19 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் டி20 உலகக்கோப்பையில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.
தென்னாப்பிரிக்காவில் 16 அணிகள் பங்கேற்ற 19 வயதுக்கு உட்பட்டோருக்கான மகளிர் டி20 உலகக் கோப்பை கடந்த ஜனவரி 14 தேதி தொடங்கியது.
லீக் சுற்றுகளில் அதிரடி காட்டிய இந்திய அணி அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்று இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது. மற்றொரு அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை 3 ரன் வித்தியாசத்தில் வென்று, இங்கிலாந்து அணி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.
இந்நிலையில், 19 வயதுக்கு உட்பட்டோருக்கான மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி இன்று (ஜனவரி 29) நடைபெற்றது.
அதில் இங்கிலாந்து – இந்தியா அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
இதனால் முதலில் பேட்டிங் செய்யக் களமிறங்கிய இங்கிலாந்து மகளிர் அணி இந்திய அணியின் பந்துவீச்சைத் தாக்குப்பிடிக்க முடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து நிலைகுலைந்தது.
17.1 ஓவரில் வெறும் 68 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இங்கிலாந்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆட்டமிழந்தது. இதனால் 69 ரன்கள் மட்டுமே எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இந்திய மகளிர் அணி களமிறங்கியது.
தொடக்கம் முதலே நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய வீராங்கனைகள் 14 ஓவரில் 69 ரன்களை எடுத்து இலக்கை அடைந்தது.
இதனால் 7 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை அபாரமாக வீழ்த்திய இந்திய அணி 19வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் டி20 உலகக் கோப்பை சாம்பியன் பட்டத்தை வென்றது.
இதனையடுத்து டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய U19 மகளிர் அணிக்கு 5 கோடி ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்படும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது.
இதற்காகப் பிப்ரவரி 7 ஆம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி விளையாட்டு மைதானத்தில் பாராட்டு விழா நடைபெறும் என பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா அறிவித்துள்ளார்.
மோனிஷா
ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ்: 10வது முறை சாம்பியன்!
பெரியார் சிலை அகற்றிய அதிகாரிகளுக்கு எதிராக அதிரடி உத்தரவு!