இந்தியா – ஜிம்பாப்வே மோதும் ஒரு நாள் போட்டிகள் வருகிற 18, 20, 22ஆம் தேதிகளில் ஜிம்பாப்வே நாட்டின் தலைநகரான ஹராரேயில் நடக்கிறது.
இந்த போட்டிக்கான இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் வீரரும், தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவருமான வி.வி.எஸ்.லட்சுமண் செயல்படுவார் என்று இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் ஜெய் ஷா அறிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசியுள்ள அவர், “ஜிம்பாப்வே தொடருக்கான இந்திய அணியின் பயிற்சியாளர் பொறுப்பை வி.வி.எஸ்.லட்சுமண் கவனிப்பார்.
இதனால் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஓய்வு எடுத்துக்கொண்டதாக அர்த்தம் கிடையாது. அவர் ஆசிய கோப்பை போட்டிக்காக வருகிற 23ஆம் தேதி அணியினருடன் ஐக்கிய அரபு அமீரகம் செல்ல உள்ளார்.
இரண்டு தொடருக்கு இடையே குறைந்த கால இடைவெளி மட்டுமே இருப்பதால் ஜிம்பாப்வே தொடருக்கு பயிற்சியாளராக லட்சுமணை நியமித்துள்ளோம்” என்று கூறியுள்ளார்.
இந்த தொடருக்கான அணியை கடந்த ஜூலை 30-ம் தேதி அறிவித்தது பிசிசிஐ. அப்போது ஷிகர் தவான் கேப்டனாக செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், “கொரோனா தொற்று காரணமாக மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடரை கே.எல்.ராகுல் மிஸ் செய்திருந்தார்.
இப்போது அவர் முழு உடற்தகுதியை பெற்றுள்ளதாக மருத்துவக் குழு தெரிவித்துள்ளது. அதன் காரணமாக ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணியை கே.எல்.ராகுல் வழிநடத்துவார்.
ஷிகர் தவான் அணியின் துணை கேப்டனாக செயல்படுவார்” என்று பிசிசிஐ ஏற்கெனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
-ராஜ்
பிரதமரின் வார்த்தைகள்: மகளிர் கிரிக்கெட் கேப்டன் பெருமிதம்!