Vinesh Phogat: இந்தியாவின் முக்கிய மல்யுத்த வீராங்கனைகளில் ஒருவரான வினேஷ் போகத், 2024 பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் மகளிர் 50 கிலோ எடைப்பிரிவு மல்யுத்தப் போட்டியில் இறுதிப்போட்டிக்கு முன்னேறி பதக்கத்தை உறுதி செய்த நிலையில், 2வது நாளில் மேற்கொள்ளப்பட்ட எடை அளவீட்டில், நிர்ணயிக்கப்பட்ட எடையை விட 100 கிராம் அதிக எடை கொண்டதற்காக, போட்டியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டு பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தார்.
இதை தொடர்ந்து, தனக்கு வெள்ளிப் பதக்கத்தை பகிர்ந்தளிக்க வேண்டும் என வினேஷ் போகத் விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றத்தில் முறையிட்டபோதும், அதற்கு நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது.
பின் இந்தியா திரும்பிய வினேஷ் போகத், அவரது சகோதரருடன் ரக்சா பந்தன் பண்டிகையை கொண்டாடும் நெகிழ்ச்சியான வீடியோ இணையத்தில் வைரலானது.
இந்நிலையில், டெல்லி காவல்துறை மீது வினேஷ் போகத் ஒரு பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங், மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் ரீதியாக துன்புறுத்தல் அளித்ததாக, வினேஷ் போகத், சாக்ஷி மாலிக், பஜ்ரங் புனியா உள்ளிட்ட இந்தியாவின் முக்கிய மல்யுத்த வீரர், வீராங்கனைகள் அவருக்கு எதிராக சட்டப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த வழக்கில் பிரிஜ் பூஷன் சிங்கிற்கு எதிராக சாட்சி சொல்ல இருக்கும் வீராங்கனைகளுக்கு டெல்லி காவல்துறை பாதுகாப்பு வழங்கிவந்தது.
இப்படியான நிலையில், “பிரிஜ் பூஷன் சிங்கிற்கு எதிராக நீதிமன்றத்தில் சாட்சி சொல்ல உள்ள வீராங்கனைகளுக்கு வழங்கிவந்த பாதுகாப்பை டெல்லி காவல்துறை திரும்பப் பெற்றுள்ளது”, என ஒரு அதிர்ச்சி பதிவை எக்ஸ் தளத்தில் வெளியிட்டார்.
இது பெரும் சர்ச்சையான நிலையில், மல்யுத்த வீராங்கனைகளுக்கு வழங்கப்பட்டுவரும் பாதுகாப்பு திரும்பப் பெறப்படவில்லை என டெல்லி காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.
“பாதுகாப்பில் உள்ளவர்கள் ஹரியானவை இருப்பிடமாக கொண்டுள்ளதால், அவர்களை பாதுகாக்கும் பொறுப்பை ஹரியானா காவல்துறையிடம் ஒப்படைக்க திட்டமிடப்பட்டது. ஆனால், இதை தவறுதலாக புரிந்துகொண்ட பாதுகாப்பு அதிகாரிகள் தாமதமாக பணியில் இணைந்தனர். ஆனால், பிரச்சனைக்கு தற்போது தீர்வு காணப்பட்டுவிட்டது. அவர்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு தொடர்கிறது”, என புது டெல்லி துணை காவல் ஆணையர் விளக்கம் அளித்துள்ளார்.
– மகிழ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிருஷ்ணகிரி பாலியல் சம்பவ குற்றவாளி சிவராமன் உயிரிழப்பு!
விசா இன்றி இலங்கைக்குச் சுற்றுலா செல்லலாம்!
டாப் 10 நியூஸ் : முதல் தேசிய விண்வெளி தினம் முதல் கொட்டுக்காளி, வாழை ரிலீஸ் வரை!
ஹெல்த் டிப்ஸ்: வெளியே கிளம்பும்போது வயிற்றைப் புரட்டுகிறதா… காரணம் இதுதான்!