கடைசிவரை ஆட்டமிழக்காமல் 82 ரன்கள் குவித்த விராட் கோலி பாகிஸ்தானை வீழ்த்தியதன் மூலம் இன்று ஐசிசி வெளியிட்ட டி20 பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் மீண்டும் டாப் 10க்குள் இடம்பிடித்துள்ளார்.
தடுமாறிய விராட் கோலி!
இந்திய அணியின் டி20 கேப்டன் பொறுப்பில் இருந்து கடந்த ஆண்டு விராட் கோலி விலகினார். அதுமுதல் அவரது அதிரடியான ஆட்டத்தில் தடுமாற்றம் ஏற்பட்டது.
கடந்த 2019ஆம் ஆண்டு முதல் சுமார் 1000 நாட்களுக்கும் மேலாக சர்வதேச போட்டிகளில் ஒரு சதம் கூட விராட் கோலி அடிக்கவில்லை.
இதனால் ஆசியக்கோப்பைக்கு முன்னதாக கடந்த ஆகஸ்ட் மாதம் ஐசிசி வெளியிட்ட டி20 பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் கோலி 35வது இடத்தைப் பிடித்தார். இது அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் பெரும் பின்னடைவாக பார்க்கப்பட்டது.
ஓய்வால் கிடைத்த முன்னேற்றம்!
அந்த நேரத்தில் ஒரு மாத ஓய்வுக்கு பிறகு கிரிக்கெட் களத்திற்கு புத்துணர்ச்சியுடன் திரும்பினார் விராட் கோலி.

அதன் விளைவாக ஆசியக்கோப்பையில் நீண்ட நாளாக ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த 71 வது சர்வதேச சதத்தை அடித்து தன் மேல் வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு கோலி முற்றுப்புள்ளி வைத்தார்.
இந்திய அணி ஆசிய கோப்பையை வெல்லவில்லை என்றாலும் அதிக ரன்கள் அடித்தவர் பட்டியலில் கோலி 2வது வது இடத்தை பிடித்தார்.
இதனால் ஆசியக்கோப்பைக்கு பிறகு ஐசிசி வெளியிட்ட தரவரிசை பட்டியலில் 20 இடங்கள் முன்னேறி 15வது இடம் பிடித்தார்.
மீண்டும் டாப் 10ல் விராட் கோலி!
அதன்பின்னர் கடந்த 23ம் தேதி ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற உலகக்கோப்பையில், பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் கடைசிவரை உறுதியாக நின்று 53 பந்துகளில் 82 ரன்கள் குவித்த கோலி, இந்திய அணியை வெற்றிபெற செய்தார்.

மேலும் அந்த போட்டியை தனது கிரிக்கெட் வாழ்க்கையில் சிறந்த இன்னிங்ஸ் என்று போட்டிக்கு பிறகு விராட் கோலி குறிப்பிட்டு இருந்தார்.
இந்நிலையில் டி20 பேட்மேன்களுக்கான தரவரிசை பட்டியலை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது. அதில் 15வது இடத்திலிருந்த விராட் கோலி, 635 புள்ளிகளுடன் 6 இடங்கள் முன்னேறி 9 ஆவது இடம் பிடித்துள்ளார்.
இதன்மூலம் மீண்டும் டாப் 10 பட்டியலில் இடம்பிடித்துள்ள கோலியை அவரது ரசிகர்கள் பாராட்டி சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
இந்த தரவரிசைப்பட்டியலில் பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். நியூசிலாந்து வீரர் டெவோன் கான்வே 2வது இடத்திலும், 3வது இடத்தில் இந்திய வீரர் சூர்யகுமார் யாதவும் இடம்பிடித்துள்ளனர்.
அதேவேளையில் கோலி மற்றும் சூர்யகுமார் தவிர ரோகித் சர்மா 16வது இடத்திலும், கே.எல். ராகுல் 18வது இடத்திலும் உள்ளனர்.
மேலும் டி20 அணிகளுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய அணி, 15,069 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது.
மோனிஷா
ராமேஸ்வரம் கடல்: தீர்த்தமா? கழிவுநீரா? நீதிபதிகள் காட்டம்!
T20 WorldCup 2022: தொடரும் சோகம்… அயர்லாந்து அணியிடம் அடிபணிந்த இங்கிலாந்து!