டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் 16 கள நடுவர்கள் கொண்ட பட்டியலில் இந்திய நடுவரான (அம்பயர்) நிதின் மேனன் இடம்பெற்றுள்ளார்.
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 16ம் தேதி முதல் நவம்பர் 13ஆம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ளது. டி20 உலகக் கோப்பைப் போட்டியின் பிரதான சுற்றுக்கு (சூப்பர் 12) ஆஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், வங்கதேசம், இங்கிலாந்து, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா ஆகிய 8 நாடுகளும் நேரடியாகத் தகுதி பெற்றுள்ளன. மீதமுள்ள 4 அணிகள் முதல் சுற்றில் போட்டியிட்டு அதன் வழியாக சூப்பர் 12 சுற்றுக்குத் தேர்வாகவுள்ளன.
இந்த தொடர் ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன், கிலாங், ஹோபர்ட், மெல்போர்ன், சிட்னி உள்ளிட்ட நகரங்களில் நடைபெறவுள்ளது. இவ்விடங்களில் மொத்தம் 45 போட்டிகள் நடைபெற உள்ளன. இதில், நவம்பர் 9 மற்றும் 10ம் தேதிகளில் நடைபெறும் அரையிறுதி ஆட்டங்கள் சிட்னி, அடிலெய்டு ஆகிய மைதானங்களிலும், இறுதிச்சுற்று ஆட்டம் மெல்போர்ன் மைதானத்திலும் நடைபெற இருக்கிறது.

இதில் கலந்துகொள்வதற்காக இந்திய அணி நாளை (அக்டோபர் 6) ஆஸ்திரேலியா புறப்பட்டுச் செல்கிறது. டி-20 உலக கோப்பையில் பங்கேற்க செல்லும் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியில் விராட் கோலி, கே.எல்.ராகுல், சூர்யகுமார் யாதவ், புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங், ஹர்ஷல் பட்டேல் உள்ளிட்ட வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். ஆஸ்திரேலிய பெர்த் மைதானத்தில் இந்திய அணி, அக்டோபர் 13ம் தேதி வரை பயிற்சி முகாம் நடைபெற இருக்கிறது.
இந்த நிலையில் டி20 உலகக் கோப்பை தொடருக்கான நடுவர்களை ஐசிசி இன்று (அக்டோபர் 5) வெளியிட்டுள்ளது.
16 பேர் கொண்ட நடுவர்கள் பட்டியலில் கள நடுவர்களாக (ground umpire) அட்ரியன் ஹோல்ட்ஸ்டாக், அலீம் டர், ஆஸான் ராஸா, கிறிஸ்டோபர் பிரெளன், கிறிஸ்டோபர் கஃபானி, ஜோயல் வில்சன், குமார தர்மசேனா, லேங்டன் ருசர், மரைஸ் எராஸ்மஸ், மைக்கேல் கவ், நிதின் மேனன், பால் ரீஃபல், பால் வில்சன், ரிச்சர்ட் இல்லிங்வொர்த், ரிச்சர்ட் கெட்டில்பாரோ, ராட்னி டக்கர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்த16 நடுவர்களில் நிதின் மேனன் மட்டுமே இந்தியர் ஆவார்.
இதுதவிர 4 ஆட்ட நடுவர்களும் அறிவிக்கப்பட்டுள்ளார்கள். அதில், ஆண்ட்ரு பைகிராஃப்ட், கிறிஸ்டோபர் பிராட், டேவிட் பூன், ரஞ்சன் மதுகலே ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
ஜெ.பிரகாஷ்
டி20 உலகக் கோப்பை: மெளனத்தைக் கலைத்த பும்ரா!
3வது டி20: ரோசாவ்வின் ஆக்ரோசமான சதம்… தோல்வியை தழுவிய இந்தியா!