அமெரிக்காவை சேர்ந்தவர் நீச்சல் வீரர் கேரி ஹால் ஜூனியர். இவர் 1996, 2000, 2004 என மூன்று ஒலிம்பிக் போட்டிகளில் முறையே 5 தங்க பதக்கம், 3 வெள்ளி 2 வெண்கல பதக்கங்களை வென்றிருந்தார்.
அதோடு, உலக சாம்பியன்ஷிப்பிலும் 6 பதக்கங்களை கைப்பற்றியிருந்தார். லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலுள்ள இவரின் வீட்டில் இந்த பதக்கங்கள் அலங்கரிந்து கொண்டிருந்தன. இந்த நிலையில், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஏற்பட்ட காட்டு தீ விபத்தில் கேரி வீட்டில் இருந்த அனைத்து பதக்கங்களும் தீயில் எரிந்து போயின. இதனால், பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளார் கேரி.
இது குறிந்து கேரி கூறுகையில், ‘நான் என் மகளுடன் தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தேன். அப்போது, எனது வீட்டின் பின்புறம் திடீரென்று புகை மூட்டம் வருவதை பார்த்தேன். தீப்பிழம்புகள் வெடித்து, வீடுகள் மீது விழுந்தன. இதையடுத்து, சட்டென்று சுதாரித்து வீட்டை விட்டு வெளியே ஓடினேன். எதையும் பற்றி யோசிக்க முடியவில்லை. இப்போது, அனைவரும் பதக்கங்கள் எரிந்து போனதா? என்று கேட்கிறார்கள். ஆம், அத்தனையும் எரிந்து விட்டது.
பதக்கங்கள் இல்லாமல் நான் வாழ முடியாது. அத்தனை புகைப்படங்களும் எரிந்து போயின. உயிருக்காக ஓடும் போது, அவற்றை என்னால் காப்பாற்ற முடியவில்லை. உலகம் அழிந்தால் எப்படியிருக்கும் ,அதை விட ஆயிரம் மடங்கு மோசமானதை நான் நேரில் கண்டேன். மக்கள் கார்களை விட்டு விட்டு இறங்கி ஓடினார்கள். என் காதலி கூட காருக்குள் புகையில் சிக்கிக் கொண்டார். என்னால் நான் வளர்ந்து வந்த செல்ல நாயை மட்டுமே காப்பாற்ற முடிந்தது ‘ என்கிறார்.
லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுதீயில் பல செலிபிரட்டிகளின் வீடுகளும் எரிந்து போயுள்ளன. ஏராளமான வனவிலங்குகளும் பலியாகியுள்ளன.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
22 வருஷ இழுத்தடிப்பு… மா.சுவுக்கு நிம்மதி பெருமூச்சு!
பெண்களை திரும்பி பார்த்தால்…: ஸ்டாலின் கொண்டு வந்த புதிய சட்டம் : தண்டனைகள் என்னென்ன?