2024 பாரிஸ் ஒலிம்பிக் தொடரில், மகளிர் பிரீஸ்டைல் 50 கிலோ மல்யுத்தப் பிரிவில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் முதல் நாளில் நடைபெற்ற முதல் சுற்றில், 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் இதே பிரிவில் தங்கம் வென்ற, 4 முறை உலக சாம்பியனான ஜப்பானின் யூ சுசாகியை வீழ்த்தினார்.
பின், அன்றைய தினத்தில் நடைபெற்ற காலிறுதி மற்றும் அரையிறுதி ஆட்டங்களில் அபாரமாக வென்ற வினேஷ் போகத், இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று சாதனை படைத்தார்.
இறுதிப்போட்டி 2வது நாளில் நடைபெற இருந்த நிலையில், 2 நாட்களுமே வீரர்/வீராங்கனைகளில் எடையை அளவிட வேண்டும் என்பது விதி.
முதல் நாளில் 49.9 கிலோ எடையுடன் இருந்த வினேஷ் போகத்தின் உடல் எடை அரையிறுதி ஆட்டத்திற்கு பின் 52.7 கிலோவாக அதிகரித்தது. இதை தொடர்ந்து, 2வது நாளின் எடை அளவீட்டின்போது அவர் எடை 50 கிலோவிற்கு கீழ் இருக்க வேண்டும் என்பதற்காக, இரவு முழுவதும் உணவு, தண்ணீர் இன்றி வினேஷ் போகத் ரன்னிங், ஸ்கிப்பிங் உள்ளிட்ட பயிற்சிகளுக்கு உட்படுத்தப்பட்டார்.
மேலும், எடையை குறைப்பதற்காக அவரது முடி, உடையின் அளவு உள்ளிட்டவையும் குறைக்கப்பட்டன. தொடர்ந்து, அவரின் உடலில் ரத்தத்தை எடுக்கவும் முயற்சிகள் நடைபெற்றன என தகவல் வெளியான நிலையில், அவரால் 2.6 கிலோ எடையை மட்டுமே குறைக்க முடிந்தது. இதனால், 2வது நாளின் எடை அளவீட்டின்போது வினேஷ் போகத் 50.1 கிலோ எடையுடன் இருந்ததால், அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
இது, 140 கோடி இந்தியர்களுக்கு பேரதிர்ச்சியாக அமைந்த நிலையில், இந்த முயற்சிகளால் நீரிழப்பை சந்தித்த வினேஷ் போகத், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவர் உடல்நிலை இயல்பு நிலைக்கு திரும்பிய பின், இந்திய ஒலிம்பிக் கமிட்டி தலைவர் பி.டி.உஷா அவரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
இந்நிலையில், தகுதி நீக்கம் குறித்து தனது முதல் கருத்தை தெரிவித்த வினேஷ் போகத், “பதக்கத்தை தவறவிட்டது என்பது மிகவும் கடினமாகத்தான் உள்ளது. ஆனால், அனைத்தும் விளையாட்டில் ஒரு பகுதி தான்”, என நம்பிக்கையுடன் பேசியிருந்தார்.
இந்நிலையில், தனது தகுதி நீக்கத்தை எதிர்த்து வினேஷ் போகத் விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளார். முன்னதாக, தனது தங்கப் பதக்கத்திற்கான போட்டியை மீண்டும் நடத்த வேண்டும் எனக் கோரிக்கை வைத்திருந்த அவர், பின்னர் வெள்ளிப் பதக்கத்தை பகிர்ந்தளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், இந்த கோரிக்கை மீது நீதிமன்றம் இன்று (ஆகஸ்ட் 8) இடைக்கால உத்தரவு வழங்கும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையில், வினேஷ் போகத் தகுதி நீக்கத்தை தொடர்ந்து, அரையிறுதியில் அவரிடம் தோல்வியடைந்த கியூபாவின் யுஸ்னெய்லிஸ் லோபஸ் இறுதிப் போட்டியில் விளையாட தகுதி பெற்றார். அப்போட்டியில், மெரிக்காவின் சாரா ஹில்டெபிரான்ட்டிடம் தோல்வியை சந்தித்து, லோபஸ் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். சாரா தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.
மேலும், முதல் சுற்றில் வினேஷ் போகத்திடம் தோல்வியடைந்த ஜப்பானின் யூ சுசாகி, வெண்கலப் பதக்கத்திற்கான போட்டிக்கு தகுதி பெற்று, அப்போட்டியில் உக்ரைனின் ஓக்சானா லிவாச்சை வீழ்த்தி வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். ஓக்சானா லிவாச் காலிறுதியில் வினேஷ் போகத்திடம் தோல்வியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
– மகிழ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பியூட்டி டிப்ஸ்: சரும வறட்சி… சமாளிப்பது எப்படி?
டாப் 10 நியூஸ்: செந்தில் பாலாஜி வழக்கில் குற்றச்சாட்டு பதிவு முதல் வினேஷ் போகத் ஓய்வு வரை!
கிச்சன் கீர்த்தனா : காளான் மலபாரி!
இதுக்கு தகுதி நீக்கம் பண்ணுவாங்கலா?: அப்டேட் குமாரு