US Open 2024: பட்டம் வென்று ஜன்னிக் சின்னர், அரியானா சபலென்கா சாதனை!

Published On:

| By Selvam

2024 யூ.எஸ் ஓபன் தொடர் கடந்த ஆகஸ்ட் 26 அன்று துவங்கி செப்டம்பர் 8 வரை நடைபெற்றது. இந்த தொடரில், ஆடவர் ஒற்றையர் பிரிவில் 23 வயதேயான உலகின் நம்பர் 1 டென்னிஸ் வீரர் ஜன்னிக் சின்னர் பட்டம் வென்று அசத்தியுள்ளார்.

இறுதிப்போட்டியில், இத்தாலிய டென்னிஸ் வீரர் ஜன்னிக் சின்னர் அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸை எதிர்கொண்டார். இந்த போட்டியில் பிரிட்ஸிற்கு துளியும் வாய்ப்பு அளிக்காத சின்னர் 6-3, 6-4, 7-5 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

இதன்மூலம், 2024 யூ.எஸ் ஓபன் பட்டத்தை வென்ற ஜன்னிக் சின்னர், இந்த பட்டத்தை வெல்லும் முதல் இத்தாலிய வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.

இது ஜன்னிக் சின்னர் வெல்லும் 2வது கிராண்ட் ஸ்லாம் பட்டம் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக இந்த ஆண்டின் துவக்கத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபன் தொடரில் டேனியல் மெட்வெடேவ்வை வீழ்த்தி, ஜன்னிக் சின்னர் சாம்பியன் பட்டம் வென்றிருந்தார்.

முன்னதாக, நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில், அமெரிக்க வீராங்கனை ஜெசிகா பெகுலாவை பெலாரஸ் வீராங்கனை அரியானா சபலென்கா எதிர்கொண்டார். இந்த போட்டியில், ஒருவருக்கு ஒருவர் கடுமையான நெருக்கடி கொடுத்தபோதும், 7-5, 7-5 என அரியானா சபலென்கா வெற்றி பெற்றார்.

இது அரியானா சபலென்கா 3வது கிராண்ட் ஸ்லாம் பட்டம் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, சபலென்காவும் 2024 ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை வென்றிருந்தார்.

தனது வெற்றி குறித்து பேசிய அரியானா சபலென்கா, “சொல்ல வார்த்தைகள் இல்லை. நிறைய முறை கோப்பைக்கு மிக அருகில் வந்து தோல்வியை சந்தித்துள்ளேன். ஆனால், இம்முறை அதை கைப்பற்றி விட்டேன். உங்கள் கனவுகளை ஒருபோதும் விட்டுக்கொடுக்காதீர்கள். அதை நோக்கி கடுமையாக உழையுங்கள்’, என தெரிவித்துள்ளார்.

2023 யூ.எஸ் ஓபனில் இறுதிப்போட்டி வரை முன்னேறி தோல்வியடைந்த அரியானா சபலென்கா, 2021, 2022 யூ.எஸ் ஓபன் தொடர்களில் அரையிறுதியில் வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

– மகிழ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 1,500 கிலோ கெட்டுப்போன இறைச்சி… பொதுமக்கள் ஷாக்!

“வருங்கால தமிழகத்தை வழிநடத்தக்கூடியவர் உதயநிதி” – அமைச்சர் மூர்த்தி

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share