பாகிஸ்தான் அணிக்கு எதிரான கடைசி போட்டியுடன் சர்வதேச டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக ஆஸ்திரேலியாவின் நட்சத்திர வீரரான வார்னர் அறிவித்துள்ளார்.
கடந்த 14 ஆண்டுகளுக்கும் மேலாக ஆஸ்திரேலிய அணியின் அதிரடி ஓபனிங் பேட்ஸ்மேனாக வலம் வருபவர் டேவிட் வார்னர். 37 வயதான இவர் அனைத்து வடிவிலான கிரிக்கெட் போட்டியிலும் சேர்த்து இதுவரை 53 சதங்கள் மற்றும் 154 அரைசதங்களுடன் மொத்தம் 24,918 ரன்கள் குவித்துள்ளார்.
மேலும் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என சாம்பியன் அணியான ஆஸ்திரேலியாவின் பல்வேறு வெற்றிகளுக்கு மேட்ச் வின்னராக சிறப்பான பங்களிப்பையும் அளித்துள்ளார் வார்னர்.
இந்த நிலையில் தற்போது சொந்த மண்ணில் நடைபெற்று வரும் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடர் தான் தனது கடைசி தொடராக இருக்கும் என்று வார்னர் அறிவித்துள்ளது அவரது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிட்னியில் வரும் 3ஆம் தேதி நடைபெற இருக்கும் பாகிஸ்தானுக்கான டெஸ்ட் போட்டியுடன் சர்வதேச டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக வார்னர் தெரிவித்துள்ளார்.
எனினும் 2025ஆம் ஆண்டில் நடைபெற இருக்கும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் தேவைப்பட்டால் தன்னை அணியில் தேர்வு செய்யலாம் என்றும், அந்த தொடரில் விளையாட தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்தியாவில் வைத்து உலகக் கோப்பை வென்றதை மிகப் பெரிய சாதனையாக கருதுகிறேன் என்றும், ஓய்வு முடிவினால் பிற நாடுகளில் நடைபெறும் லீக் தொடர்களில் விளையாடுவதில் எந்த சிக்கலும் இருக்காது என்றும் வார்னர் தெரிவித்துள்ளார்.
சர்வதேச டெஸ்ட், ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு அறிவித்துள்ள அதேவேளையில் டி20 போட்டிகளில் தொடர்ந்து வார்னர் விளையாட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
சீறிப்பாய்ந்தது பி.எஸ்.எல்.வி-சி58 : புத்தாண்டில் இஸ்ரோ சாதனை!