ட்விட்டரில் 5 கோடி ஃபாலோயர்களை பெற்ற முதல் கிரிக்கெட் வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்துள்ளார்.
‘ரன் மெஷின்’ என்றழைக்கப்படும் முன்னாள் கேப்டன் விராட் கோலி, சர்வதேச கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளுக்குச் சொந்தக்காரராக விளங்குகிறார். 2019ம் ஆண்டு நவம்பர் மாதத்துக்குப் பின் எந்தப் போட்டியிலும் (மூன்று விதமான கிரிக்கெட்டில்) சதமடிக்காமல் இருந்தார்.
மேலும், அதிக ரன்கள் குவிக்கவும் தவறினார். இதனால், அவர் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.
என்றாலும், கிரிக்கெட் வல்லுநர்கள் அவருக்கு ஆதரவு அளித்தனர். இந்திய கிரிக்கெட் தேர்வு வாரியமும் அவருக்கு தொடர்ந்து வாய்ப்பு வழங்கியது. அதைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டு சமீபத்தில் நடந்துமுடிந்த ஆசியக் கோப்பை தொடரில் இந்தியாவின் சிறந்த பேட்டராய் ஜொலித்தார்.
அதில் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறவில்லை என்றாலும், விராட் கோலி அடித்த ரன்கள் இந்திய அணியின் வெற்றிக்கு தூணாய் அமைந்தன.
அதிலும் குறிப்பாக சூப்பர் 4 சுற்றில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக அவர் எடுத்த சதம், அவரது விமர்சனத்துக்கே முற்றுப்புள்ளி வைத்தது. சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதுதான் கோலியின் முதல் சதமும் ஆகும்.
இதுவரை மூன்று விதமான கிரிக்கெட்டிலும் சேர்த்து 71 சதங்கள் அடித்துள்ளார். ஆசியக் கோப்பை தொடரில் இரண்டு அரைசதம், ஒரு சதம் எடுத்து அணிக்கு முக்கியப் பங்காற்றினார்.
அதன் பயனாக டி20 உலகக் கோப்பை தொடரிலும், ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கான கிரிக்கெட் தொடரிலும் இடம்பிடித்துள்ளார்.
இந்த நிலையில், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் போன்ற சமூகவலைத்தளங்களில் விராட் கோலியை ஏராளமான பேர் பின்தொடர்கிறார்கள்.
விராட் கோலியை ட்விட்டரில் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 5 கோடியை எட்டியுள்ளது. இதன்மூலம், ட்விட்டரில் 5 கோடி ஃபாலோயர்களை எட்டிய முதல் கிரிக்கெட் வீரர் என்ற சாதனையை கோலி படைத்துள்ளார்.
இன்ஸ்டாகிராமில் 21.1 கோடி ஃபாலோயர்களை பெற்றுள்ள கோலி, சர்வதேச அளவில் இன்ஸ்டாகிராமில் அதிக ஃபாலோயர்களை பெற்றுள்ள 3வது விளையாட்டு வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரராக விளங்குகிறார்.
இந்த பட்டியலில் கால்பந்து வீரர்கள் கிறிஸ்டியானா ரொனால்டோ மற்றும் மெஸ்ஸி ஆகிய இருவரும் முதலிரண்டு இடங்களில் உள்ளனர்.
ஃபேஸ்புக்கில் 4.9 கோடி ஃபாலோயர்களை பெற்றுள்ள விராட் கோலி, சமூக வலைதளங்களில் மொத்தமாக 31 கோடிக்கும் அதிகமான ஃபாலோயர்களை பெற்றுள்ளார்.
ஜெ.பிரகாஷ்
ஃபார்முக்கு திரும்பிய விராட் கோலி : பாராட்டி தள்ளிய ரோகித் சர்மா