பாகிஸ்தான் வீரருக்கு எதிராக ஜெய் ஸ்ரீராம் கோஷம்: உதயநிதி கண்டனம்!

Published On:

| By Selvam

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் முகமது ரிஸ்வான் ஆட்டமிழந்தபோது ஜெய் ஸ்ரீ ராம் என்று ரசிகர்கள் கோஷமிட்டதற்கு தமிழக விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

உலக கோப்பை ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் நேற்று இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. குஜராத் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 42.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 191 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 30.3 ஓவரில்  7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் 49 ரன்கள் எடுத்திருந்தபோது பும்ரா பந்துவீச்சில் போல்ட் ஆனார். இதனால் அரைசதம் விளாச முடியவில்லையே என்ற ஏமாற்றத்துடன் பெவிலியன் திரும்பிய முகமது ரிஸ்வானை பார்த்து அங்கிருந்த ரசிகர்கள் ‘ஜெய் ஸ்ரீ ராம்…ஜெய் ஸ்ரீராம்’ என்று கோஷமிட்டனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவியது.

உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோவை பகிர்ந்து, ரசிகர்களின் செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “இந்தியா அதன் விளையாட்டு திறன் மற்றும் விருந்தோம்பலுக்கு புகழ்பெற்றது. அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் பாகிஸ்தான் வீரர்களை ரசிகர்கள் அணுகிய விதம் ஏற்றுக்கொள்ள முடியாதது. விளையாட்டு என்பது நாடுகளுக்கு இடையேயான ஒருங்கிணைக்கும் சக்தியாக இருக்க வேண்டும். உண்மையான சகோதரத்துவத்தை வளர்க்க வேண்டும். விளையாட்டை வெறுப்பு பரப்பும் கருவியாக பயன்படுத்துவது கண்டிக்கத்தக்கது” என்று தெரிவித்துள்ளார்

செல்வம்

வாட்ஸ் அப்பில் மின்னம்பலம் செய்திகளை படிக்க… இங்கே க்ளிக் செய்யவும்!

அதிகரிக்கும் என்கவுண்டர்: தடுத்து நிறுத்த மார்க்சிஸ்ட் தீர்மானம்!

மாமல்லபுரத்தில் சைக்கிள் பேரணி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel