“என் கடைசி மூச்சு உள்ளவரை சூர்ய குமார் யாதவை நான் மறக்க மாட்டேன்” என முன்னாள் இந்திய வீரர் இர்பான் பதான் கூறியுள்ளார்.
2024ஆம் ஆண்டிற்கான டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி ஜூன் 29ஆம் தேதி நடைபெற்றது. தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான இந்த போட்டியில் 7 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.
மேலும், 2007ஆம் ஆண்டிற்கு பிறகு 2வது முறையாக இந்திய அணி டி20 உலகக்கோப்பை சாம்பியன் பட்டத்தை வென்றது. இதற்கு இந்திய அணிக்கு பலரும் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்து வந்தனர்.
இந்த இறுதிப்போட்டியில் இந்திய அணி 176 ரன்கள் எடுத்து, தென்னாப்பிரிக்கா 177 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது. ஆட்டத்தின் ஒரு கட்டத்தில் தென்னாப்பிரிக்கா அணி 4 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது அந்த அணிக்கு 24 பந்தில் 26 ரன்கள் மட்டுமே தேவையாக இருந்தது.
ஆனால், ஹென்ரிச் கிளாசெனின் விக்கெட்டை பாண்டியா தூக்கியது, 18வது ஓவரில் பும்ரா ஒரு விக்கெட் எடுத்து 2 ரன்கள் மட்டுமே வழங்கியது, கடைசி ஓவரின் முதல் பந்தில் டேவிட் மில்லர் தூக்கியடித்த பந்தை எல்லைக்கோடு அருகே மிக லாவகமாக சூர்யகுமார் யாதவ் பிடித்தது என போட்டியில் பல திருப்பங்கள் நடைபெற்றது.
இதனால், 20 ஓவர் முடிவில் தென்னாப்பிரிக்க அணி 8 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. இதில், சூர்யகுமார் யாதவ் பிடித்த டேவிட் மில்லரின் கேட்ச் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தது.
இதற்கு பலரும் சூர்யகுமார் யாதவை பாராட்டி வருகின்றனர். அந்தவகையில், முன்னாள் இந்திய வீரர் இர்பான் பதானும் சூர்யகுமார் யாதவை பாராட்டி உள்ளார். இதுகுறித்து, “என் கடைசி மூச்சு உள்ளவரை சூர்யகுமார் யாதவையும், அவர் பிடித்த அந்த கேட்சையும் நான் மறக்க மாட்டேன்.
இந்த கண்ணீர் நான் சோகமாக இருப்பதாலோ அல்லது வாழ்க்கையில் நடந்த துயர சம்பவங்களாலோ வந்தவை அல்ல. இவை அனைத்து இந்திய அணி வெற்றி பெற்றதால் வந்த மகிழ்ச்சியான கண்ணீர் துளிகள்” என இர்பான் பதான் கூறினார்.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
அமலுக்கு வந்த 3 புதிய குற்றவியல் சட்டங்கள்!
உபரி ஆசிரியர்களை பணிநிரவல் செய்ய பள்ளிக்கல்வித் துறையின் புதிய உத்தரவு!