Shane dowrich announces retirement
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக, தன்னுடைய 32 வயதிலேயே மேற்கிந்திய தீவுகள் அணியை சேர்ந்த கிரிக்கெட் வீரர் ஷேன் டவ்ரிச் அறிவித்துள்ளார்.
ஒரு காலத்தில் பயங்கரமாக விளையாடி பிற நாடுகளின் கிரிக்கெட் அணிகளுக்கு கடும் சவாலை அளித்த மேற்கிந்திய தீவுகள் அணி தற்போது தொடர்ந்து தடுமாறி வருகிறது. இதனால் இந்தியா நடத்திய உலகக்கோப்பை (2023) தொடருக்கும் அந்த அணியால் தகுதி பெற முடியவில்லை.
தற்போது அந்த அணி தன்னுடைய சொந்த மண்ணில் இங்கிலாந்துக்கு எதிராக 3 ஒருநாள் போட்டிகள், 5 டி20 போட்டிகளில் விளையாட இருக்கிறது.
இதில் ஒருநாள் தொடரில் விளையாடும் வீரர்களின் பட்டியலில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ஷேன் டவ்ரிச் பெயரும் இடம்பெற்று இருந்தது.
முதல் ஒருநாள் போட்டி நாளை மறுநாள் (டிசம்பர் 3) தொடங்கவுள்ளது. இந்த நிலையில் ஷேன் டவ்ரிச் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக திடீரென அறிவித்துள்ளார்.
இந்த தகவலை நேற்று (நவம்பர் 30) மேற்கிந்திய கிரிக்கெட் வாரியம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
எனினும் தன்னுடைய ஓய்வுக்கான காரணம் குறித்து டவ்ரிச் காரணம் எதுவும் தெரிவிக்கவில்லை.இது மேற்கிந்திய தீவுகள் அணியின் கிரிக்கெட் வட்டாரங்களில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
ஷேன் டவ்ரிச் கடந்த 2015-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் கால் பதித்தார்.
இதுவரை 35 டெஸ்ட் போட்டிகளில் ஆடிய டவ்ரிச் ஒரே ஒரு ஒருநாள் போட்டியில் மட்டுமே விளையாடி இருக்கிறார். கடைசியாக டவ்ரிச் நியூசிலாந்து அணிக்கு எதிராக 2020-ம் ஆண்டு டிசம்பரில் விளையாடி இருந்தார். பேட்ஸ்மேனாக 1570 ரன்களை எடுத்திருக்கும் டவ்ரிச் விக்கெட் கீப்பராக 85 கேட்சுகளை பிடித்துள்ளார்.
டவ்ரிச் ஓய்வு முடிவை அறிவித்தாலும் கூட மேற்கிந்திய தீவுகள் அணி அவருக்கு பதிலாக மாற்று வீரரை இன்னும் அறிவிக்கவில்லை. அடுத்த ஆண்டு (2024) நடைபெறவுள்ள ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரை அமெரிக்காவுடன் இணைந்து மேற்கிந்திய தீவுகள் அணி நடத்தவுள்ளது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
-மஞ்சுளா
’டன்கி Drop 3’: ஷாருக்கானின் எமோஷனல் பாடல் ரிலீஸ்!
முதல்வரின் நிகழ்ச்சிகள் 3 நாட்கள் ஒத்திவைப்பு?
Shane dowrich announces retirement