ஐதராபாத் ராஜீவ்காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேற்று (ஏப்ரல் 26) இரவு 41-வது லீக் ஆட்டம் நடைபெற்றது. இதில் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதின.
முன்னதாக பெங்களூருவில் நடைபெற்ற ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்திருந்தது சன்ரைசர்ஸ்.
இதனால் அதற்கு பழிவாங்கும் விதமாக நேற்று நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 7 விக்கெட் இழப்பிற்கு 206 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக விராட் கோலி 51 ரன்களும், பட்டிதார் 50 ரன்களும் குவித்தனர்.
இதனையடுத்து களமிறங்கிய ஐதராபாத் அணி, 20 ஓவர்கள் முழுமையாக ஆடி 8 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 35 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றி பெற்று முந்தைய தோல்விக்கு பழிதீர்த்துக் கொண்டது.
மேலும் கடந்த 6 போட்டிகளாக தொடர் தோல்வியை சந்தித்து வந்த ஆர்.சி.பி அணி வெற்றிப்பாதைக்கு திரும்பியது.
அத்துடன் இப்போட்டியில் 22 ரன்கள் அடித்த போது பெங்களூரு அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி நடப்பு தொடரில் 400 ரன்களை கடந்தார். அவர் ஐ.பி.எல். சீசன் ஒன்றில் 400 ரன்னுக்கு மேல் எடுப்பது இது 10-வது முறையாகும்.
இதன் மூலம் ஐ.பி.எல். போட்டியில் அதிக முறை 400 ரன்னுக்கு மேல் எடுத்த வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றுள்ளார். அவருக்கு அடுத்தபடியாக சுரேஷ் ரெய்னா, டேவிட் வார்னர் (9 முறை) உள்ளனர்.
மேலும் நடப்பு தொடரில் அதிக ரன்கள்(430*) குவித்து ஆரஞ்சு தொப்பியையும் விராட்கோலி தன் வசம் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
இந்த வாரம் ஓடிடி ஸ்பெஷல் ரிலீஸ் படங்கள் என்னென்ன?
இரண்டாம் கட்ட மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது : முழு விவரம்!