காமென்வெல்த்: ஒரு கிலோவில் தங்கத்தை இழந்த மகாதேவ்!

Published On:

| By srinivasan

காமென்வெல்த் பளுதூக்கும் போட்டியில் இந்திய வீரர் சங்கேத் மகாதேவ் வெள்ளி பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

பர்மிங்ஹாம் நகரில் 22-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நேற்று முன்தினம் இரவு உற்சாகமாக தொடங்கின. கண்கவர் கலை நிகழ்ச்சிகள், அணிவகுப்புடன் உற்சாகமாக விழா தொடங்கியது.

22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் மொத்தம் 20 விளையாட்டுகளில் 280 பந்தயங்கள் நடத்தப்பட உள்ளன.

இதில் இந்தியா, பிரிட்டன், ஆஸ்திரேலியா உள்பட 72 நாடுகளை சேர்ந்த 5,054 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் பங்கேற்று உள்ளனர். இந்திய அணியின் சார்பாக 215 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

இந்த நிலையில் 22-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு முதல் பதக்கம் கிடைத்துள்ளது.

பளுதூக்கும் போட்டியில் 55 கிலோ எடை பிரிவில் இந்திய வீரர் சங்கேத் மகாதேவ் சர்கார் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார்.

55 கிலோ எடை பிரிவில் பங்கேற்ற 21 வயதான சங்கேத் மகாதேவ் சர்கார் 248 கிலோ எடையை தூக்கி (113+135) வெள்ளி பதக்கம் பெற்றுள்ளார்.

மலேசியாவை சேர்ந்த பின் கஸ்டன் முகமது அனிக் மொத்தமாக 249 கிலோ (107+142) தூக்கி தங்கப் பதக்கத்தை வென்றார்.

ஒரு கிலோவில் தங்க பதக்கத்தை வெல்லும் வாய்ப்பை இழந்தாலும் இளம் வயதில் காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற சங்கேத் மகாதேவ்க்கு பிரதமர் நரேந்திர மோடி உட்பட பல்வேறு பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

  • க.சீனிவாசன்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel