டி20 கிரிக்கெட்டில் பேட்டர்கள் இரட்டைச் சதம் அடிப்பதும் சர்வசாதாரணமாகி வருகிறது.
ஒருகாலத்தில் ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டைச் சதம் அடிப்பதே எல்லா பேட்டர்களுக்கும் கனவாக இருந்தது.
ஆனால், உலகிலேயே முதன்முறையாக அந்தச் சாதனையை 2010ல் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இந்திய ரன் மெஷின் என்றழைக்கப்படும்,
சச்சின் டெண்டுல்கர் நிகழ்த்திக் காட்டியதற்குப் பிறகு, இன்று பலரும் ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டைச் சதம் அடித்துவருகின்றனர்.
அந்த வரிசையில் முதல் இடத்தில் இருப்பவர் தற்போதைய இந்திய அணியின் கேப்டனான ரோகித் சர்மா. அவர், இதுவரை மூன்று முறை இரட்டைச் சதம் அடித்து சாதனை படைத்துள்ளார்.
அந்தவகையில், ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டைச் சதம் அடித்த காலம்போய், இன்று டி20 கிரிக்கெட்டில் இரட்டைச் சதம் அடிக்கும் நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன.
அமெரிக்காவில் நடைபெற்று வரும் அட்லாண்டா ஓபன் என்கிற டி20 போட்டியில் பங்கேற்ற பிரபல மேற்கு இந்திய தீவுகள் அணியின் ஆல்ரவுண்டரான ரஹீம் கார்ன்வெல், இரட்டைச் சதமெடுத்து வரலாறு படைத்துள்ளார்.
அவர் அட்லாண்டா ஃபயர் அணிக்காக 77 பந்துகளில் 22 சிக்ஸர்கள் மற்றும் 17 பவுண்டரிகளுடன் 205 ரன்கள் எடுத்து இறுதிவரை அவுட்டாகாமல் களத்தில் நின்றார்.
இதனால், அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 266.23 ஆக பதிவானது. இது, அவருடைய சிறந்த இன்னிங்ஸாகப் பார்க்கப்படுகிறது.
அவருடைய இரட்டைச் சதத்தால் அந்த அணி 20 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 326 ரன்கள் எடுத்தது.
ஆனால், பின்னர் இந்த பெரிய இலக்கை கொண்டு விளையாடிய ஸ்கொயர் டிரைவ் அணியால் 154 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதையடுத்து, அவ்வணி, 172 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றது.
29 வயதான ரஹீம் கார்ன்வெல் மேற்கு இந்திய தீவுகள் அணிக்காக 9 டெஸ்டுகளில் விளையாடியுள்ளார். இதுவரை டெஸ்ட் போட்டிகளில் 238 ரன்களை எடுத்திருக்கும் அவர், அதிகபட்சமாக 73 ரன்கள் எடுத்துள்ளார்.
மேலும் இப்போட்டிகளில் 34 விக்கெட்டுகளையும் அறுவடை செய்துள்ளார். டி20 கிரிக்கெட்டைப் பொறுத்தவரை ரஹீம் 147.49 ஸ்ட்ரைக் ரேட்டைக் கொண்டுள்ளார்.
ரஹீம் இந்த இரட்டைச் சதத்தை எடுப்பதற்கு முன்னால் 5 அரைசதங்களை டி20 போட்டியில் எடுத்துள்ளார்.
ரஹீம் இரட்டைச் சதம் அடித்திருந்தாலும், இது ஐசிசியால் அங்கீகரிக்கப்படாத போட்டி என்பதால் அவரது சாதனை பட்டியலில் இடம்பெறாது. இருப்பினும், டி20 கிரிக்கெட்டில் ஒரு பேட்டர் இரட்டைச் சதம் அடிப்பது என்பது இது முதல் முறை அல்ல.
டெல்லியைச் சேர்ந்த சுபோத் என்ற வீரர், பாடி கிளப் டி20 போட்டியில் இரட்டை சதம் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றார்.
அவர் 79 பந்துகளில் 205 ரன்கள் எடுத்து இறுதிவரை களத்தில் நின்றார். அதேநேரத்தில் டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்களை எடுத்தவராக கிறிஸ் கெயில் தொடர்ந்து நீடிக்கிறார்.
2013ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் கெய்ல், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக விளையாடி 175 ரன்கள் எடுத்திருந்தார்.
அதுபோல், 2018 முத்தரப்பு தொடரில் ஜிம்பாப்வேக்கு எதிராக ஆஸ்திரேலிய வீரர் ஆரோன் ஃபின்ச் 172 ரன்கள் எடுத்ததே அதிகபட்ச டி20 ஸ்கோர் ஆகும்.
ஜெ.பிரகாஷ்
டி20 தரவரிசை: சூர்யகுமார் யாதவ் பின்னடைவு!
சசி தரூர் சென்னை வருகை: ஆள் திரட்டும் கார்த்தி சிதம்பரம்