கோகைன் போதைக்கு அடிமையான வாசிம் அக்ரம்
பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு கோகைன் போதைப் பொருளுக்கு அடிமையாகி இருந்ததாக தெரிவித்துள்ளார்.
’தி டைம்ஸ்’ பத்திரிகைக்கு வாசிம் அக்ரம் அளித்துள்ள பேட்டியில், “விரைவில் வெளிவரவிருக்கும் எனது புதிய சுய சரிதை நூலில் போதைப் பொருளுக்கு அடிமையானது குறித்து தெரிவித்துள்ளேன்.
2003-ஆம் ஆண்டில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு தொலைக்காட்சிகளில் வர்ணனையாளராக இருந்தபோது கோகைன் பயன்படுத்த ஆரம்பித்தேன். தெற்கு ஆசியாவில் கோகைன் பயன்படுத்துவது கவர்ச்சியாக இருந்தது.
நான் போதைப்பொருள் பயன்படுத்திய வாழ்க்கை முடிந்துவிட்டது. நான் அதைத் திரும்பிப் பார்க்கவில்லை. என்னுடைய முதல் மனைவி ஹூமாவுக்கு தெரியாமல் நான் கோகைன் பயன்படுத்தினேன். ஒருகட்டத்தில் அதிகளவில் நான் போதைப் பொருளை பயன்படுத்த ஆரம்பித்தேன். என்னால் போதைப் பொருளை பயன்படுத்தாமல் இருக்க முடியவில்லை.
ஹூமா, அந்த நேரத்தில் அடிக்கடி தனிமையிலிருந்தார். அவருடைய பெற்றோர் வீடான கராச்சிக்கு செல்ல வேண்டும் என்று விரும்பினார்.
எனக்கு தயக்கமாக இருந்தது. நான் சொந்தமாக கராச்சி செல்ல விரும்பினேன். தனியாகச் சென்றால்தான் பார்ட்டிக்குச் செல்ல முடியும்.
வேலை நிமித்தமாக கராச்சி செல்வதாக நான் ஹூமாவிடம் தெரிவித்து விடுவேன். என்னுடைய மனைவி ஹூமா சுயநினைவற்று மரணப்படுக்கையில் இருந்தபோதுதான் நான் போதைப்பொருள் பயன்படுத்துவதிலிருந்து வெளிவந்தேன்” என்று தெரிவித்துள்ளார்.
வாசிம் அக்ரம் 104 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி, 414 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். 350 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி, 502 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். சிறந்த இடது கை பந்துவீச்சாளராக அறியப்பட்ட வாசிம் அக்ரம், 1992-ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணி உலகக் கோப்பையை வெல்வதில் முக்கியப் பங்கு வகித்தார்.
செல்வம்
தேவர் சிலைக்கு வெள்ளிக் கவசம் வழங்கும் பன்னீர்
தென்னகத்து போஸ்: பிரதமர் முதல் அரசியல் கட்சித் தலைவர்கள் வரை மரியாதை!