ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் இரட்டை சதத்தை 14 ரன்களில் தவறவிட்டாலும், 1206 நாட்களுக்கு பிறகு சதத்தை பதிவு செய்ததன் மூலம் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார் விராட்கோலி.
இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான 4வது டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திரமோடி மைதானத்தில் கடந்த 9ம் தேதி தொடங்கியது.
டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்ஸில் 480 ரன்களை குவித்து ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் அதிகபட்சமாக உஸ்மான் கவாஜா 180 ரன்களும், கேமரூன் க்ரீன் 114 ரன்களும் குவித்தனர்.
இதனைத்தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணியில் ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் முதல் விக்கெட்டுக்கு 74 ரன்கள் குவித்தனர்.
ரோகித் சர்மா 35 ரன்களில் ஆட்டமிழக்க, அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இளம் வீரர் சுப்மன் கில் 128 ரன்களுடன் டெஸ்டில் தனது 2வது சதத்தை பதிவு செய்து ஆட்டமிழந்தார்.
சிறிது நேரத்தில் அனுபவ வீரர் புஜாராவும் டோட் முர்பியின் சுழலில் 42 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதனால் 3ம் நாள் ஆட்டமுடிவில் இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 289 ரன்களை குவித்திருந்தது.
விராட்கோலி அபார சதம்
இந்நிலையில் இன்று (மார்ச் 12) தொடங்கிய 4ம் நாள் ஆட்டத்தில் விராட்கோலி 59 ரன்களுடனும், ஜடேஜா 16 ரன்களுடனும் ஆட்டத்தை தொடர்ந்தனர். இந்த ஜோடி 4வது விக்கெட்டுக்கு 64 ரன்கள் சேர்த்த நிலையில் ஜடேஜா 28 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
அவருக்கு பிறகு கோலியுடன் ஜோடி சேர்ந்தார் விக்கெட் கீப்பர் ஸ்ரீகர் பிரசாத். ஆரம்பம் முதலே நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கோலி 1206 நாட்களுக்கு பிறகு டெஸ்ட் அரங்கில் தனது 28வது சதத்தை பதிவு செய்தார்.
கடைசியாக கடந்த 2019ம் ஆண்டு டெஸ்டில் விராட்கோலி சதம் விளாசியிருந்தார். இந்நிலையில் இந்த சதம் அனைத்து வடிவிலான சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விராட் கோலியின் 75 சதமாக பதிவானது.
கவனம் ஈர்த்த அக்சர் பட்டேல்
பின்னர் கோலியுடன் ஜோடி சேர்ந்த அக்சர் பட்டேல் தனது 3வது அரைசதம் அடித்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதற்கிடையே சிறிது அதிரடியை கூட்டிய விராட்கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் 11வது முறையாக 150 ரன்களை கடந்தார்.
அவருடன் தொடர்ந்து சிறப்பாக ஆடி வந்த அக்சர் சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 79 ரன்களில் ஆட்டமிழந்தார். 7 விக்கெட்டுக்கு இணைந்த கோலி – அக்சர் ஜோடி 162 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது.
கோலியை பாராட்டிய ஸ்டீவன் ஸ்மித்
இதனைத்தொடர்ந்து களமிறங்கிய அஸ்வின் 7 ரன்னிலும், உமேஷ் யாதவ் ரன் எடுக்காமல் அடுத்தடுத்து அவுட் ஆன நிலையில் தனது 8வது இரட்டை சதத்தை விராட்கோலியால் தொட முடியுமா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.
ஆனால் 186 ரன்களில் விளையாடி வந்த விராட்கோலி வைடாக வந்த முர்பியின் பந்தை அடிக்க முயல, பேட்டின் விளிம்பில் பட்ட பந்து நேராக லபுசேன் கைகளில் தஞ்சம் அடைந்தது.
தொடர்ந்து 364 பந்துகளை சந்தித்து 15 பவுண்டரிகளுடன் 186 ரன்களை அடித்த விராட்கோலி 14 ரன்களில் தனது 8வது இரட்டை சதத்தை அடிக்க தவறினார். எனினும் மூன்றரை வருடங்களுக்கு பிறகு டெஸ்ட் அரங்கில் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய கோலிக்கு ஆஸ்திரேலியா கேப்டன் ஸ்டீவன் கைகுலுக்கி பாராட்டு தெரிவித்தார். அதனைத்தொடர்ந்து மைதானத்தில் இருந்த அனைவரும் எழுந்து நின்று அவரை பாராட்டினர்.
கோலி சென்றதுடன் காயம் காரணமாக ஸ்ரேயாஸ் அய்யரும் களம் இறங்காத நிலையில் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 571 ரன்களை குவித்துள்ளது.
தொடர்ந்து 91 ரன்கள் பின்தங்கிய நிலையில் தனது 2வது இன்னிங்ஸை தொடங்கியது ஆஸ்திரேலியா. 6 ஓவர்கள் பேட் செய்த அந்த அணி விக்கெட் இழப்பின்றி 3 ரன்களை அடித்த நிலையில் 4ம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.
அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் டிராவிஸ் ஹெட்(3) மற்றும் குன்னெமென் (0) ஆகியோர் களத்தில் உள்ளனர்.
WTC : இந்தியா என்ன செய்ய வேண்டும்?
நாளை நடைபெற கடைசி மற்றும் 5ம் நாள் ஆட்டத்தில் அனுபவமிக்க இந்திய சுழற்பந்துவீச்சாளர்கள் தங்களது ஆதிக்கத்தை செலுத்தினால் 3-1 என்ற கணக்கில் இந்தியா வெல்லக்கூடும். அதன்மூலம் ஜூலை மாதம் இங்கிலாந்தில் நடைபெறும் உலகக்கோப்பை போட்டிக்கு இந்திய அணி நேரிடையாக தகுதிபெறும்.
இல்லையென்றால் நாளை நடைபெற உள்ள இலங்கை – நியூசிலாந்து அணிகள் இடையேயான முதல் டெஸ்ட்டின் முடிவுக்கு காத்திருக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படும்.
அந்த அணிகள் இடையேயான மோதலில் கடைசி நாளில் பேட்டிங் செய்ய உள்ள நியூசிலாந்து அணி 257 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடி வருகிறது.
கிறிஸ்டோபர் ஜெமா
பாஜகவை தொடர்ந்து அதிமுகவில் இணைந்த அமமுக நிர்வாகிகள்
ஆன்லைன் ரம்மி: நாடாளுமன்றத்தில் திமுக நோட்டீஸ்!
