2024 ஆம் ஆண்டுக்கான 17-வது ஐபிஎல் தொடர், நேற்று (மார்ச் 22) சேப்பாக்கம் மைதானத்தில் கோலாகலமாக தொடங்கியது.
ஏ.ஆர்.ரஹ்மான், அக்சய் குமார், டைகர் ஷெராப், சோனு நிகம் உள்ளிட்டோரின் கலைநிகழ்ச்சிகளுடன், இந்த தொடருக்கான துவக்க விழா சேப்பாக்கம் மைதானத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து, 2024 ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் சென்னை மற்றும் பெங்களூரு அணிகள் மோதிக்கொண்டன.
கோலி, தோனி, டூ பிளசிஸ், ஜடேஜா என பல கிரிக்கெட் சூப்பர் ஸ்டார்கள் களம்கண்ட இப்போட்டியில், ஆர்சிபியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சிஎஸ்கே அபார வெற்றி பெற்றது.
இப்போட்டியில், முதலில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதை தொடர்ந்து, அந்த அணிக்கு துவக்க ஆட்டக்காராக களமிறங்கிய விராட் கோலி 21 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.
CSK vs RCB: தொட்டதெல்லாம் ‘தூள் பறக்குது’… கொண்டாடி கொளுத்தும் ரசிகர்கள்!
இதன்மூலம், டி20 கிரிக்கெட்டில் கோலி 12,000 ரன்களை பூர்த்தி செய்து, புதிய மைல்கல்லை எட்டியுள்ளார். இந்த சாதனையை படைத்த 6-வது வீரர் என்னும் பெருமைக்கு கோலி சொந்தக்காரர் ஆகியுள்ளார்.
டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் சேர்த்த வீரர்கள்
1. கிறிஸ் கெய்ல் – 14562 ரன்கள்
2. சோயப் மாலிக் – 13360 ரன்கள்
3. கீரன் பொல்லார்ட் – 12900 ரன்கள்
4. அலெக்ஸ் ஹேல்ஸ் – 12319 ரன்கள்
5. டேவிட் வார்னர் – 12065 ரன்கள்
6. விராட் கோலி – 12015 ரன்கள்
மேலும், டி20 கிரிக்கெட்டில் 12,000 ரன்களை கடந்த முதல் இந்தியர் என்ற சாதனையையும் கோலி படைத்துள்ளார்.
டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் சேர்த்த இந்தியர்கள் பட்டியலில், கோலிக்கு அடுத்து 11,156 ரன்களுடன் ரோகித் 2-வது இடத்தில் உள்ளார்.
CSK vs RCB: ‘ஆடாம ஜெயிச்சோமடா’… முதல் போட்டியில் தோனி படைத்த சாதனைகள்
இவர்களைத் தொடர்ந்து, ஷிகர் தவான் (9645 ரன்கள்) 3-வது இடத்திலும், சுரேஷ் ரெய்னா (8654 ரன்கள்) 4-வது இடத்திலும், ராபின் உத்தப்பா (7272 ரன்கள்) 5-வது இடத்திலும் உள்ளனர்.
அதுமட்டுமின்றி, மிக விரைவாக இந்த இலக்கை எட்டிய வீரர்கள் பட்டியலில், கிறிஸ் கெய்லுக்கு அடுத்து விராட் கோலி 2-வது இடம் பிடித்துள்ளார்.
குறைந்த இன்னிங்ஸ்களில் 12,000 ரன்களை கடந்த வீரர்கள்
1.கிறிஸ் கெய்ல் – 345 இன்னிங்ஸ்
2.விராட் கோலி – 360 இன்னிங்ஸ்
3.டேவிட் வார்னர் – 368 இன்னிங்ஸ்
4.அலெக்ஸ் ஹேல்ஸ் – 432 இன்னிங்ஸ்
5. சோயப் மாலிக் – 451 இன்னிங்ஸ்
இவை மட்டுமின்றி, ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்கு எதிராக 1,000 ரன்களை குவித்த 2-வது வீரர் என்ற சாதனையையும், கோலி இப்போட்டியில் படைத்துள்ளார்.
நேற்றைய ஆட்டத்திற்கு பிறகு, சிஎஸ்கே-வுக்கு எதிராக விராட் கோலி குவித்த ரன்களின் எண்ணிக்கை 1,006 ஆக உள்ளது.
முதலாவதாக, ஷிகர் தவான் இந்த இலக்கை எட்டியிருந்தார். அவர், தற்போதுவரை சிஎஸ்கே அணிக்கு எதிராக 1,057 ரன்களை சேர்த்துள்ளார்.
–மகிழ்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ரூ.6.2 கோடி மதிப்புள்ள தங்க நகைகள் பறிமுதல்… தேர்தல் பறக்கும் படை அதிரடி!