ஒலிம்பிக் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்துக்கு தங்கப்பதக்கம் வழங்கப்பட்டுள்ளது.
பாரிஸ் ஒலிம்பிக்கில் 50 கிலோ மல்யுத்த இறுதிப் போட்டிக்கு இந்திய வீராங்கனை வினேஷ் போகத் முன்னேறியிருந்தார். ஆனால், துரதிருஷ்டவசமாக போட்டி நடந்த தினத்தன்று 50 கிலோவை விட 100 கிராம் அதிகமாக இருந்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனால், மனமுடைந்து போன வினேஷ் மல்யுத்தத்துக்கு முழுக்குப் போடுவதாக அறிவித்தார்.
பின்னர், தாய்நாடு திரும்பிய அவருக்கு டெல்லியில் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து, வினேஷ் டெல்லியில் இருந்து சொந்த ஊரான ஹரியானா மாநிலத்திலுள்ள பலாலிக்கு வந்தார். அங்கு, பல கிராமங்களை சேர்ந்த மக்கள் அவரை காத்திருந்து வரவேற்றனர். உறவினர்களும் நண்பர்களும் கண்ணீர் மல்க வரவேற்பு அளித்தனர். அப்போது, கிராமத் தலைவர்கள் வினேசுக்கு தங்கப்பதக்கம் அணிவித்து அழகு பார்த்தனர்.
பின்னர், கிராம மக்களிடத்தில் உரையாற்றிய வினேஷ் போகத், உங்கள் ஆதவுக்கு தான் என்றும் கடமைப்பட்டிருப்பேன். இந்த கிராமத்தில் பிறந்த பெண்ணான என்னை விட ஒருத்தி இதே கிராமத்தில் இருந்து உருவாகி வருவாள். அவள் என்னை விட, மல்யுத்தத்தில் அதிகம் சாதிப்பாள். அவளுக்கு பயிற்சி அளிக்கும் பாக்கியம் எனக்கு கிடைக்கும் என்று நம்புகிறேன்.
வினேஷின் கணவர் சோம்வீர் கூறுகையில், “எனது மனைவி போட்டிக்கு முந்தைய தினத்தில் இரவு முழுவதும் எடையை குறைக்க போராடினார். இறுதி ஆட்டத்தில் விளையாடியிருந்தால் தங்கம் அல்லது வெள்ளி கண்டிப்பாக கிடைத்திருக்கும். ஆனால், கடவுள் எண்ணம் வேறு விதமாக இருந்து விட்டது. பதக்கத்தை தாய் நாட்டுக்கு கொண்டு வர முடியாத இந்த வேதனை வாழ்நாள் முழுவதும் இருக்கும்” என்று உருக்கமாக தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
என்.சி.சி சர்டிபிகேட் கிடையாது: மாணவி பாலியல் வன்கொடுமை… நாம் தமிழர் மாஜி கைது!!
‘கங்குவா’ vs ‘வேட்டையன்’: பாதிக்குமா வசூல்?