கடந்த நவம்பர் 12ஆம் தேதி துவங்கிய விஜய் ஹசாரே கோப்பை, லீக், காலிறுதி, அரையிறுதி என அனைத்தும் நடந்து முடிந்து, இறுதிப் போட்டி மட்டுமே எஞ்சியிருந்த நிலையில், இன்று(டிசம்பர் 2) துவங்கியுள்ள இறுதிப் போட்டியில் மகாராஷ்டிரா, சௌராஷ்டிரா ஆகிய அணிகள் விளையாடி வருகின்றன.
இப்போட்டியில் டாஸ் வென்ற சௌராஷ்டிரா அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
அசத்திய ருதுராஜ் கெய்க்வாட்
இப்போட்டியில் முதலில் களமிறங்கிய மகாராஷ்டிரா அணியில் ஓப்பனர் பவன் ஷா 4 (13), பச்சவ் 27 (59), பௌன் 16 (22)ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால், மற்றொரு ஓப்பனர் ருதுராஜ் கெய்க்வாட் நிதானமாக விளையாட வேண்டிய நெருக்கடி ஏற்பட்டது.
இதனால், ருதுராஜ் முதல் 61பந்துகளில் 19ரன்களை மட்டுமே சேர்த்து, நிதானமாக விளையாடி வந்தார்.
ருதுராஜ் கெய்க்வாட்டும் நெருக்கடி காரணமாக ஆட்டமிழந்துவிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் அதிரடியாக விளையாடி ரன்களை குவிக்க ஆரம்பித்தார்.
முதல் 61பந்துகள் நிதானமாக விளையாடிய இவர், அடுத்த 64பந்துகளில் 83ரன்களை குவித்து அசத்தினார்.
இறுதியில் 131பந்துகளில் 7பவுண்டரி, 4சிக்ஸர்கள் உட்பட 108ரன்கள் எடுத்தார்.

இதனைத் தொடர்ந்து அஜிம் ஹாஜி 37 (33) அதிரடியாக விளையாடியதால், ஸ்கோர் 200 ரன்களை தொட்டது.
தற்போது 44 ஓவர்கள் முடிவில் மகாராஷ்டிரா அணி 206/5 ரன்களை சேர்த்து விளையாடி வருகிறது.
விஜய் ஹசாரே கோப்பை தொடரில் ருதுராஜ் கெய்க்வாட் கடைசி 10 இன்னிங்ஸ்களில் 8 சதங்களை விளாசி, லிஸ்ட் ஏ போட்டிகளில் 10 இன்னிங்ஸ்களில் இந்த சாதனையை படைத்த ஒரே வீரர் என்ற வரலாற்று சாதனையை படைத்துள்ளார்.
அதேபோல், விஜய் ஹசாரே கோப்பை தொடரில் காலியிறுதியில் இரட்டை சதம், அரையிறுதி, இறுதிப் போட்டியில் சதம் அடித்த முதல் வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார் ருதுராஜ் கெய்க்வாட்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
டான்செட்(TANCET-2023) தேர்வுகள்: அண்ணா பல்கலை முக்கிய அறிவிப்பு!
இஸ்ரோ விஞ்ஞானி நம்பி வழக்கு: உச்ச நீதிமன்றம் புதிய உத்தரவு!