இந்தியாவின் மிகப்பெரிய கபடி திருவிழாவான ‘ப்ரோ கபடி’ தொடரின் 10 சீசன் மிக விரைவில் துவங்க உள்ளது. இந்நிலையில், இந்த தொடருக்கான வீரர்கள் ஏலம் மும்பையில் அக்டோபர் 9 & 10 என 2 நாட்கள் நடைபெற்றது.
இந்த ஏலத்தில், தமிழ் தலைவாஸ் அணியில் இருந்து விடுவிக்கப்பட்ட இந்திய கபடி அணியின் கேப்டன் பவன் ஷெராவத், தெலுங்கு டைட்டன்ஸ் அணியால் ரூ.2.605 கோடி என்ற இமாலய விலைக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். இதன்மூலம், தனது சாதனையை தானே முறியடித்து, ப்ரோ கபடி வரலாற்றிலேயே அதிக விலைக்கு ஏலம் போன வீரர் என்ற பெருமையை பவன் ஷெராவத் பெற்றுள்ளார். முன்னதாக, 9வது சீசன் துவங்குவதற்கு முன்பு, இவரை தமிழ் தலைவாஸ் அணி ரூ. 2.26 கோடிக்கு பெற்றதே வரலாறாக இருந்தது.
இவரை தொடர்ந்து, ஈரான் நாட்டை சேர்ந்த ஆல்-ரவுண்டர் முகமதுரேசா சியானே, ரூ.2.35 கோடிக்கு புனேரி பல்டன்ஸ் அணியால் ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். இதன்மூலம், ப்ரோ கபடி வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் போன வெளிநாட்டு வீரர் என்ற பெருமையை சியானே பெற்றுள்ளார்.
இந்த ஏலத்தில், அதிக விலைக்கு ஏலம் போன வீரர்கள் பட்டியலில், மனீந்தர் சிங் 3வது இடத்தை பிடித்துள்ளார். இவரை, பெங்கால் வாரியார்ஸ் அணி ரூ.2.12 கோடி என்ற விலைக்கு ஏலம் எடுத்துள்ளது.
கடந்த 2017ம் ஆண்டு முதலே, மனீந்தர் சிங் பெங்கால் அணிக்காகத்தான் விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
4வது இடத்தை, மற்றொரு ஈரானிய வீரரான பசல் அட்ராச்சலி பெற்றுள்ளார். இவரை, குஜராத் ஜெய்ன்ட்ஸ் அணி ரூ.1.60 கோடி என்ற விலைக்கு ஏலத்தில் எடுத்துள்ளது. இவர், கடந்த சீசனில் அதே குஜராத் அணிக்கு கேப்டனாக செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பட்டியலில், ‘பாகுபலி’ சித்தார்த் தேசாய் 5வது இடத்தை பிடித்துள்ளார். இவரை ஹரியானா ஸ்டீலர்ஸ் அணி ரூ.1 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது.
டாப் 5 ரைடர்கள் யார்?
1) பவன் ஷெராவத் – தெலுங்கு டைட்டன்ஸ் – ரூ.2.605 கோடி
2) மனீந்தர் சிங் – பெங்கால் வாரியார்ஸ் – ரூ.2.12 கோடி
3) சித்தார்த் தேசாய் – ஹரியானா ஸ்டீலர்ஸ் – ரூ.1 கோடி
4) அஷு மாலிக் – தபாங் டெல்லி – ரூ.96.25 லட்சம்
5) மீது – தபாங் டெல்லி – ரூ.93 லட்சம்
டாப் 5 டிபெண்டர்ஸ் யார்?
1) பசல் அட்ராச்சலி – குஜராத் ஜெய்ன்ட்ஸ் – ரூ.1.60 கோடி
2) ராகுல் செத்பால் – ஹரியானா ஸ்டீலர்ஸ் – ரூ.40.70 லட்சம்
3) மஹிந்தர் சிங் – யூ மும்பா – ரூ.40.25 லட்சம்
4) சுபம் ஷிண்டே – யூ மும்பா – ரூ.32.25 லட்சம்
5) அமீர்ஹொசைன் பஸ்டாமி – தமிழ் தலைவாஸ் – ரூ.30 லட்சம்
டாப் 5 ஆல்-ரவுண்டர்ஸ் யார்?
1) முகமதுரேசா சியானே – புனேரி பல்டன்ஸ் – ரூ.2.35 கோடி
2) விஜய் மாலிக் – உ.பி யோதா – ரூ.85 லட்சம்
3) அமீர்முகமது – யூ மும்பா – ரூ.68 லட்சம்
4) ரோகித் குலியா – குஜராத் ஜெய்ன்ட்ஸ் – ரூ.58.50 லட்சம்
5) அங்கீத் – பாட்னா பைரேட்ஸ் – ரூ.31.50 லட்சம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
முரளி
நடிகர் நாசர் தந்தை மறைவு…. முதல்வர் இரங்கல்!
வெளியானது ஏசஸின் புதிய கேமிங் மானிட்டர்!
செந்தில் பாலாஜி ஜாமீன் மனு: நாளை விசாரணை!