கணவர் உடல் நிலை பாதித்தாலோ அல்லது மனைவி உடல் நிலை பாதித்தாலோ விட்டு செல்லும் துணைகளை பற்றி கேள்வி பட்டிருப்போம். ஆனால், வினோத் காம்ப்ளியின் மனைவி இந்த விஷயத்தில் சற்று வேறுபட்டவர். எப்படி?
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வினோத் காம்ப்ளிக்கு சமீபத்தில் உடல் நிலை பாதிக்கப்பட்டது. அவரால் எழுந்து நிற்க கூட முடியவில்லை. இதையடுத்து, நண்பர்கள் அவரை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தனர். முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் வினோத் காம்ப்ளியின் சிகிச்ச்சைக்கு உதவினர். தற்போது அவர் உடல் நிலை தேறி வருகிறார். ஆல்கஹாலுக்கு அடிமையாக இருந்த வினோத்காம்ப்ளி 14 முறை சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டும் திருந்தவில்லை. தற்போதுதான் முற்றிலும் குடிநோயில் இருந்து அவர் மீண்டு விட்டதாக தெரிகிறது.
வினோத் காம்ப்ளிக்கு ஆன்ரியா ஹெவிட் என்ற மனைவி உண்டு. கடந்த 2006 ஆம் ஆண்டு இவர்களுக்கு திருமணம் நடந்தது. ஆன்ட்ரியா மிகச் சிறந்த மாடல் ஆவார். வினோத் காம்ப்ளியை குடியில் இருந்து மீட்க முடியாத நிலையில் அவரிடம் இருந்து பிரிந்து செல்ல ஆன்ட்ரியா ஹெவிட் விவகாரத்து கோரி மனு செய்து விட்டார். இந்த நிலையில்தான், வினோத் காம்ப்ளியின் உடல் நிலை கடுமையாக பாதிக்கப்பட்டது. கணவர் கையறு நிலையில், இருப்பதை கண்டதும் மனம் மாறிய ஆன்ட்ரியா விவாகரத்தை வாபஸ் வாங்கியுள்ளார்.
இது குறித்து , சூர்யான்ஷி பாண்டே என்ற ப்ரீலின்ஸ் செய்தியாளரிடத்தில் ஆன்ட்ரியா ஹெவிட் பாட்காஸ்டில் பேசியதாவது, ‘ ஒரு கட்டத்தில் நான் காம்ப்ளியை விட்டு பிரிந்து செல்ல முடிவு செய்து விட்டேன். ஆனால், அவர் ஹெல்ப்லெஸ் நிலையில் இருப்பதை கண்டு மனம் மாறினேன். அவர் ஒரு குழந்தை மாதிரி. உடல் நிலை பாதித்த நண்பர்களை கூட நான் விட்டு பிரிந்து சென்றதில்லை. அப்படியிருக்கையில், கணவரை விட்டு செல்ல மனம் வருமா? அப்படி, விட்டு சென்றிருந்தால் அவர் மருந்து சாப்பிட்டாரா? உணவு சாப்பிட்டாரா? உறங்கினரா? என்கிற கேள்விகள் எனக்குள் இருந்து கொண்டே இருந்திருக்கும். இப்போது, அவருக்கு நான் தேவை. அதனால், நான் அவரை விட்டு பிரிந்து செல்லும் முடிவை கைவிட்டேன்’ என்று தெரிவித்துள்ளார்.
வினோத் காம்ப்ளி தம்பதிக்கு ஜோஹானா என்ற மகளும் கிறிஸ்டியானா என்ற மகனும் உண்டு. வினோத் காம்ப்ளி இன்னும் முற்றிலும் குணமடையவில்லை. தானே அருகே பிவாண்டி என்ற இடத்திலுள்ள மது போதை மீட்பு மையத்தில் சிகிச்சையில் இருக்கிறார். ஆன்ட்ரியாவின் பேட்டியை கேட்ட பலரும் அவரை வெகுவாக பாராட்டி வருகின்றனர். உங்களின் அன்புக்காகவாவது காம்ப்ளி முற்றிலும் குணமடைந்து வருவார் என்று பலரும் ஆறுதல் கூறியுள்ளனர்.