விஜய் ஹசாரே தொடரில் தொடர்ச்சியாக 5 சதம் அடித்து தமிழக வீரர் ஜெகதீசன் நாராயண் உலக சாதனை படைத்துள்ளார்.
டெல்லி, கொல்கத்தா, பெங்களூரு, மும்பை, ராஞ்சி ஆகிய நகரங்களில் நடைபெற்றுவரும் விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒருநாள் கிரிக்கெட் தொடர் கடந்த 12ஆம் தேதி தொடங்கியது.
டிசம்பர் 2ஆம் தேதி வரை நடைபெறும் இப்போட்டியில் 38 அணிகள் பங்கேற்றுள்ளன.
இதில் கலந்து கொண்டுள்ள 38 அணிகள் 5 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதிவருகின்றன.
அதன்படி, இன்றைய (நவம்பர் 21) லீக் ஆட்டம் ஒன்றில் தமிழ்நாடு – அருணாச்சல் பிரதேச அணிகள் மோதி வருகின்றன.
இதில் இதுவரை 5 ஆட்டங்களில் ஆடியுள்ள தமிழக அணி 4இல் வெற்றி பெற்றுள்ளது. 1 ஆட்டம் மழையால் முடிவு இல்லாமல் போனது. இதன் மூலம் தமிழக அணி புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

இது ஒருபுறமிருக்க மறுபுறம், இந்த விஜய் ஹசாரே தொடரில் தமிழக அணி கேப்டன் ஜெகதீசன் நாராயண் தொடர்ச்சியாக 5 சதம் எடுத்து உலக சாதனை படைத்துள்ளார்.
ஆந்திராவுக்கு எதிரான போட்டியில் 114 ரன்களும், சட்டீஸ்கர் அணிக்கு எதிரான போட்டியில் 107 ரன்களும், கோவா அணிக்கு எதிராக 168 ரன்களும், ஹரியானாவுக்கு எதிரான போட்டியில் 128 ரன்களும் எடுத்தார்.
இந்த நிலையில், இன்று நடைபெற்று வரும் அருணாச்சல பிரதேசத்துக்கு எதிரான போட்டியில் ஜெகதீசன் 200 ரன்கள் (தற்போது வரை) எடுத்து சாதனை படைத்துள்ளார். இதன்மூலம், தொடர்ச்சியாக அவர் 5 சதங்களைப் பதிவு செய்து உலக சாதனை படைத்துள்ளார்.
லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக 5 சதங்கள் எடுத்த முதல் வீரர் என்கிற உலக சாதனையை ஜெகதீசன் படைத்துள்ளார்.
விஜய் ஹசாரே போட்டியிலும் தொடர்ச்சியாக 5 சதங்கள் எடுத்த முதல் வீரர் என்கிற பெருமையையும் அடைந்துள்ளார்.

இதற்கு முன்பு, இலங்கை முன்னாள் வீரர் சங்கக்கரா, கர்நாடக வீரர் தேவ்தத் படிக்கல், தென்னாப்பிரிக்கா வீரர் பீட்டர்சன் ஆகியோர் தொடர்ந்து 4 சதங்கள் அடித்திருந்தனர்.
இதில் சங்கக்கரா ஒருநாள் தொடரில் தொடர்ச்சியாக 4 சதங்களும், தேவ்தத் படிக்கல் தொடர்ச்சியாக விஜய் ஹசாரே கோப்பையில் 4 சதங்களும் எடுத்திருந்தனர்.
தற்போது அந்த சாதனைகளை ஜெகதீசன் முறியடித்துள்ளார். தற்போதுவரை இந்திய அணி, 32.5 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 324 ரன்கள் எடுத்துள்ளது.
இதில் ஜெகதீசன் 114 பந்துகளில் 9 சிக்ஸர், 19 பவுண்டரிகளுடன் 200 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளார்.
அதுபோல், மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான சாய் சுதர்சன், 83 பந்துகளில் 117 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார். இன்றைய போட்டியின் மூலம் சாய் சுதர்சனும் இந்த தொடரில் மூன்று சதங்களை அடித்துள்ளார்.
ஜெ.பிரகாஷ்
“பட்டினியின்மை எனும் இலக்கு எட்டப்பட்டுள்ளது” – மு.க.ஸ்டாலின்