ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு தகுதி பெறும் வாய்ப்பை முன்னாள் சாம்பியனான வெஸ்ட் இண்டீஸ் அணி முதன்முறையாக இழந்துள்ளது.
வரும் அக்டோபர் மாதம் தேதி தொடங்கி நவம்பர் வரை 13 வது உலகக்கோப்பை ஒரு நாள் போட்டிக்கான கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற உள்ளது.
இதில் உலகின் டாப் 10 கிரிக்கெட் அணிகள் மோதுகின்றன. அதன்படி மொத்தம் 48 போட்டிகள் நடைபெற உள்ளன.
இந்த தொடரில் பங்குபெறுவதற்கான தகுதியை ஏற்கெனவே இந்தியா, ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பங்களாதேஷ், நியூசிலாந்து, பாகிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் பெற்றுவிட்டன.
மீதமுள்ள இரண்டு அணிகளை தேர்ந்தெடுப்பதற்கான உலகக்கோப்பை தகுதிச்சுற்று போட்டிகள் ஜிம்பாப்வேயில் நடைபெற்று வருகின்றன.
இதில் மொத்தம் 10 அணிகள் கலந்து கொண்டன. அதன்படி ஜிம்பாப்வே, ஸ்காட்லாந்து, நெதர்லாந்து, வெஸ்ட் இண்டீஸ், ஓமன், இலங்கை ஆகிய 6 அணிகள் சூப்பர் 6 சுற்றுக்கு முன்னேறின.
அதன்படி, இன்று (ஜூலை 1) நடைபெற்ற போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் மோதின.
இதில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 43.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 181 ரன்கள் மட்டுமே எடுத்தது.
பின்னர் 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஸ்காட்லாந்து அணி விளையாடியது.
அதன்படி அந்த அணியின் தொடக்க வீரர்களான கிறிஸ்டோபர் மெக்பிரைட், மேத்யூ க்ராஸ் ஆகியோர் களமிறங்கினர்.
கிறிஸ்டோபர் மெக்பிரைட் ரன் ஏதும் எடுக்காமல் நடையைக்கட்டினார். பின்னர் வந்த பிரண்டன் மெக்முல்லன் , மேத்யூ க்ராஸ் உடன் பார்ட்னர் ஷிப் அமைத்து சிறப்பாக விளையாடினார்.
ஆட்ட முடிவில் ஸ்காட்லாந்து அணி 43.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 185 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் ஸ்காட்லாந்து அணி உலகக்கோப்பையில் தகுதி பெறுவதற்கான வாய்ப்பில் நீடிக்கிறது.
அதே நேரம் முன்னாள் உலககோப்பை சாம்பியனான வெஸ்ட் இண்டீஸ் அணி இந்த தோல்வியின் மூலம் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்கான தகுதியை முதன்முறையாக இழந்துள்ளது அந்நாட்டு ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
70களில் ஆதிக்க அணியாக வலம் வெஸ்ட் இண்டீஸ் அணி 1975 மற்றும் 1979 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற உலககோப்பை ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்றது குறிப்பிடத்தக்கது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
ராகுல்காந்திக்கு மணிப்பூர் பாஜக தலைவர் பாராட்டு!
இப்படி ஒரு பிரியாணி காதலனா! ஸ்விக்கி வெளியிட்ட சூடான தகவல்!