வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது, விராட் கோலி இமாலய சாதனை ஒன்றை படைக்கப் போகிறார். அது என்ன?
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று விட்டார். தற்போது, டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடி வருகிறார். வங்கதேசம் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் விராட் கோலி இடம் பெற்றுள்ளார். இந்த டெஸ்ட் தொடரில் விராட் கோலி சச்சினின் அரிய சாதனையை முறியடிக்கவுள்ளார்.
சர்வதே கிரிக்கெட்டில் சச்சின் 27 ஆயிரம் ரன்கள் குவித்து முதலிடத்தில் உள்ளார். 226 டெஸ்ட் மற்றும் 396 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி சச்சின் இத்தகைய அபார சாதனை படைத்திருந்தார். விராட் கோலி 591 இன்னிங்ஸ்கள் விளையாடி தற்போது 26, 942 ரன்களை குவித்துள்ளார். சச்சினின் சாதனையை முறியடிக்க இன்னும் 58 ரன்களே தேவையாக உள்ளது.
இந்த சாதனையை விராட் கோலி எட்டும் பட்சத்தில் 600 இன்னிங்ஸ்களுக்குள் 27 ஆயிரம் ரன்களை கடந்த முதல் கிரிக்கெட்டர் என்ற பெருமை விராட் கோலிக்கு கிடைக்கும். 147 ஆண்டு கால கிரிக்கெட் வரலாற்றில் யாரும் படைக்காத சாதனை இதுவாகும். சச்சின் தவிர,ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் சங்கக்காரா ஆகியோரும் 27 ஆயிரம் ரன்களை கடந்துள்ளனர். அனைவருமே 600 இன்னிங்ஸ்களுக்கு மேல் ஆடிதான் இந்த ரன்களை அடித்துள்ளனர்.
வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி செப்டம்பர் 19 ஆம் தேதி சென்னையில் தொடங்குகிறது. மொத்தம் 2 டெஸ்ட் போட்டிகளில் 4 இன்னிங்ஸ்கள் உள்ளன. எனவே, மிக எளிதாக விராட் கோலி இந்த சாதனையை செய்து விடுவார். தற்போது, 35 வயதாகும் விராட் கோலி சர்வதேச ஆட்டங்களில் 80 சதங்களை பூர்த்தி செய்துள்ளார். சச்சின் 100 சதங்களுடன் முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
”சினிமாவில் தோற்றால் பேராசிரியராக வாழ்வேன்” : ஹிப்ஹாப் ஆதி
கேட்டர்பில்லர் நிறுவனத்துடன் ரூ.500 கோடி ஒப்பந்தம் கையெழுத்தானது!