நேற்று (ஆகஸ்ட் 31) இந்தியா, ஹாங்காங் இடையே நடைபெற்ற டி20 கிரிக்கெட் போட்டியில், அதிரடியாக விளையாடிய சூர்யகுமார் யாதவை பார்த்து விராட் கோலி தலை வணங்கினார்.
ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியானது, துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் ஆகஸ்ட் 28-ஆம்தேதி மோதின.
இதில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை இந்தியா வீழ்த்தியது. நேற்று (ஆகஸ்ட் 31) இந்திய அணி ஹாங்காங் அணியுடன் மோதியது.
இதில் 40 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி ஹாங்காங் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

டாஸ் வென்ற ஹாங்காங் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் இந்திய அணி சார்பில் களமிறங்கிய தொடக்க ஆட்டக்காரர்களான கே.எல் ராகுல் 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
ரோகித் சர்மா 21 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தொடக்க ஆட்டக்காரர்கள் தங்களது பங்களிப்பை அளிக்காத நிலையில், இந்திய அணி சார்பில் களமிறங்கிய விராட் கோலி மற்றும் சூர்யகுமார் யாதவ் ஜோடி அதிரடி காட்டினர்.
இதனால் இந்திய அணியின் ஸ்கோர் உயர தொடங்கியது. 20 ஓவர் முடிவில், விராட் கோலி 44 பந்துகளில் 59 ரன்கள் குவித்தார்.
சூர்யகுமார் யாதவ் 26 பந்துகளில் 68 ரன்கள் குவித்தார். மேலும், சூர்யகுமார் யாதவ் கடைசி ஓவரில் 4 சிக்சர்களை எல்லைக்கோட்டிற்குப் பறக்கவிட்டார்.
இதனால் இந்திய அணி 20 ஓவர் முடிவில் 192 ரன்கள் எடுத்தது.

கடைசி ஓவர் முடிவில் சூர்யகுமார் காட்டிய அதிரடியைப் பார்த்து வியந்த விராட் கோலி, அவரைப் பார்த்து தலை வணங்கினார்.
இந்தப் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் அதிகமாகப் பகிரப்பட்டு வருகிறது. இரண்டு வீரர்களும் சேர்ந்து இந்திய அணியின் ஸ்கோரை உயர்த்தியதால் அவர்களை, ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர்.
முன்னாள் இந்திய அணி கேப்டன் விராட் கோலி சக வீரர் ஒருவரைப் பார்த்து தலைவணங்கியதால் விராட் கோலியை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
செல்வம்
ஹாங்காங்கை பந்தாடிய கோலி, சூர்ய குமார்!