இந்திய அணியின் இளம் ஆல்ரவுண்டர் : யார் இந்த வாஷிங்டன் சுந்தர்?

விளையாட்டு

நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் கிடைத்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தி விளையாடி உள்ளார். பேட்டிங்கில் அவ்வளவு முதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ள இவர் எதிர்கால இந்திய அணியின் முக்கிய வீரராக இருப்பார் என்று தமிழகத்தைச் சேர்ந்த வாஷிங்டன் சுந்தரை வெகுவாக பாராட்டியுள்ளார் இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி.

ஆம் அந்த பாராட்டுக்கு மிக பொருத்தமாக நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் தனி ஆளாக போராடி அரைசதம் அடித்த வாஷிங்டன் சுந்தர் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார்.

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஏற்கெனவே நியூசிலாந்து 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்க, இரு அணிகள் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நியூசிலாந்தின் கிரிஸ்ட்சர்ச் மைதானத்தில் நேற்று (நவம்பர் 30) நடைபெற்றது.

தனி ஆளாய் போராடிய வாஷிங்டன்

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் கேப்டன் ஷிகர் தவான் (28) மற்றும் சுப்மன் கில் (13) ரிஷப் பண்ட் (10), சூர்யகுமார் யாதவ் (6) மற்றும் தீபக் ஹூடா (12) ஆகியோர் வந்த வேகத்தில் விக்கெட்டை இழந்து இந்திய அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தினர்.

இந்திய அணியில் ஸ்ரேயஸ் ஐயர் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 49 ரன்களில் வெளியேறினார். அதன்பின் 7வது விக்கெட்டிற்கு களமிறங்கிய வாஷிங்டன் சுந்தர் தனி ஆளாக போராடி 64 பந்துகளில் 51 ரன்கள் குவித்து கடைசியாக ஆட்டமிழந்தார்.

சீனியர் பேட்ஸ்மேன்கள் அனைவரும் சொதப்பிய போதிலும், தனி ஆளாக பொறுப்புடன் விளையாடி அரைசதமும் அடித்த வாஷிங்டன் சுந்தருக்கு முன்னாள் வீரர்கள், ரசிகர்கள் என பலரும் சமூக வலைதளங்களில் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

washington sundar and his growth in indian cricket

வாஷிங்டன் பெயர் காரணம்

1999ம் ஆண்டு தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் பிறந்தவர் வாஷிங்டன் சுந்தர். தனது ஆரம்பகால கிரிக்கெட் தாகத்திற்கு நிதி உதவி அளித்தவரின் நினைவாக தனது மகனுக்கு வாஷிங்டன் சுந்தர் என்று பெயர் வைத்தார் அவரது தந்தை.

தனது 5 வயதில் இருந்தே கிரிக்கெட் விளையாட்டின் மீது சுந்தருக்கு ஆர்வம் அதிகம். அதனால் சிறுவயதில் இருந்தே தொடர்ந்து பயிற்சி பெற்றவர் 2016ம் ஆண்டு ரஞ்சி டிராபியில் தமிழ்நாட்டிற்காக முதன்முறையாக அறிமுகமானார்.

அந்த தொடரில் சிறப்பாக விளையாடிய அவர் அதே ஆண்டில் பங்களாதேஷில் நடைபெற்ற U-19 உலகக் கோப்பைக்காக இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

washington sundar and his growth in indian cricket

இந்திய அணிக்கு தேர்வு

அதற்கு பலனாக அதற்கு அடுத்த ஆண்டு (2017) இறுதியில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இலங்கைக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் முதன்முதலில் இந்திய சீனியர் அணிக்காக வாஷிங்டன் தேர்வு செய்யப்பட்டார். ஆனால் அந்த தொடர் முழுவதும் அவர் களமிறக்கப்படவில்லை.

மறக்கமுடியாத கப்பா வெற்றி

அதனைதொடர்ந்து 2021ம் ஆண்டும் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் தான் வாஷிங்டன் சுந்தர் இந்திய அணியின் நம்பிக்கை வீரராக உருவெடுத்தார்.

washington sundar and his growth in indian cricket

அந்த தொடரில் பெருமை வாய்ந்த கப்பா மைதானத்தில் நடைபெற்ற 4வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் மொத்தம் 84 ரன்கள் குவித்தார். மேலும் சுழற்பந்துவீச்சாளராக ஆஸ்திரேலிய அணியின் முக்கிய விக்கெட்டுகளையும் சாய்த்து இந்தியாவின் வரலாற்று வெற்றிக்கு துணை புரிந்தார்.

நாட் அவுட் பேட்ஸ்மேன்

பின்னர் அதே ஆண்டில் மார்ச் மாதம் இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணிக்கு வாஷிங்டன் சுந்தர் தேர்வு செய்யப்பட்டார். அதில் முதல் டெஸ்ட் போட்டியில் 85 ரன்களும், 4வது டெஸ்ட் போட்டிய 96 ரன்களும் நாட் அவுட் பேட்ஸ்மேனாக பலரையும் ஆச்சரியப்படுத்தினார்.

washington sundar and his growth in indian cricket

ஐபிஎல் தொடரில் அசூர வளர்ச்சி

பேட்டிங் மற்றும் பவுலிங்கில் கலக்கிய வாஷிங்டன் சுந்தர் 2017ம் ஆண்டு ரைசிங் புனே சூப்பர்ஜெயண்ட்ஸ் அணிக்காக விளையாடினார். அதற்கு அடுத்த ஆண்டுகளில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் முக்கிய வீரராக மாறினார்.

இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் அவர் 8.75 கோடி ரூபாய்க்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியால் வாங்கப்பட்டு தக்கவைக்கப்பட்டுள்ளார்.

காயம் தந்த சோகம்

ஆல்ரவுண்டரான கலக்கி வரும் இந்திய அணியில் ஜடேஜாவுக்கு சரியான மாற்று வீரராக வாஷிங்டன் சுந்தர் செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வாஷிங்டன் சுந்தருக்கு ஏற்பட்ட காயம் காரணமாக ஏராளமான டி20 மற்றும் ஒருநாள் தொடர்களை தவறவிட்டார்.

டி20 உலகக்கோப்பைத் தொடரின் போது ஜடேஜா காயம் காரணமாக விலகிய போது, வாஷிங்டன் சுந்தர் தான் தேர்வு செய்யப்படுவார் என்று ரசிகர் எதிர்பார்த்தனர். ஆனால் அவர் காயத்தில் இருந்து முழுமையாக குணமடையாததால், அக்சர் படேலுக்கு வாய்ப்பு கிடைத்தது.

ரவி சாஸ்திரி புகழாரம்

இந்த நிலையில் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் வாஷிங்டன் சுந்தர் தேர்வு செய்யப்பட்டார்.

ஆல் ரவுண்டராக 3 ஒருநாள் போட்டிகளிலும் வாய்ப்பை பெற்ற வாஷிங்டன் சுந்தர் 2 போட்டிகளையும் சேர்த்து 88 ரன்கள் விளாசினார்.

பந்துவீச்சில் விக்கெட் எடுக்கவில்லை என்றாலும் ரன்களை குறைவாக விட்டுக்கொடுத்து குறைவான எக்கானமியுடன் சிறப்பாக செயல்பட்டுள்ளார்.

இந்நிலையில் வாஷிங்டன் சுந்தர் குறித்து பேசிய ரவி சாஸ்திரி, ”நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் கிடைத்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தி கொண்டுள்ளார். பேட்டிங்கில் அவ்வளவு முதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

கடினமான சூழல்களில் இந்திய அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் சொதப்பிய போது, சிறப்பாக விளையாடி உள்ளார். சுந்தர் மிகவும் கவனமாக செயல்படுவதோடு, எதிர்கால இந்திய அணியின் முக்கிய வீரராக இருப்பார்” என்று தெரிவித்துள்ளார்.

உண்மையில் இந்திய அணிக்கு ஆல்ரவுண்டர்களின் தேவை முக்கியமானது. அந்த வகையில் வாஷிங்டன் சுந்தரின் ஆல் ரவுண்ட் பெர்பார்மன்ஸ் இந்திய அணிக்கு வரும் நாட்களில் பெரிதும் உதவி புரியும் என்று நம்பலாம்.

கிறிஸ்டோபர் ஜெமா

மெஸ்ஸியும்..! தொடரும் மிஸ்ஸிங் பெனால்டியும்..!

ஆன்லைன் மோசடி: 6 நாளில் ரூ.32 லட்சத்தை இழந்த இளைஞர்!

+1
0
+1
0
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.