இங்கிலாந்திற்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி விளையாட மாட்டார் என பிசிசிஐ அறிவித்துள்ளது.
வருகின்ற ஜனவரி 25-ம் தேதி இந்தியா-இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டி, ஹைதராபாத் ராஜீவ்காந்தி சர்வதேச விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இதற்காக தற்போது இந்திய அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். கேப்டன் ரோஹித் சர்மா தலைமையில் இந்த டெஸ்ட் தொடரை இந்திய அணி எதிர்கொள்கிறது.
இந்த நிலையில் இந்திய அணியின் முக்கிய வீரரும் ‘டெஸ்ட் தொடர்களின் ராஜா’ என ரசிகர்களால் புகழப்படுபவருமான, கோலி முதல் இரண்டு டெஸ்ட் தொடர்களில் இருந்து விலகியுள்ளார்.
இது இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. டெஸ்ட் தொடர்களை பொறுத்தவரை கடைசி வரையிலும் போராடக்கூடிய வீரர் கோலி.
கடைசியாக தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் கூட, பிற வீரர்கள் விரைவாக விக்கெட்டுகளை இழந்தபோது கோலி மட்டுமே ஒருமுனையில் நின்று போராடினார்.
இந்தியா அந்த தொடரை சமன் செய்ததற்கு கோலியும் ஒரு முக்கிய காரணம். இதனால் தான் அவரது விலகல் இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.
🚨 NEWS 🚨
Virat Kohli withdraws from first two Tests against England citing personal reasons.
Details 🔽 #TeamIndia | #INDvENGhttps://t.co/q1YfOczwWJ
— BCCI (@BCCI) January 22, 2024
இதுகுறித்து பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில்,”விராட் கோலி தனிப்பட்ட காரணத்திற்காக முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலகி இருக்கிறார். ரசிகர்களும், ஊடகங்களும் விராட் கோலியின் இந்த தனிப்பட்ட விஷயத்தில் தலையிட வேண்டாம்,”என கேட்டுக் கொண்டுள்ளது.
மேலும் நாட்டுக்காக விளையாடுவது தான் தன்னுடைய தலையாய பணி என்றும், ஆனால் தனிப்பட்ட காரணத்தினால் முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட முடியாமல் போய் விட்டதாகவும், கேப்டன் ரோஹித் மற்றும் அணி நிர்வாகத்திடம் கோலி தெரிவித்துள்ளதாக பிசிசிஐ தன்னுடைய அறிக்கையில் தெரிவித்து இருக்கிறது.
இதனால் கோலிக்கு பதிலாக மாற்று வீரரைத் தேட வேண்டிய கட்டாயம், தற்போது இந்திய தேர்வுக்குழுவிற்கு ஏற்பட்டுள்ளது.
-மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கோயில் வாழ்நாள் அறங்காவலர் சஸ்பெண்ட் வழக்கு: உயர்நீதிமன்றம் உத்தரவு!
செந்தில் பாலாஜி நீதிமன்ற காவல் 16வது முறையாக நீட்டிப்பு!