சச்சின் சாதனையை முறியடித்த விராட் கோலி

Published On:

| By christopher

இலங்கை அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இன்று அபாரமாக ஆடி சதம் அடித்ததன் மூலம் சச்சினின் சாதனையை விராட்கோலி முறியடித்துள்ளார்.

இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. அதனைத்தொடர்ந்து இந்தியா-இலங்கை அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கவுகாத்தியில் இன்று (ஜனவரி 10) நடைபெற்று வருகிறது.

டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்ய, முதலில் பேட்டிங் செய்ய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் கேப்டன் ரோகித் சர்மா, சுப்மன் கில் ஜோடி களமிறங்கியது.

இருவரும் அதிரடியாக ஆடி அணிக்கு நல்ல அடித்தளம் அமைத்தனர். முதல் விக்கெட்டுக்கு இருவரும் 143 ரன்கள் சேர்த்த நிலையில் சுப்மன் கில் 70 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அவரைத் தொடர்ந்து சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ரோகித் சர்மா 83 ரன்களில் அவுட் ஆனார்.

பின்னர் களமிறங்கிய விராட் கோலியும் தொடக்க வீரர்களின் அதிரடியை ஒருபுறம் இருந்து தொடர்ந்தார்.

எனினும் மறுபுறம், அவருடன் இணைந்த ஸ்ரேயாஸ் அய்யர் (28), கே.எல்.ராகுல் (39), ஹர்திக் பாண்ட்யா (14), அக்சர் பட்டேல் (9) ஆகியோர் சீரான இடைவெளியில் ஆட்டமிழந்தனர்.

virat kohli broke sachin record

விராட் கோலி சாதனை சதம்

இதற்கிடையே தனது கிளாசிக் ஆட்டத்தை வெளிப்படுத்தி பந்துகளை பவுண்டரிகளாக பறக்கவிட்ட விராட் கோலி, சர்வதேச போட்டிகளில் தனது 73வது சதம் அடித்து அசத்தினார்.

சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் விராட் கோலி அடித்த 45-வது சதம் இதுவாகும்.

இதன்மூலம் இலங்கை அணிக்கு எதிராக இந்திய மண்ணில் 9 சதங்கள் அடித்து சச்சின்(8) சாதனையை அவர் முறியடித்துள்ளார். மேலும் இந்திய மண்ணில் 20 சதங்கள் அடித்த சச்சின் சாதனையை சமன் செய்துள்ளார் விராட் கோலி.

தொடர்ந்து ஆடிய அவர், 12 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்சருடன் 113 ரன்கள் எடுத்த நிலையில், ரஜிதா பந்துவீச்சில் மெண்டிஸிடம் கேட்ச் கொடுத்து 49வது ஓவரில் ஆட்டமிழந்தார்.

50 ஓவர் முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 373 ரன்கள் குவித்தது. கடைசியாக களத்தில் முகமது ஷமி (4), சிராஜ் (7) ஆகியோர் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இலங்கை அணி தரப்பில் கசுன் ரஜிதா 3 விக்கெட் கைப்பற்றினார். தில்சன் மதுசங்கா, கருணாரத்னே, தசுன் சனகா, தனஞ்செய டி சில்வா தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.

இதையடுத்து 374 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி விளையாடி வருகிறது.

கிறிஸ்டோபர் ஜெமா

மெட்ரோ தூண் இடிந்து விழுந்து தாய், மகன் பரிதாப பலி!

சென்னையில் ஜல்லிக்கட்டு: அமைச்சர் அறிவிப்பு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share