ஜடேஜாவிடம் மன்னிப்பு கேட்ட ’ஆட்டநாயகன்’ விராட் கோலி
புனேவில் நேற்று நடைபெற்ற உலகக்கோப்பை தொடரின் 17வது லீக் போட்டியில், வங்கதேச அணியை எதிர்கொண்ட இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
தொடந்து 4வது முறையாக வென்ற இந்த ஆட்டத்தில் 6 பவுண்டரி, 4 சிக்ஸருடன் 103 ரன்கள் அடித்த விராட்கோலி ஒருநாள் போட்டியில் தனது 48வது சதத்தை பதிவு செய்தார்.
நடப்பு உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு எதிராக அரைசதம் அடித்த அவர் முதன்முறையாக சதத்தை பதிவு செய்ததன் மூலம் பல்வேறு சாதனைகளையும் படைத்துள்ளார்.
வெற்றிக்கு உறுதுணையாக இருந்த விராட்கோலி ஆட்டநாயகன் விருது பெற்றார். அப்போது பேசிய அவர்,
”நடப்பு உலகக்கோப்பை தொடரில் நான் ஒரு பெரிய பங்களிப்பைச் செய்ய விரும்பினேன். முதல் இரண்டு போட்டியில் அரைசதங்களை அடித்தேன். உண்மையில் அவற்றை சதமாக மாற்றவில்லை.
நான் இந்த முறை கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருக்க விரும்பினேன். அதனை அப்படியே செய்தேன். இன்னும் சொல்லப்போனால் இதைதான் நான் அணிக்காக பல ஆண்டுகளாக செய்து வருகிறேன்.
ஜடேஜாவிடம் இருந்து ஆட்டநாயகன் விருதை நான் அபகரித்ததற்காக மன்னிப்பு கேட்கிறேன். அவர் சிறப்பாக பந்துவீசி அசத்தினார். இந்த ஆட்டத்தில் வெற்றி பெற அவரது பந்துவீச்சும் முக்கிய காரணம்.
அணி வீரர்கள் இடையேயும் ஒரு சிறந்த சூழ்நிலை நிலவுகிறது. நாங்கள் அனைவருமே ஒருவரையொருவர் நேசிக்கின்றோம். உடை மாற்றும் அறையில் எங்களுக்கு கிடைக்கும் புத்துணர்ச்சி தான் களத்திலும் எதிரொலிக்கிறது.
இந்த உலகக்கோப்பை தொடர் நீண்ட போட்டி என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். அதே நேரத்தில் எங்கள் அனைவருக்கும் இது முக்கியமான போட்டி. சொந்த நாட்டு மக்கள் முன்னால் விளையாடுவது ஒரு சிறந்த உணர்வு. அதனை அதிகம் பயன்படுத்தி தொடர்ந்து வெற்றி பெற வேண்டும் என்று விரும்புகிறோம்” என்று விராட் கோலி தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
பங்காரு அடிகளார் மறைவு: பிரதமர் மோடி, அமித் ஷா இரங்கல்!
தொழிற்சாலைகள் உரிமத்தைப் புதுப்பிக்க அக்.31 கடைசி நாள்!