ரொனால்டோவை கொண்டாடிய கோலி
நீங்கள் எல்லா காலத்திலும் எனக்கு பெரியவர் என்று நட்சத்திர கால்பந்தாட்ட வீரர் ரொனால்டோவை இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட்கோலி புகழ்ந்துள்ளார்.
நேற்று முன்தினம் (டிசம்பர் 10) அல்துமா மைதானத்தில் நடைபெற்ற உலக கோப்பை கால்பந்து காலிறுதி போட்டியில் பலம் வாய்ந்த போர்சுகல் அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி மொராக்கோ அணி வெற்றி பெற்றது.
இதன் மூலம் உலக கோப்பை அரையிறுதிப் போட்டிக்கு தகுதிபெற்ற முதல் ஆப்பிரிக்க அணி என்ற பெருமையை மொராக்கோ அணி பெற்றது. இந்த போட்டியின் முதல் பாதியில் ரொனால்டோ களமிறக்கப்படவில்லை.
ஆட்டத்தின் இரண்டாம் பாதியில் 52-வது நிமிடத்தில் தான் களமிறக்கப்பட்டார். இதனால் ரொனால்டோ ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
மொராக்கோ அணி வீரர்கள் தடுப்பாட்டத்தில் ஈடுபட்டு போர்சுகல் வீரர்களுக்கு கடும் நெருக்கடி கொடுத்தனர். இந்தப் போட்டியில் ரொனால்டோ மூன்று முறை கோல் அடிக்க முயன்றும் அவரால் கோல் அடிக்க முடியவில்லை.
ஆட்டத்தின் முடிவில் போர்சுகல் அணி 1-0 என்ற கோல் கணக்கில் மொராக்கோ அணியிடம் தோல்வி அடைந்து உலக கோப்பை கால்பந்து போட்டியிலிருந்து வெளியேறியது.
நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் கடைசி ஆட்டம் என்பதால் அவர் மைதானத்தை விட்டு வெளியேறிய போது கண்ணீர் விட்டு அழுதார்.
இது உலகமெங்கும் உள்ள ரொனால்டோவின் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.
நட்சத்திர வீரர் ரொனால்டோ குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி தனது ட்விட்டர் பக்கத்தில்,
“கால்பந்து விளையாட்டிற்காகவும், ரசிகர்களுக்காகவும் நீங்கள் செய்தவற்றை எந்த கோப்பையாலும், தலைப்பாலும் பறித்து விட முடியாது.
மக்கள் மீது நீங்கள் ஏற்படுத்திய தாக்கத்தையும், நீங்கள் விளையாடுவதை உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் பார்க்கும்போது என்ன உணர்கிறோம் என்பதையும் எந்த தலைப்பிலும் விளக்க முடியாது.
அது கடவுள் உங்களுக்கு கொடுத்த வரம். இதயபூர்வமாக விளையாட்டை வெளிப்படுத்தும் ஒரு வீரருக்கு சிறந்த ஆசிர்வாதம் என்பது அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் உத்வேகத்தை ஏற்படுத்துவதாகும்.
நீங்கள் எல்லா காலத்திலும் எனக்கு பெரியவர்.” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
இன்னுமொரு தேசிய கட்சி தேவையா? சாத்தியமா?