கோலி சிறந்த வீரர் தான், ஆனால்…. – கங்குலி சொன்ன குட் ஐடியா!
விராட் கோலி ஒரு சிறந்த வீரர். ஆனால், டி20 உலகக்கோப்பையில் இந்திய அணி வெற்றி பெற அவர் தொடக்க வீரராக களமிறங்க வேண்டும் என இந்திய அணி முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
20 அணிகள் பங்கேற்கும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நாளை (ஜூன் 2) முதல் ஜூன் 29ஆம் தேதி வரை அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற உள்ளது.
இந்த டி20 உலகக்கோப்பை போட்டியில் பங்கேற்க ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி நியூயார்க் சென்றுள்ளது.
இந்திய அணி வெற்றி பெற விராட் கோலி அதிக ரன்களை அடிப்பது அவசியமாகி உள்ளது. கடந்த ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் 765 ரன்கள் எடுத்து உலகக்கோப்பை தொடரின் நாயகன் விருதினை பெற்றார் விராட் கோலி.
அதேபோல், நடந்து முடிந்த ஐபிஎல் 2024 போட்டிகளிலும் அதிக ரன்கள் அடித்து ஆரஞ்சு தொப்பியை விராட் கோலியே கைப்பற்றினார். எனவே, இந்த உலகக்கோப்பை தொடரில் விராட் கோலி நிச்சயமாக அதிக ரன்களை எடுப்பார் என ரசிகர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.
இந்த நிலையில், விராட் கோலி ஒரு சிறந்த வீரராக இருந்தாலும், இந்திய அணி இந்தமுறை வெற்றி பெறுவதற்கு அவர் தொடக்க வீரராக களமிறங்க வேண்டும் என முன்னாள் கேப்டன் சவ்ரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய இந்திய முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி, “நான் ரோஹித் மற்றும் விராட் கோலி ஆகியோரை தொடக்க வீரர்களாக களமிறக்குவேன். நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் விராட் கோலி எவ்வாறு பெங்களூரு அணிக்காக விளையாடினாரோ அதேப்போல் தான் டி20 உலகக்கோப்பையிலும் அவர் விளையாட வேண்டும்.
விராட் கோலி சுதந்திரமாக பேட்டிங் செய்ய வேண்டும். அவர் ஒரு சிறந்த வீரர். ஆனால், இந்திய அணி சிறப்பாக செயல்படுவதற்கு விராட் கோலி தொடக்க வீரராக களமிறங்க வேண்டும்.
எனவே ரோஹித் மற்றும் விராட் இருவரும் டாப் ஆர்டரில் விளையாட வேண்டும் என்பதே எனது விருப்பம். இந்திய அணியில் நிறைய தரமான வீரர்கள் உள்ளனர். அவர்கள் ஐபிஎல் தொடரால் டி20 கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாட இங்கே வருகின்றனர்.
இந்த முன் பயிற்சி நியூயார்க் நகரில் அவர்களுக்கு உதவும். அங்குள்ள பெரிய மைதானங்கள் நமது ஸ்பின்னர்களுக்கு உதவும். இதுபோன்ற காரணங்களால் இந்தியாவை யாரும் குறைத்து மதிப்பிட முடியாது. ஏனெனில், இந்திய அணியில் நிறைய தரம் இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
இறுதிக்கட்ட நாடாளுமன்றத் தேர்தல் – 1 மணி நிலவரம்!
ஹன்சிகாவின் ‘காந்தாரி’ படம் எப்போது ரிலீஸ்?