தனது தகுதிநீக்கத்தை எதிர்த்து இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தொடர்ந்த வழக்கில் வரும் 16ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என சர்வதேச விளையாட்டு நீதிமன்றம் அறிவித்திருந்த நிலையில், இன்று (ஆகஸ்ட் 14) தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
பாரிஸ் 2024 ஒலிம்பிக் தொடரின் மகளிர் 50 கிலோ மல்யுத்தப் போட்டியில் பங்கேற்ற இந்திய வீராங்கனை வினேஷ் போகத் காலிறுதி, அரையிறுதியில் அபார வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
ஆனால் போட்டிக்கு முன்னதாக காலையில் நடத்தப்பட்ட பரிசோதனையில் 100 கிராம் எடை கூடுதலாக இருந்ததாக கூறி ஒலிம்பிக் கமிட்டி அவரை தகுதிநீக்கம் செய்தது.
இதனை எதிர்த்தும், தனக்கு வெள்ளிப்பதக்கம் வழங்க கோரியும் சர்வதேச விளையாட்டு நடுவர் நீதிமன்றத்தில் வினேஷ் போகத் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கில் வாதங்கள் அனைத்து நிறைவுற்ற நிலையில் தீர்ப்பு வரும் 16ஆம் தேதி அறிவிக்கப்படும் என மூன்றாவது முறையாக வழக்கை ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், வினேஷ் போகத்தின் மனுவை சர்வதேச விளையாட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்ததாக இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்பின் தலைவர் பி.டி. உஷா இன்று அதிர்ச்சி தகவலை அளித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், “100 கிராம் எடை என்ற மிகச்சிறிய எடை வேறுபாடு, ஒலிம்பிக்கின் தெளிவற்ற விதிகள் மற்றும் அவற்றின் விளக்கத்தில் பல கேள்விகளை எழுப்புகிறது.
இரு நாள்களின் இரண்டாவது நாளில் குறைந்த அளவிலான எடை மிகுதிக்காக ஒரு வீராங்கனையை முழுவதுமாக தகுதிநீக்கம் செய்வது ஆழமான ஆய்வுக்குட்படுத்த வேண்டியது என இந்திய ஒலிம்பிக் சங்கம் நம்புகிறது.
வினேஷ் போகத் விவகாரத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து விரைவில் முடிவு செய்யப்படும். விளையாட்டு வீரர்களின் குறிப்பாக பெண்கள் அனுபவிக்கும் உடலியல் மற்றும் உளவியல் அழுத்தங்களை இவை காட்டுகின்றன.
இந்திய ஒலிம்பிக் சங்கம் வினேஷ் போகத்துக்கு என்றும் ஆதரவாகத் துணை நிற்கும். அடுத்து மேற்கொள்ளக்கூடிய சட்டப்பூர்வ நடவடிக்கை குறித்து ஆராயப்படும்” என உஷா தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவி : குஷ்பு ராஜினாமா!
திராவிட சித்தாந்தம் நாட்டை பிளவுபடுத்த விரும்புகிறது: ஆளுநர் ரவி