Paris Olympics 2024 : வெள்ளிப்பதக்கம் கோரி வினேஷ் போகத் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீதான வழக்கில் சர்வதேச நடுவர் நீதிமன்றம் 3வது முறையாக தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது.
பாரிஸ் ஒலிம்பிக் மகளிர் 50 கிலோ எடை மல்யுத்த பிரிவில் போட்டியிட்ட இந்திய வீராங்கனை வினேஷ் போகத் இறுதிப் போட்டி வரை முன்னேறிய நிலையில், நிர்ணயிக்கப்பட்ட எடையை விட 100 கிராம் அதிகமாக இருந்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
இதனை எதிர்த்து சர்வதேச விளையாட்டு நடுவர் நீதிமன்றத்தில் வினேஷ் போகத் மேல்முறையீடு செய்தார்.
இதுதொடர்பாக நடந்த வழக்கு விசாரணையில், இறுதிப் போட்டிக்கு முந்தைய போட்டியின் போது வினேஷ் எடை சரியாக இருந்தது என்றும், அவர் வெள்ளிப் பதக்கம் பெற தகுதியானவர் என்றும் அவரது தரப்பில் ஆஜரான இந்தியாவின் மூத்த வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே வாதிட்டார்.
அதனைத்தொடர்ந்து சர்வதேச மல்யுத்த சங்கம், ஒலிம்பிக் கமிட்டியும் தங்களது வாதத்தை முன்வைத்தது.
இதனையடுத்து இரண்டு முறை தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக அறிவித்தபடி இன்று மீண்டும் நடுவர் நீதிமன்றத்தின் முன் வழக்கு வந்தது. அப்போது ‘தீர்ப்பு வரும் 16ஆம் தேதி இந்திய நேரப்படி இரவு 9.30க்குள் வழங்கப்படும்’ என்று கூறி நீதிபதி அன்னபெல் பென்னட் வழக்கை ஒத்திவைத்தார்.
வினேஷ் போகத்தின் வழக்கை இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள விளையாட்டு ரசிகர்கள் உற்று நோக்கி வரும் நிலையில் மூன்றாவது முறையாக தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
டிஜிட்டல் திண்ணை: உதயநிதி இல்லாத கேபினட் கூட்டம்! அமைச்சர்களுக்கு ஸ்டாலின் விடுத்த எச்சரிக்கை!