட்டியே அதிரிபுதிரியாக அமைந்தது. அதில் நியூசிலாந்து 89 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

டி20 உலகக்கோப்பையில் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியாவை அவர்களின் மண்ணிலேயே முதன்முறையாக வென்ற நியூசிலாந்து அணி மீது அனைவரின் பார்வையும் இயல்பாகவே திரும்பியது.

அதனை தொடர்ந்து ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டி மழையால் தடைபட்டது.

எனினும் 29ம் தேதி நடைபெற்ற இலங்கைக்கு எதிரான போட்டியில் பிலிப்ஸின் அபாரமான ஆட்டத்துடன் 65 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது நியூசிலாந்து.

இதன்மூலம் உலகக்கோப்பையில் தன்னுடன் மோதும் எதிரணியை நடுங்கவைக்கும் அணியாக உள்ள நியூசிலாந்து, தனது அரையிறுதி வாய்ப்பை ஏறக்குறைய உறுதி செய்துவிட்டது.

what are top 4 teams in t20 worldCup 2022

தெறிக்கவிடும் தென்னாப்பிரிக்கா!

குரூப் 2 பிரிவில் இந்திய அணிக்கு போட்டியாக புள்ளிப்பட்டியலில் 2 வெற்றிகளுடன் முதல் இடத்தில் உள்ளது தென்னாப்பிரிக்கா அணி.

இதன்மூலம் ‘உலகக்கோப்பை போட்டிகளில் விதிமேல் பழிபோட்டு விளையாடிய கூட்டம் நாங்கள் அல்ல. நாங்கள் வேற மாதிரி’ என்று கர்ஜித்துள்ளது தென்னாப்பிரிக்கா.

அதற்கு உதாரணமாக அந்த அணியின் மூன்று ஆட்டங்களையும் குறிப்பிடலாம். ஏனெனில் முதல் போட்டியில் ஜிம்பாப்வே அணியை சந்தித்த தென்னாப்பிரிக்கா, வெற்றிக்கு 13 ரன்களே தேவைப்பட்ட நிலையில் குறுக்கே வந்த மழை அதனை தட்டிப்பறித்துச் சென்றது.

எனினும் அந்த ஆட்டத்தில் குயிண்டன் டி காக்கின் ருத்ரதாண்டவ ஆட்டம் இன்னும் பலருக்கு பரவசத்தை அளித்தது.

அதே நேரத்தில் இரண்டாவது ஆட்டத்தில் பங்காளதேஷை சந்தித்த தென்னாப்பிரிக்கா அணி, மழையால் தடைப்பட்ட முதல் ஆட்டத்திற்கும் சேர்த்து அதிரடி ஆட்டத்தால் கிரிக்கெட் ரசிகர்களை திணறடித்தது.

அதிலும் இந்த உலகக்கோப்பையில் முதல் சதத்தை பதிவு செய்த ரூசோ (109) மற்றும் டி காக்கின்(63) ஆட்டம் தென்னாப்பிரிக்க ரசிகர்களே எதிர்பார்த்திடாத அசுர ஆட்டம் தான்.

அதனை தொடர்ந்து 30ம் தேதி இந்தியாவை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய தென்னாப்பிரிக்கா வீரர்களிடம், இறுதிப்போட்டிக்கு சென்று முதல் முறையாக கோப்பையை முத்தமிட வேண்டும் என்ற அவர்களின் பல ஆண்டு கனவு அப்பட்டமாக தெரிந்தது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

what are top 4 teams in t20 worldCup 2022

இயற்கையால் இடர்படும் இங்கிலாந்து!

அக்டோபர் 22ம் தேதி நடைபெற்ற சூப்பர் 12 சுற்று ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்று சூப்பராக உலகக்கோப்பையை தொடங்கியது இங்கிலாந்து.

எனினும் 26ம் தேதி இரண்டாவது சக ஐரோப்பிய அணியான அயர்லாந்தை எதிர்கொண்ட இங்கிலாந்திற்கு எமனாக வந்தது மழை. இதனால் டக்வொர்த் லீவிஸ் முறைப்படி 5 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது இங்கிலாந்து.

உண்மையில் அன்றைக்கு இங்கிலாந்தை விட சிறப்பாகவே ஆடியது அயர்லாந்து. கத்துக்குட்டி அணியாக கருதினாலும் இங்கிலாந்தின் முன்னணி பேட்ஸ்மேன்களை சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க செய்து கதறவிட்டது என்பது தனிக்கதை.

சரி, அடுத்து வந்த ஆஸ்திரேலியாவை சாய்த்து ரேசில் நாங்கள் ரோசத்தோடு இன்னும் இருக்கிறோம் என்று காட்டலாமென்று பார்த்தால் இங்கிலாந்து அணியின் கனவை முற்றிலுமாய் சிதைத்துவிட்டது பேய் மழை.

எனினும் குரூப் 2வில் இடம்பெற்ற இங்கிலாந்து 3 புள்ளிகளுடன் 2ம் இடத்தில் உள்ளதால் அதன் அரையிறுதி கனவு இன்னும் உயிருடன்தான் இருக்கிறது என்பது அந்த அணிக்கு ஆறுதல்.

what are top 4 teams in t20 worldCup 2022

இறுதிவரை உறுதியுடன் போராடும் இந்தியா!

சூப்பர் 12 சுற்றில் இதுவரை நடந்த மூன்று போட்டிகளில் 2ல் வென்று முழுதாக 4 புள்ளிகளை பெற்று 2வது இடத்தில் உள்ளது இந்திய அணி.

23ம் தேதி நடந்த முதல் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொண்டது இந்தியா. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற்ற அந்த போட்டி, யாராலும் எளிதில் மறக்கமுடியாத ஆட்டமாக மாறியது.

அதிலும் குறிப்பாக ஆட்ட நாயகன் விராட் கோலியின் கிளாசிக் ஆட்டம், அர்ஷ்தீப் சிங்கின் அபார பந்து வீச்சு, விடாப்பிடியாய் நின்று வெற்றிக்கு அருகில் அணியை நிறுத்திச் சென்ற ஹர்திக் என்று இந்தியாவின் வெற்றிகரமான இன்னிங்ஸ்சை மெல்போர்ன் கிரிக்கெட் ஸ்டேடியம் என்றைக்கும் மறக்காது.

அதனை தொடர்ந்து 27ம் தேதி நடைபெற்ற நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் பல்வேறு சாதனைகளுடன் வெற்றி பெற்றது இந்தியா.

இதன்மூலம் ஏறக்குறைய அரையிறுதி போட்டியில் இந்தியா ஒரு காலை வைத்து விட்டது என்று நினைத்த வேளையில், 30ம் தேதி நடைபெற்ற தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியில் தோற்றது.

இதனால் இந்தியாவிற்கு மிகப்பெரிய பாதிப்பில்லை என்றாலும், புள்ளிப்பட்டியலில் தனக்கு அடுத்து இருக்கும் பங்காளதேஷையும், ஜிம்பாவேயையும் மிகப்பெரும் வித்தியாசத்தில் தோற்கடிக்க வேண்டும் என்ற நெருக்கடிக்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளது.

what are top 4 teams in t20 worldCup 2022

பந்தயத்தில் நடப்பு சாம்பியன்!

சொந்த நாட்டில் நடக்கும் உலகக்கோப்பையில் நியூசிலாந்த்துக்கு எதிராக முதல் போட்டியிலேயே மண்ணை கவ்வினாலும், இலங்கை அணிக்கு எதிரான 2வது போட்டியில் வெகுண்டெழுந்து வெற்றிகண்டது நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா.

இலங்கை வீரரான பதும் நிசன்காவும், அசலான்காவும் நன்றாக ஆடினாலும், அந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் மார்க்கஸ் ஸ்டோனிஸ் ஆடிய ஆட்டத்தால் பெர்த் மைதானமே ஆடிப்போய்விட்டது. மேலும் அணிக்கு வெற்றியையும் பெற்றுத் தந்து கெத்துக் காட்டினார் ஸ்டோனிஸ்.

இதன்மூலம் கோப்பையை வெல்லும் பந்தயத்தில் மண்ணின் மைந்தர்கள் நாங்களும் இருக்கிறோம் என்பதனை சுட்டிக்காட்டியுள்ளது ஆஸ்திரேலிய அணி.

எனினும் இங்கிலாந்துக்கு எதிரான போட்டி மழையால் கைவிடப்பட புள்ளிப்பட்டியலில் அயர்லாந்து அணிக்கும் பின்னால் 4வது இடத்தில் உள்ளது ஆஸ்திரேலியா.

what are top 4 teams in t20 worldCup 2022

பரிதாப நிலையில் பாகிஸ்தான்!

நடப்பாண்டு உலகக்கோப்பையில் கோப்பையை வெல்லும் அணிகளுள் ஒன்றாக கருதப்பட்டது பாகிஸ்தான்.

ஏனெனில் கிரிக்கெட் உலகில் மிகச்சிறந்த பேட்ஸ்மேன்களான பாபர் அசாம், முகமது ரிஸ்வான், ஷஹீன் அப்ரிடி, ஹரிஸ் ராஃப் ஆகிய சிறந்த பந்துவீச்சாளர்களை கொண்ட அணி என பலவாறு டாப் அணியாக கணிக்கப்பட்டது.

ஆனால் நினைத்தற்கு முற்றிலும் மாறாக மேலே குறிப்பிடப்பட்டவர்களில் ஒருவர்கூட இந்த உலகக்கோப்பை தொடரில் ஜொலிக்கவில்லை. மேலும் இவர்களின் பொறுப்பற்ற ஆட்டம் காரணமாக தொடரில் இருந்து பாகிஸ்தான் அணி வெளியேறும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளிடம் தோல்வியை தழுவிய பாகிஸ்தான் பெரும் பின்னடவை சந்தித்துள்ளது.

அதே வேளையில் நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதன் மூலம் பாகிஸ்தானுக்கு புதிய நம்பிக்கை ஒளி ஏற்பட்டுள்ளது.

எனினும் மீதமுள்ள 2 ஆட்டங்களில் தனது மிகச்சிறப்பான ஆட்டத்தை கொடுத்தாலும், மற்ற அணிகளின் நிலையை பொறுத்தே பாகிஸ்தானுக்கு அரையிறுதி வாய்ப்பு உள்ளது.

what are top 4 teams in t20 worldCup 2022

இறுதி இடத்திற்கு தள்ளப்பட்ட இலங்கை?

சமீபத்தில் ஆசியக்கோப்பையை அசாதாரணமாய் வென்ற இலங்கை அணியின் மீது எதிர்பார்ப்பு இருந்தது. அதனை உண்மையாக மாற்ற ஓவல் மைதானத்தில் அயர்லாந்து எதிராக நடைபெற்ற முதல் போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

எனினும் 25ம் தேதி ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

அதனை தொடர்ந்து நியூசிலாந்துக்கு எதிரான தோல்வி அந்த அணியை புள்ளிப்பட்டியலில் இலங்கை அணியை அதளபாதாளத்திற்கு தள்ளியுள்ளது. இதன்மூலம் அந்த அணியின் அரையிறுதி வாய்ப்பு ஏறக்குறைய முடிந்தே விட்டது என்று கூறலாம்.

புள்ளிப்பட்டியலும்… அணிகளின் நிலவரமும்

சூப்பர் 12 சுற்றில் 12 அணிகள் உள்ள நிலையில் 6 அணிகள் கொண்ட இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.

குரூப் 1 பட்டியல்!

அதன்படி குரூப் 1 பட்டியலில் 6 அணிகளில் 5 புள்ளிகளுடன் ரன்ரேட் அடிப்படையில் நியூசிலாந்து முதலிடத்தில் உள்ளது.

அதனை தொடர்ந்து 3 புள்ளிகளுடன் இங்கிலாந்து, அயர்லாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் முறையே 2, 3, 4 இடங்களில் உள்ளன.

ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் 2 புள்ளிகளுடன் கடைசி இரு இடங்களில் பின் தங்கியுள்ளன.

இந்த பிரிவில் இலங்கை தவிர்த்து மற்ற எல்லா அணிகளும் மழையால் பாதிக்கப்பட்டுள்ளன.

அதிலும் ஆப்கானிஸ்தான் விளையாட வேண்டிய மூன்று போட்டிகளில் இரண்டு ஆட்டங்கள் மழையின் காரணமாக முழுமையாக கைவிடப்பட்டது.

அதனால் அந்த அணி வெற்றி பெறாமலேயே ஆட்டம் மழையால் கைவிடப்பட்டதன் காரணமாக 2 புள்ளிகளை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

குரூப் 2 பட்டியல்!

குரூப் 2 பட்டியலில் மோதிய மூன்று போட்டிகளில் 2ல் வெற்றி பெற்று தென்னாப்பிரிக்கா 5 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.

அதனை தொடர்ந்து இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகள் 4 புள்ளிகளுடன் 2, 3 இடங்களில் உள்ளன.

ஜிம்பாப்வே அணி 3 புள்ளிகளுடன் 4வது இடத்தில் உள்ளது.

பாகிஸ்தான் அணி 2 புள்ளிகளுடன் 5வது இடத்திலும், நெதர்லாந்து ஒரு வெற்றியைக்கூட பெறாததால் புள்ளிகள் இன்றி கடைசி இடத்திலும் உள்ளன.

குரூப் 2ல் இதுவரை தென்னாப்பிரிக்கா மற்றும் ஜிம்பாப்வே அணிகள் விளையாடிய ஆட்டம் மட்டுமே மழையால் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

what are top 4 teams in t20 worldCup 2022

அரையிறுதியில் நுழையப்போவது யார்?

உலகக்கோப்பையில் பாதி ஆட்டங்கள் மட்டுமே முடிவுற்ற நிலையில் அரையிறுதிக்கு செல்லும் நான்கு அணிகளை குறிப்பிடுவது கடினம்தான்.

எனினும், அணியின் இதுவரையிலான வெற்றி, புள்ளிகள், ரன்ரேட், வீரர்களின் பங்களிப்பு, அணியின் ஒட்டுமொத்த திறன், மீதமுள்ள போட்டிகள் ஆகியவற்றின் அடிப்படையில் அதனை கணிக்க முடியும்.

அதன்படி, குரூப் 1ல் இருந்து நியூசிலாந்து மற்றும் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் அரையிறுதி போட்டிக்கும் செல்ல அதிக வாய்ப்புள்ளது.

குரூப் 2ல் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் அரையிறுதி போட்டிக்கு செல்ல அதிக வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

what are top 4 teams in t20 worldCup 2022

ஆட்டத்தை தீர்மானிக்கும் மழை!

என்னதான் அணிகள் கோப்பையைக் கைப்பற்ற ஒவ்வொரு அணியும் பெரும் தயாரிப்புடனும், ஆவலுடனும் இருந்தாலும் அவற்றின் வெற்றியை உறுதி செய்யும் முக்கியப் பொறுப்பை வானிலையே பெற்றுள்ளது.

ஆஸ்திரேலியாவில் பெய்து வரும் மழை காரணமாக முக்கியமான சூப்பர் 12 சுற்றில் இதுவரை 5 ஆட்டங்கள் தடைப்பட்டுள்ளன.

அதில் 3 ஆட்டங்கள் டாஸ் போடாமலே முழுமையாக கைவிடப்பட்டுள்ளன. ஒரு ஆட்டம் வெற்றிக்கு மிக அருகில் வந்து கைவிடப்பட்டுள்ளது.

இதனால் ஒரு அணி அரையிறுதி செல்வதற்கு, புள்ளிகளுடன் ரன்ரேட்டும் முக்கிய பங்கு வகிக்கும்.

12 அணிகளும் சூப்பர் 12 சுற்றில் தலா 3 ஆட்டங்களில் மோதியுள்ளன. இனி 2 ஆட்டங்கள் மட்டுமே மீதமுள்ள நிலையில், அரையிறுதிக்கு தகுதிபெற ஒவ்வொரு அணியும் கடுமையாக போராடும்.

எனவே, ஆஸ்திரேலியாவில் மழை பெய்து குளிர்வித்தாலும், இனி வரும் அனைத்து ஆட்டங்களிலும் அனல் பறக்கும் என்பதை நிச்சயம் நம்பலாம்!

கிறிஸ்டோபர் ஜெமா

குஜராத் பாலம் விபத்து: பலி எண்ணிக்கை 140ஐ தாண்டியது!

கோவையில் அண்ணாமலை : நிகழ்ச்சியில் பங்கேற்காத முக்கிய நிர்வாகிகள்!

+1
0
+1
1
+1
0
+1
1
+1
0
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *