கோலியின் 49வது சதம்: சச்சின் என்ன சொன்னார் தெரியுமா?

Published On:

| By Kavi

2023 ஒருநாள் உலகக்கோப்பை தொடரில், இந்தியா தனது 8வது போட்டியில் தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்ட்னஸ் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில், முதலில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, பேட்டிங்கை தேர்வு செய்தார்.

பின் துவக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ரோகித் சர்மா தென் ஆப்பிரிக்கா பவுலர்களை துவம்சம் செய்தார். 24 பந்துகளில் 40 ரன்கள் விளாசி அவர் ஆட்டமிழக்க, மறுமுனையில் சுப்மன் கில் 23 ரன்களுக்கு வெளியேறினார்.

பின் ஜோடி சேர்ந்த விராட் கோலி மற்றும் ஷ்ரேயஸ் அய்யர், பொறுப்பாக விளையாடி சீரான வேகத்தில் இந்திய அணிக்கு ரன்களை குவித்தனர். இந்த ஜோடி 3வது விக்கெட்டிற்கு 134 ரன்கள் சேர்த்திருந்தபோது, ஷ்ரேயஸ் அய்யர் 77 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கே.எல் ராகுலும் 7 ரன்களுக்கு வெளியேறி அதிர்ச்சி அளித்தார். பின் களமிறங்கிய சூர்யகுமார் யாதவும் 22 ரன்களுக்கு ஃபெவிலியன் திரும்பினார்.

ஆனால், மறுமுனையில் தனது பொறுப்பான ஆட்டத்தை தொடர்ந்த விராட் கோலி, ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 49வது சதத்தை பூர்த்தி செய்தார். இதன்மூலம், ஒருநாள் போட்டிகளில் அதிக சதம் அடித்த வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் சாதனையை விராட் கோலி சமன் செய்துள்ளார். மேலும், இந்த சாதனையை விராட் கோலி தனது பிறந்தநாள் அன்று படைத்துள்ளார் என்பது கூடுதல் சிறப்பு.

இறுதியில் ஜடேஜா தனது பங்கிற்கு 15 பந்துகளில் 29 ரன்கள் குவிக்க, 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு, இந்தியா 326 ரன்கள் சேர்த்தது. கோலி கடைசி வரை ஆட்டமிழக்காமல் 101 ரன்கள் சேர்த்திருந்தார். தென் ஆப்பிரிக்கா சார்பில், லுங்கி நெகிடி, மார்கோ ஜான்சன், ககிசோ ரபாடா, கேஷவ் மகாராஜ், தப்ரைஸ் சம்ஸி ஆகிய 5 பேர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

இந்நிலையில், கோலியின் 49வது சதம் குறித்து டிவீட் செய்துள்ள சச்சின், “அடுத்த சில நாட்களிலேயே 49ல் இருந்து 50க்கு சென்று, என்னுடைய சாதனையை நீங்கள் (விராட் கோலி) முறியடிப்பீர்கள் என நம்புகிறேன்”, என குறிப்பிட்டுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

முரளி

பர்த்டே ட்ரீட்: சச்சின் சாதனையை சமன் செய்த கோலி

காய்ச்சலிலும் காணொளியில் வந்த ஸ்டாலின்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel