50 கிலோ மல்யுத்த பிரிவின் இறுதிச் சுற்றிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள வினேஷ் போகத்திற்கு வெள்ளிப் பதக்கம் தர வேண்டும் என்று சச்சின் தனது எக்ஸ் தள பக்கத்தில் இன்று(ஆகஸ்ட் 9) பதிவிட்டுள்ளார். sachin tendulkar
பாரிஸில் நடந்து வரும் 33-வது ஒலிம்பிக் போட்டிகள் வருகிற ஆகஸ்ட் 11-ஆம் தேதி முடிவடையவிருக்கிறது. துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் மனு பாக்கர் இரண்டு வெண்கல பதக்கம், சரப்ஜோத் சிங் ஒரு வெண்கல பதக்கம், ஹாக்கி போட்டியில் வெண்கல பதக்கம் மற்றும் ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா வெள்ளிப் பதக்கமும் வென்றுள்ளனர். மொத்தமாக இந்தியா இதுவரை 5 பதக்கங்கள் வென்றுள்ளது.
இதற்கிடையில், கடந்த புதன்கிழமை பெண்களுக்கான 50 கிலோ பிரிவின் இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய இந்தியாவின் வினேஷ் போகத்தை 100 கிராம் எடை அதிகமாக இருந்ததால் ஒலிம்பிக் கமிட்டி அவரை தகுதி நீக்கம் செய்தது.
இதனால் மொத்த இந்திய தேசமும் அதிர்ச்சிக்குள்ளானது. இது குறித்து பாரிஸில் இருக்கும் இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர் பி.டி.உஷாவிடம் பேசிய பிரதமர் மோடி, வினேஷ் போகத்திற்குத் தேவையான அனைத்து உதவியும் செய்யுமாறு சொன்னார்.
தனது தகுதிநீக்கம் குறித்து விளையாட்டிற்கான நடுவர் நீதிமன்றத்தில் வினேஷ் போகத் மேல் முறையீடு செய்து, அந்த நீதிமன்றத்தின் தீர்ப்புக்காகக் காத்துக்கொண்டிருக்கிறார்.
இதற்கிடையில் தான் இந்த வருடத்துடன் மல்யுத்த விளையாட்டிலிருந்து ஓய்வு பெறுவதாகவும் தனது எக்ஸ் தளத்தில் அறிவித்தார்.
இந்நிலையில் சச்சின் டெண்டுல்கர் தனது எக்ஸ் தள பக்கத்தில் வினேஷுக்கு வெள்ளிப் பதக்கம் தரவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். sachin tendulkar
தகுதி நீக்கம் – விளையாட்டு உணர்வை மீறும் செயல்!
அதில் அவர், “ஒவ்வொரு விளையாட்டுக்கும் விதிகள் உள்ளன. அந்த விதிகள் சூழலுக்கு ஏற்றவாறு பார்க்கப்பட வேண்டும். சில சமயங்களில் மறுபரிசீலனை செய்யப்படலாம். வினேஷ் போகத் இறுதிப் போட்டிக்கு நியாயமான முறையில் விதிமுறைக்குப்பட்டுதான் தகுதி பெற்றார். ஆனால் எடை சற்று அதிகமாக இருந்த காரணத்தினால் அவரை தகுதிநீக்கம் செய்தது ஏற்றுக்கொள்ள முடியாதது. எனவே, தகுதியான அவரிடமிருந்து வெள்ளிப் பதக்கம் பறிக்கப்பட்டது நீதியையும், விளையாட்டு உணர்வையும் மீறும் செயலாக உள்ளது.
செயல்திறனை மேம்படுத்தும் ஊக்கமருந்துகளின் பயன்பாடு போன்ற நெறிமுறை மீறல்களுக்காக ஒரு தடகள வீரர் தகுதி நீக்கம் செய்யப்பட்டிருந்தால் அது ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும். ஆனால் வினேஷ் போகத் தனது எதிரிகளை நியாயமான முறையில் தோற்கடித்து முதல் இரண்டு இடங்களைப் பிடித்தார். வெள்ளிப் பதக்கத்துக்கு அவர் நிச்சயம் தகுதியானவர்.
விளையாட்டிற்கான நடுவர் மன்றத்தின் தீர்ப்புக்காக நாம் அனைவரும் காத்திருக்கும் வேளையில், வினேஷ்க்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும் என்று நம்புவோம், பிரார்த்தனை செய்வோம்” என சச்சின் தெரிவித்துள்ளார்.
– அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
4 நாட்கள் கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
உரிமம் இல்லாமல் இயங்கும் 5 ஸ்டார் ஹோட்டல் பார்கள்!
ஆம்ஸ்ட்ராங்க் கொலை : ரவுடி நாகேந்திரன் சிறையில் கைது!